நற்செய்தி வாசக மறையுரை ( ஜனவரி 03) கிறிஸ்து பிறப்புக் காலம்

கடவுளின் ஆட்டுக்குட்டி

நிகழ்வு

அது ஒரு பழமையான ஆலயம். அந்த ஆலயத்தின் கோபுர உச்சியில் வழக்கத்திற்கு மாறாக ஒரு பெரிய செம்மறியாட்டின் சிரூபம் பொறிக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்துவிட்டு அந்த ஆலயத்திற்கு வந்துபோன திருப்பயணிகள், “இது என்ன? இந்த ஆலயத்தின் கோபுரம் மிகவும் வித்தியாசமாக இருக்கின்றது… வழக்கமாக கோபுர உச்சியில் திருச்சிலுவைத்தானே வைப்பார்கள், இங்கு என்னவென்றால் செம்மறியாட்டின் சிரூபத்தை வடித்து வைத்திருகிரார்களே!” என்று கேள்வி எழுப்பினார்கள்

திருப்பயணிகள் எழுப்பிய இந்தக் கேள்விக்கு அங்கிருந்த பூர்வகுடிகள் சொன்ன பதில் இதுதான்: “இந்த ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கோபுரத்தின் உச்சியில் நின்றுகொண்டு பணியாளர் ஒருவர் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது திடிரென்று அவருடைய கை பிசகியதால், அந்தப் பணியாளர் மேலிருந்து கீழே பெருங்கூச்சலோடு விழுந்தார். ஆலயத்தில் அவரோடு வேலை பார்த்துக்கொண்டிருந்த எல்லாரும், ‘இவ்வளவு உயிரத்திலிருந்து விழுகின்ற இவர், அவ்வளவுதான்’ என்றே நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், அவர் விழுந்த இடத்தில் செம்மறியாடு ஒன்று படுத்துக்கிடந்தது. அவர் அந்த செம்மறியாட்டின்மேல் விழுந்ததால், அந்த செம்மறியாட்டின் உயிர்போய் அவர் பிழைத்துக் கொண்டார். அதன் நினைவாகத்தான் இந்த கோபுரத்தின் உச்சியில் சிலுவைக்குப் பதிலாக செம்மறியாட்டின் சிரூவம் பொறிக்கப்பட்டிருக்கின்றது”.

தன்னுடைய உயிரை இழந்து, கட்டுமானப் பணியாளரிடம் உயிரைக் காப்பாற்றிய அந்த செம்மறியாட்டைப் போன்று, இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களை எல்லாம் போக்கி, நமக்கு மீட்பினை வழங்கினார் என்பது எத்துணை சிறப்பான ஒரு காரியம்.

திருமுழுக்கு யோவான் என்னும் சுட்டுவிரல்

நற்செய்தி வாசகத்தில் இயேசு கிறிஸ்து தன்னிடத்தில் வருவதைக் கண்ட யோவான், “இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகத்தின் பாவத்தைப் போக்குபவர்” என்கின்றார். கடவுளின் ஆட்டுக்குட்டிகான அர்த்தம் என்ன என்று சிந்தித்துப் பார்ப்பது முன்பாக, திருமுழுக்கு யோவான் செய்துவந்த பணியைக் குறித்து சிறிது சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

புதிய ஏற்பாட்டில் மட்டும் திருமுழுக்கு யோவானைக் குறித்து 89 முறை சொல்லப்படுகின்றது. அப்படியானால் திருமுழுக்கு யோவான் மீட்பின் வரலாற்றில் எந்தளவுக்கு முக்கியமானவர் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். திருமுழுக்கு யோவான் மெசியாவாகிய இயேசுவுக்காக மக்களைத் தயார் செய்து, வந்தபின் அவர்களுக்கு அவரைச் சுட்டிக்காட்டுகின்ற சுட்டுவிரலாக இருந்து செயல்பட்டார். இயேசுவின் வழியில் நடக்கின்ற ஒவ்வொருவரும் திருமுழுக்கு யோவானைப் போன்று சுட்டுவிரலாக இருப்பது சிறப்பானது.

கடவுளின் ஆட்டுக்குட்டி இயேசு

தன்னிடத்தில் வந்த இயேசுவை திருமுழுக்கு யோவான், “கடவுளின் ஆட்டுக்குட்டி” என்று அழைக்கின்றார். திருமுழுக்கு யோவான் இயேசுவை ஏன் அவ்வாறு அழைக்கவேண்டும் என்று கேள்வி எழலாம். அதற்கான பதிலை இப்போது பார்ப்போம்.

யூதர்களுக்கு ஆட்டுக்குட்டி ஒன்றும் புதில்லை. ஆண்டுதோறும் பாவப் பரிகார நாளில் ஆடானது பலியாக ஒப்புக்கொடுப்பட்டது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் இரண்டு ஆடானது எருசலேம் திருக்கோவிலில் பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. இதுபோக தனிப்பட்ட முறையில் நேர்ச்சைக்காக பலி ஒப்புக்கொடுத்தார்கள். இப்படி இப்புக்கொடுக்கப்பட்ட பலிகள் மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாக ஒப்புக்கொடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் திருமுழுக்கு யோவான் ‘இயேசுவை கடவுளின் ஆட்டுக்குட்டி’ என்று சொன்னதை மேற்குறிப்பிட்ட முறையில் ஏற்றுக்கொள்ளமுடியாது. சாதாரண ஆட்டுக்குட்டிக்கும் இயேசு என்னும் கடவுளின் ஆட்டுக்குட்டிக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. முதலாவதாக, எருசலேம் திருக்கோவிலில் பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்ட ஆட்டுக்குட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக இருந்தன. இதுவே, விலங்குகளைக் கொண்டு ஒப்புக் கொடுக்கப்படும் பலிகள் ஒருபோதும் முழுமையாக இருக்காது என்பதற்குச் சான்றாக இருக்கின்றது. ஆனால், ஆண்டவர் இயேசு தன்னுடைய உடலை ஒரே ஒருமுறை பலியாக ஒப்புக்கொடுத்தார். அதையே என்றென்றைக்குமான பலியாக மாற்றினார்.

இரண்டாவதாக, எருசலேம் திருக்கோவில் ஒப்புக்கொடுக்கப்பட்ட பலிகள் யூதர்களுக்கு மட்டுமானதாக இருந்தது. ஆனால், இயேசு கல்வாரி மலையில் செலுத்திய பலி எல்லா மக்களுக்குமானதாக இருந்தது. ஆதலால்தான் திருமுழுக்கு யோவான் இயேசுவைக் குறித்து, ‘உலகத்தின் பாவம் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டி” என்கின்றார்.

சிந்தனை

“கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார். இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்புப் பெறுகிறோம்” என்று தூய பவுல் எபேசியருக்கு எழுதிய மடலில் கூறுவார். ஆம், இயேசு என்னும் கடவுளின் ஆட்டுக்குட்டியினுடைய இரத்தம் நமக்கு மீட்பு அளித்துள்ளது. இந்த மீட்புக்கு நாம் நன்றியுள்ளவர்களாகவும், அவருக்கு ஏற்ற மக்களாகவும் வாழ்வதுமே நாம் செய்யவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

ஆகவே, இறைவன் தன் ஒரே மகன் இயேசுவின் வழியாக நமக்கு அளித்த மீட்பினை எண்ணிப் பெருமை கொள்வோம்; அவருக்கு உகந்த மக்களாக மாற, அவர் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.