அறுவடை விழா (பொங்கல்) – 15 01 2019

பழைய ஏற்பாட்டிலிருந்து

போரடிக்கும் களங்களில் கோதுமை நிறைந்திருக்கும்.

இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து வாசகம் 2:21 – 24, 26 – 27

நிலமே நீ அஞ்சாதே; மகிழ்ந்து களிகூரு; ஏனெனில், ஆண்டவர் பெரிய காரியங்களைச் செய்தார்.காட்டு விலங்குகளே, அஞ்சாதிருங்கள்; ஏனெனில், பாலைநிலப் புல்வெளிகள் பசுமையாய் இருக்கின்றன; மரங்கள் கனி தருகின்றன; அத்திமரமும் திராட்சைக் கொடியும் மிகுந்த கனி கொடுக்கின்றன.

சீயோனின் பிள்ளைகளே, அகமகிழுங்கள்; உங்கள் கடவுளாகிய ஆண்டவரை முன்னிட்டுக் களிப்படையுங்கள்; ஏனெனில், அவர் தமது நீதியை நிலைநாட்ட உங்களுக்கு முன்மாரியைத் தந்தார்; முன்போலவே உங்களுக்கு முன் மாரியையும் பின்மாரியையும் நிறைவாகத் தந்தருளினார்.

போரடிக்கும் களங்களில் கோதுமை நிறைந்திருக்கும்; ஆலைகளில் திராட்சை இரசமும் எண்ணெயும் வழிந்தோடும். நீங்கள் வேண்டியமட்டும் உண்டு நிறைவடைவீர்கள்; உங்களை வியத்தகு முறையில் நடத்தி வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் பெயரைப் போற்றுவீர்கள்; இனிமேல் என் மக்கள் ஒருபோதும் நிந்தைக்கு உள்ளாகமாட்டார்கள்.

இஸ்ரயேல் நடுவில் நான் இருக்கிறேன் என்றும், ஆண்டவராகிய நானே உங்கள் கடவுள் என்றும், என்னையன்றி எவரும் இல்லையென்றும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்; இனிமேல் என் மக்கள் ஒருபோதும் நிந்தைக்கு உள்ளாக மாட்டார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

திபா 126: 2b – 3. 4-5. 6(பல்லவி 3a)

பல்லவி: ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்.

2b “ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்” என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

3 ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். பல்லவி

4ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்.

5கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். பல்லவி

6விதை எடுத்துச் செல்லும்போது — செல்லும்போது — அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது — வரும்போது — அக்களிப்போடு வருவார்கள். பல்லவி

புதிய ஏற்பாட்டிலிருந்து

செல்வர்களாய் இருப்பவர்கள் நிலையில்லாச் செல்வத்தில் நம்பிக்கை வைத்தலாகாது.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 6 – 11, 17 -19

அன்பிற்குரியவரே,

இறைப்பற்று பெரும் ஆதாயம் தருவதுதான்; ஆனால் மனநிறைவுள்ளவர்களுக்கே தரும்.உலகத்திற்கு நாம் எதையும் கொண்டு வந்ததில்லை. உலகத்தை விட்டு எதையும் கொண்டு போகவும் முடியாது.எனவே, உணவும் உடையும் நமக்கு இருந்தால் அவற்றில் நாம் மனநிறைவு கொள்வோம்.

செல்வத்தைச் சேர்க்க விரும்புபவர்கள் சோதனையாகிய கண்ணியில் சிக்கிக் கொள்கிறார்கள்; அறிவீனமான, தீமை விளைவிக்கக்கூடிய பல்வேறு தீய நாட்டங்களில் வீழ்ந்து விடுகிறார்கள். இவை மனிதரைக் கேட்டிலும் அழிவிலும் ஆழ்த்துபவை. பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர். அந்த ஆசையால் சிலர் விசுவாசத்தினின்று பிறழ்ந்து திரிந்து பல வேதனைகளைத் தாங்களாகவே தங்கள்மேல் வருவித்துக் கொள்கிறார்கள்.

கடவுளின் மனிதனாகிய நீ, இவற்றிலிருந்து தப்பி ஓடு. நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மனஉறுதி, பணிவு ஆகியவற்றை நாடித்தேடு.

இவ்வுலகில் செல்வர்களாய் இருப்பவர்களுக்கு இவ்வாறு கட்டளையிடு; அவர்கள் மேட்டிமை உணர்வு கொள்ளலாகாது. நிலையில்லாச் செல்வத்தில் நம்பிக்கை வைக்காமல் நம்முடைய இன்பத்திற்காகவே எல்லாவற்றையும் நிறைவாக அளிக்கும் கடவுளை மட்டுமே எதிர்நோக்கி இருக்கவேண்டும். அவர்கள் நல்லதைச் செய்து நற்செயல்கள் என்னும் செல்வத்தைச் சேர்ப்பார்களாக; தங்களுக்குள்ளதைத் தாராள மனத்தோடு பகிர்ந்தளிப்பார்களாக. இவ்வாறு அவர்கள் தங்களது வருங்காலத்திற்கென்று நல்லதோர் அடித்தளமாக இச்செல்வத்தைச் சேமித்துவைப்பதால் உண்மையான வாழ்வை அடைய முடியும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 126: 5

அல்லேலூயா, அல்லேலூயா! கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். அல்லேலூயா.

நற்செய்தி

காலில் முகங்குப்புற விழுந்து, அவருக்கு நன்றி செலுத்தினார்.

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 11-19

அக்காலத்தில்

இயேசு எருசலேமுக்குப் போய்க் கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார். ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்று கொண்டே, “ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்” என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள்.அவர் அவர்களைப் பார்த்து, “நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்” என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும்போது அவர்கள் நோய் நீங்கிற்று.

அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்; அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர். இயேசு, அவரைப் பார்த்து, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” என்றார்.

Comments are closed.