நற்செய்தி வாசக மறையுரை ( ஜனவரி 11)

இங்கிலாந்து நாட்டில் தோன்றிய மிகப்பெரிய நாவலாசிரியரும் நாடகாசிரியருமான ஒலிவர் கோல்ட்ஸ்மித் (Oliver Goldsmith), ஆரம்ப காலத்தில் ஒரு மருத்துவராக இருந்து ஏழை எளிய மக்களுக்குப் பணிசெய்து வந்தவர்தான். அப்படி அவர் பணிசெய்யும்போது தன்னிடத்தில் வரும் நோயாளிகளிடத்தில் கட்டணம் எதுவும் வசூலிக்காமல், இலவசமாகவே பணிசெய்து வந்தார். சில சமயங்களில் மட்டும் நோயாளிகள் தரும் ‘சொற்பக்’ கட்டணங்களை ஏற்றுக்கொண்டார். அவற்றைக்கூட தன்னிடம் உதவி என்று வருபவர்களிடம் கொடுத்துவிடுவார்.

ஒருசமயம் சௌத்வாக்’கில் (Southwalk), குடும்பத்தாரால் கைவிடப்பட்ட நோயாளி ஒருவர் படுத்த படுக்கையாகக் கிடக்கிறார், அங்கு வந்து அவருக்கு சிகிச்சை அளிக்குமாறு ஒருசிலர் கேட்டுக்கொண்டார்கள். ஒலிவர் கோல்ட்ஸ்மித்தும் அவர்களுடைய அழைப்பினை ஏற்றுக்கொண்டு, குறிப்பிட்ட அந்த நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப் புறப்பட்டுச் சென்றார்.

ஒலிவர் கோல்ட்ஸ்மித் அந்த நோயாளியின் வீட்டிற்குப் போய் பார்த்தபின்புதான் தெரிந்தது, அந்த நோயாளியை வெறும் மருந்து மாத்திரை மட்டும் குணப்படுத்திவிடாது, அதை விட வேறொன்று தேவைப்படுகின்றது என்பதை உணர்ந்தார். உடனே ஒலிவர் கோல்ட்ஸ்மித் அந்த நோயாளிக்குத் தேவையான சிகிச்சையை அளித்துவிட்டு, தன்னிடம் இருந்த பணத்தை எல்லாம் ஒரு பையில் போட்டு, “இதில் உள்ள பணத்தை உங்களுடைய தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளவும்” என்று எழுதி அவரிடம் கொடுத்துவிட்டு வந்தார் .

இது நடந்து ஒருசில மாதங்கள் கழித்து, படுத்த படுக்கையாகக் கிடந்த அந்த நோயாளி முற்றிலுமாகக் குணமாகி ஒலிவர் கோல்ட்ஸ்மித்திடம் வந்தார். “ஐயா! கையில் ஒன்றுமில்லாமல் படுக்கையில் கிடக்கின்ற எனக்கு, யார் சிகிச்சை அளிப்பார். யார் என்னுடைய எதிர்காலதில் எனக்கு ஆதரவு தருவார் என்று எண்ணிக் கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன். இந்த நேரத்தில் நீங்கள் அளித்த சிகிச்சையும், செய்த பண உதவியும்தான் நான் நோயிலிருந்து விரைவாகக் குணமடைய உதவி செய்தன. உண்மையில் உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் அது போதாது” என்று கைகூப்பி நன்றிசொல்லிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.

நம்மோடு வாழக்கூடிய நோயாளிகளை, கைவிடப்பட்டவர்களை எப்படி வேண்டுமாலும் கவனித்துக் கொள்ளலாம், குறிப்பாகப் பணம் தந்துகூட உதவலாம் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது.

இஸ்ரயேல் சமூகத்தில் தொழுநோயாளர்களின் அவலநிலை

நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு ஓர் ஊரில் இருக்கும்போது, தொழுநோயாளர் ஒருவர் அவரிடம் வந்து தன்னுடைய நோயை நீக்குமாறு கெஞ்சிக் கேட்கின்றார். இயேசு தன்னிடம் வந்த தொழுநோயாளரை எப்படிக் குணப்படுத்தினார் என்று சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்பாக, இஸ்ரேயல் சமூகத்தில் தொழுநோயாளர்களின் நிலை எப்படி இருந்தது என்பதை அறிந்துகொள்வோம்.

தொழுநோயாளர்களின் நிலையைப் பற்றி லேவியர் புத்தகம் 13,14 ஆம் அதிகாரங்கள் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. அதன்படி ஒருவருக்குத் தொழுநோய் வந்திருக்கின்றது என்பதை குரு கண்டுபிடிப்பார். அப்படிக் கண்டுபிடிக்கப்பட்ட தொழுநோயாளி ஊருக்கு வெளியே வைக்கப்படுவார். மேலும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் பாவி என்றே கருதப்படுவார் (எசா 1:4-6), அவர் செத்தவருக்குச் சமமானவராக இருப்பார் (எண் 12:12). இப்படிப்பட்ட நிலையில் இருந்த ஒரு தொழுநோயாளி, இயேசுவிடம் வந்து, தன்னுடைய நோயை நீக்குமாறு கேட்டுக்கொள்கின்றார்.

தொழுநோயாளர்மீது இரங்கிய இயேசு

சமூகம் ‘தீண்டத்தகாதவர்கள்’ என்று கருதிய தொழுநோயாளரை இயேசு தொட்டுக் குணப்படுத்துகின்றார். ‘தீண்டத்தகாதவர்’ என்ற நிலையில் இருந்த தொழுநோயாளரைத் தீண்டுவதால், அல்லது தொடுவதால் தான் ‘தீண்டத்தகாதவன் ஆவேன்’ (?) என்பதை எல்லாம் நினைத்து இயேசு கவலை கொள்ளவில்லை. மாறாக அந்த மனிதர் கொண்டிருந்த தாழ்ச்சியையும் அசைக்க முடியாத நம்பிக்கையையும் பார்த்துவிட்டு, இயேசு அவரைத் தொட்டுக் குணப்படுத்துகின்றார்.

இயேசு அந்த மனிதரைக் குணப்படுத்திய பின் சொல்லும் வார்த்தைகள் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. இயேசு அவரிடம், “நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்” என்கின்றார். இயேசு அறிவுக்கு ஒவ்வாத சட்டங்களையும் சடங்குமுறைகளையும்தான் எதிர்த்தாரே ஒழியே, நல்ல சட்டங்களை, நியமங்களை தான் கடைப்பிடித்ததோடு மட்டுமல்லாமல், மற்றவரையும் கடைபிடிக்கச் சொன்னார் என்பதற்கு இயேசுவின் இவ்வார்த்தைகள் சான்றாக இருக்கின்றன.

சிந்தனை

நோயாளிகளின்மீதும் கைவிடப்பட்டவர்கள்மீதும் அன்புகொண்டு, அவர்களுடைய தேவைகளை நிவர்த்தி செய்யும் இயேசு நம்மையும் அவ்வாறு இருக்க அழைக்கின்றார் (மத் 25:36)

ஆகவே, நாமும் இயேசுவைப் போன்று நோயாளிகளிடம் அன்பும் பரிவும் இரக்கமும் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.