புனித பூமியிலிருந்து பத்து இலட்சம் செபமாலைகள்
பானமா நாட்டில், சனவரி 22, இச்செவ்வாயன்று தொடங்கியுள்ள 34வது உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் உலக இளையோர்க்குப் பரிசாக அளிப்பதற்கென, புனித பூமியிலிருந்து பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட செபமாலைகள் அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளன.
துன்புறும் மற்றும் தேவையில் இருக்கும் திருஅவைகளுக்கு உதவுகின்ற பாப்பிறை அமைப்பு, “AveJmj” என்ற திட்டத்தின்கீழ், திருக்கல்லறை அமைப்பின் நிதி ஆதரவுடன், பெத்லகேம் இளம் தொழிலாளர்களைக் கொண்டு, ஆயிரக்கணக்கான செபமாலைகளைத் தயாரித்தது.
பெத்லகேமில், வாரத்திற்கு, 2,220 செபமாலைகள் என, 800 தொழிலாளர்களால், பத்து இலட்சத்திற்கு அதிகமான செபமாலைகள் தயாரிக்கப்பட்டன. மூன்று செபமாலைகள், திருத்தந்தையின் படத்துடன் ஒரு பளிங்குநிறத் தாளில் வைத்து சுற்றப்பட்டு, இளையோர் ஒவ்வொருவருக்கும் அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்றில் ஒன்றைத் தாங்கள் வைத்துக்கொண்டு, மற்றொன்றை அதைப் பெறமால் இருப்பவர்களுக்கு அளிக்கவும், மூன்றாவதை தங்களுடன் வீடுகளுக்கு எடுத்துச் சென்று, தங்கள் வயதுடைய இளையோர்க்கு அளிக்கவும் பரிந்துரைக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இம்முயற்சி பற்றி கருத்து தெரிவித்த பானமா பேராயர், José Domingo Ulloa Mendieta அவர்கள், செபம் செய்வதற்குத் தூண்டுதலாயும், புனித பூமியிலுள்ள நம் துன்புறும் சகோதரர் சகோதரிகளுக்கு உதவுவதாயும், இம்முயற்சி உள்ளது என்று கூறினார்.
Comments are closed.