வத்திக்கானில் முதல் விளையாட்டு கழகம்

விளையாட்டு, சமுதாயத்தின் மற்றும் தற்போதைய கலாச்சாரத்தின் அடிப்படை கூறாக இருப்பதால், வத்திக்கான் விளையாட்டு கழகம், ஓர் அமைப்பாகவும், அனுபவம் தரவல்லதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது என்று, கர்தினால் ஜான்பிராங்கோ ரவாசி அவர்கள் தெரிவித்தார்.

இத்தாலிய தேசிய ஒலிம்பிக் கழகத்தோடு ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, வத்திக்கானில் முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ள கழகம் குறித்து, செய்தியாளர் கூட்டத்தில் சனவரி 10, இவ்வியாழனன்று விளக்கிக் கூறிய, திருப்பீட கலாச்சார அவைத் தலைவரான, கர்தினால் ரவாசி அவர்கள், விளையாட்டுகள், சமய உணர்வுக்குச் சான்றுகளாய் விளங்க முடியும் என்றார்.

விளையாட்டுகளின்போது இடம்பெறும் கசப்பான நிகழ்வுகள் குறித்து எச்சரித்த    கர்தினால் ரவாசி அவர்கள், விளையாட்டு, உலகளாவிய மொழி என்றும், உலகெங்கும் இம்மொழியைப் பேசுவோருடன், திருப்பீடம் மற்றும், வத்திக்கான், தனது குரலையும் இணைக்க விரும்புகின்றது என்றும் கூறினார்.

வத்திக்கான் விளையாட்டு கழகம், பன்னாட்டு ஒலிம்பிக் கழகத்தோடும் தொடர்பு கொண்டிருக்கின்றது எனவும், விசுவாசத்திலும், வத்திக்கானிலும், திருத்தந்தையின் இதயத்திலும், விளையாட்டு ஓர் அழகான இடத்தைக் கொண்டிருக்கின்றது எனவும், கர்தினால் ரவாசி அவர்கள் கூறினார்.

இத்தாலிய தேசிய ஒலிம்பிக் கழகத் (CONI) தலைவரும், பன்னாட்டு ஒலிம்பிக் கழக (COI) உறுப்பினருமான Giovanni Malago, இத்தாலிய மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் கழகத் தலைவர் Luca Pancalli, திருப்பீட கலாச்சார அவையின் நேரடி பொதுச் செயலரும், வத்திக்கான் விளையாட்டு கழகத் தலைவருமான Melchor Jose Sanchez de Toca y Alameda, வத்திக்கான் விளையாட்டு கழக பிரதிநிதி Michela Ciprietti, திருப்பீட செய்தித் தொடர்பக இடைக்கால இயக்குனர் ஜிசோத்தி ஆகியோரும், இந்தச் செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Comments are closed.