நற்செய்தி வாசக மறையுரை( ஜனவரி 17) பொதுக்காலம் முதல் வாரம்

பரிவுள்ள இயேசு

நிகழ்வு

கேரள மாநிலம், புனலூர் மாவட்டத்திலுள்ள ஒரு மலைக்கிராமம் முக்கூடு. இக்கிராமத்தில் பிறந்தவர்தான் ‘தொழுநோயாளர்களின் தோழி’ என அறியப்படுகின்ற அருட்சகோதரி ஜெயின் மேரி என்பவர்.

தன்னுடைய பெற்றோருக்கு பதினான்கு பிள்ளைகளில் (ஏழு சகோதரர்கள், ஆறு சகோதரிகள் இவருடன் பிறந்தவர்கள்) ஒருவராகப் பிறந்த ஜெயின் மேரிக்கு பத்தொன்பது வயது நடக்கும்போது அருட்சகோதரியாக மாறவேண்டும் என்றொரு எண்ணம் ஏற்பட்டது. அதன்படி இவர் கும்பகோணத்திற்கு வந்து பயிற்சிகள் பெற்று, அருட்சகோதரியாக மாறினார். இதற்குப் பின்பு செவிலியருக்கான படிப்பைப் படித்து, ஏழை எளிய மக்களுக்கு மத்தியில் மருத்துவப்பணி செய்ய விரும்பினார்.

அதன்படி இவர் செவிலியருக்கான படிப்பைப் படித்து முடித்துவிட்டு, ஒருநாள் கும்பகோணத்தில் இருக்கக்கூடிய ‘தொழுநோயாளர் மறுவாழ்வு மையத்திற்கு’ வந்தபோது, அங்கே ஆயிரத்தும் மேற்பட்ட தொழுநோயாளர்கள் இருக்கக் கண்டார். அந்நேரத்திலே, ‘நாம் இந்த மக்களுக்கு மத்தியில்தான் பணிசெய்யவேண்டும்’ என்று முடிவு கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக, அங்கே இருக்கின்ற தொழுநோயாளர்களுக்கு மத்தியில் அன்புப் பணி செய்துவருகின்றார் அருட்சகோதரி ஜெயின் மேரி.

உடல் முழுவதும் இருக்கக்கூடிய புண்களிலிருந்து சீழ்வடிந்து கொண்டிருக்கும் தொழுநோயாளர்களுக்கு மத்தியில் பணிசெய்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆனால் அருட்சகோதரி ஜெயின் மேரி, அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல், தொழுநோயாளர்களைத் தன் குடும்பத்தில் உள்ள ஒருவரைப் போன்று பராமரித்து, அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்துதந்து, எங்கே தான் அந்த இடத்தைவிட்டுப் போய்விட்டால், தொழுநோயாளர்களை யாரும் பராமரிக்காமல் போய்விடுவார்களோ என்ற அக்கறையோடு அவர்களுடன் இருக்கும் அருட்சகோதரி ஜெயின் மேரி, இயேசுவைப் போன்று பரிவுள்ளம் கொண்டவர் என்று சொன்னால் அது மிகையாகாது.

தன்னைக் குணப்படுத்துவாரா என்ற தயக்கத்தோடு வரும் தொழுநோயாளர்

நற்செய்தி வாசகத்தில் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்று முழந்தாள் படியிட்டு வேண்டுகின்றார். இந்தத் தொழுநோயாளிக்கு இயேசுவால் தன்னைக் குணமாக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. இருந்தாலும் இயேசுவின் விருப்பம் எப்படி இருக்கின்றதோ என்பதை எண்ணியவராய், “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்கின்றார். இறைவனுடைய விரும்பம், யாரும் அழிந்துபோகக்கூடாது, மாறாக எல்லாரும் வாழ்வும் மீட்பும் பெறவேண்டும் என்பதாகும் (1 திமொ 2:4, 2 பேது 3:9). இதனாலேயே இயேசு அந்தத் தொழுநோயாளரிடம், “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக” என்று சொல்லி, அவரிடமிருந்த தொழுநோயைப் போக்குகின்றார்.

தொழுநோயாளரிடம் பரிவோடு நடந்துகொண்ட இயேசு

யூத சமூகத்தில் தொழுநோயாளர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது. தீண்டத்தகாதவர்களாவும் பாவிகளாகவும் செத்தவர்களுக்குச் சம்மானவர்களாகவும் கருதப்பட்ட தொழுநோயாளர்கள் மக்களுடைய பார்வையில் படாதவாறு இருக்கவேண்டும். அப்படிப்பட்ட நிலையில் இருந்த ஒரு தொழுநோயாளர் இயேசுவிடம் தன்னைக் குணப்படுத்த வேண்டும் என்று வருகின்றார். இயேசுவும் அவர்மீது பரிவுகொண்டு, அவரைத் தொட்டுக் குணப்படுத்துகின்றார். தொழுநோயாளரைத் தொடுவதால் ‘தீட்டவோம்’ (?) என்றெல்லாம் இயேசு நினைத்துக் கொண்டிருக்காமல், அந்த மனிதர் அத்தனை காலமும் அனுபவித்துக் கொண்டிருந்த உடல், மன வேதனைகளை உணர்ந்து அவரைக் குணப்படுத்துகின்றார். இவ்வாறு இயேசு தன்னை பரிவுள்ளம் கொண்டவராக நிரூபித்துக்காட்டுகின்றார்.

இந்த இடத்தில் மட்டுமல்லாது பல இடங்களில் (மாற் 6:34; 8:2; 9:22) இயேசு பரிவுவோடு நடந்துகொண்டார் என்பதை மாற்கு நற்செய்தியாளர் மிக அழகாக எடுத்துரைக்கின்றார். இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம் ஒவ்வொருவரும் அவரைப் போன்று நம்மோடு வாழக்கூடிய நோயாளிகள், ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்டவர்கள் போன்றவர்களிடம் பரிவோடு நடந்துகொள்ளவேண்டும் என்பதைத்தான் இயேசு இதன்வழியாக நமக்கு எடுத்துரைக்கின்றார்.

சிந்தனை

“பெரும்பாலான மனிதர்கள் மற்றவர்களை மிகச் சிறியோராக உணர வைப்பார்கள். ஒருசிலர்தான் மற்றவர்களை உயர்ந்தவர்களாக உணர வைப்பார்கள்” என்பார் ஜி.கே. செஸ்டர்டன் என்ற அறிஞர். இவ்வார்த்தைகளை இயேசுவோடு இணைத்துச் சிந்தித்துப் பார்க்கும்போது, அவர் யாரையும் சிறியவரகவோ, இழிவானவராகவோ கருதவில்லை. மாறாக மிக உயர்ந்தவராகவும் விலை மதிப்பிற்குரியவராகவும் கருதினார் என்பது புரியும். அதனால்தான் இயேசு அவர்கள் மீது பரிவுகொண்டு, அவர்களுக்கு வேண்டியதைச் செய்தார். இயேசுவின் வழியில் நடக்கும் நாம் ஒவ்வொருவரும் அவரைப் போன்று பரிவோடு இருப்பது மிகவும் தேவையானது.

ஆகவே, இயேசுவைப் போன்று பரிவோடு நடந்துகொள்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.