திருமுழுக்கைக் கொண்டாடுவது முக்கியம்

“எங்கள் வானகத்தந்தையே” என்ற தலைப்பில், தனது மறைக்கல்வியுரையை நிறைவு செய்த, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பின்னர், இந்த நிகழ்வில் அமர்ந்திருந்த எல்லாரையும், குறிப்பாக, இளையோர், வயது முதிர்ந்தோர், நோயாளர் மற்றும், புதுமணத் தம்பதியரை வாழ்த்தினார். மேலும், சனவரி 13, வருகிற ஞாயிறன்று ஆண்டவரின் திருமுழுக்கு விழாவைச் சிறப்பிக்கின்றோம். இத்துடன், கிறிஸ்மஸ் திருவழிபாட்டு காலம் நிறைவுறுகின்றது. இந்த விழா, திருமுழுக்கு அருளடையாளத்தில் நாம் பெற்ற திருவருள் பற்றி நினைத்துப் பார்ப்பதற்கு அழைப்பு விடுக்கின்றது. இந்த அருளடையாளம், நம்மை கிறிஸ்தவர்களாக்கி, கிறிஸ்துவோடும், அவரின் திருஅவையோடும் நம்மை ஒன்றிணைக்கிறது. நாம் பெற்ற விசுவாசம் எனும் கொடைக்காக ஆண்டவருக்கு நன்றி சொல்வோம். இயேசுவுக்கு துணிச்சலான சான்றுகளாக வாழ்வதற்கு, தூய ஆவியாரிடம் சக்தியைக் கேட்போம் என்று திருத்தந்தை கூறினார். அராபிய மொழி பேசுபவர்களுக்கு, குறிப்பாக, மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து வந்திருந்த திருப்பயணிகளை வாழ்த்திய திருத்தந்தை, தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும், ஒருபோதும் மனம் தளராதீர்கள், இன்று நாம் காணும் கசப்பான நிலைகளை மாற்றியமைக்கும் சக்தியைக் கொண்டது செபம். நம்மைச் சுற்றியுள்ள காரியங்கள் மாறாவிடினும், நாமாவது மாறுவோம் என்றார். இவ்வாறு, பல மொழியினருக்கு, தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, இறுதியில், தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்

Comments are closed.