சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினரான இயேசு!
ஈசாப் கதை இது. வேடன் ஒருவன் நரியைத் துரத்திக்கொண்டு ஓடிவந்தான். அதுவோ பயந்து போய் ஒரு குடிசைக்குள் புகுந்துகொண்டது. குடிசைக்குள் விவசாயி ஒருவன் இருந்தான். அது அவனிடம், “ஐயா! தயவுசெய்து, என்னைக் காட்டிக் கொடுத்துவிடாதீர்கள்” என்று கெஞ்சியது. விவசாயியும் அதற்குச் சரியென்று ஒத்துக்கொண்டான்.
சிறிது நேரத்தில் அங்கு வேடன் ஒருவன் ஓடி வந்தான். வந்தவன் குடிசையில் இருந்த விவசாயியிடம், “ஐயா! பெரியவரே! இந்தப் பக்கமாக ஏதாவது நரி கிரி வந்ததா?” என்று கேட்டான். அவனோ, “அப்படி எதுவும் இந்தப் பக்கம் வரவில்லையே” என்று சொல்லிக்கொண்டு, “நரி உள்ளேதான் இருக்கின்றது” என்று சைகையால் காட்டிக் கொடுத்தான். பரபரப்பாய் வந்த வேடனோ கேட்டுப்போன வேகத்தில், கவனச் சிதைவாக இவனது சைகை மொழியைக் கவனிக்காமல் போய்விட்டான்.
வேடன் மறைந்ததும் குடிசையை விட்டு மெல்ல வெளியே வந்தது நரி. வந்ததும் விறுவிறுவென்று தன் வலைக்குள் கிளம்பிவிட்டது. நரியை தடுத்து நிறுத்திக் கேட்டான் விவசாயி, “ஏ நரியே! உன் உயிரையே நான் காப்பாற்றியிருக்கிறேன் அல்லவா? அதற்காக ஒரு நன்றிகூடச் சொல்லாமல் போகிறாயே… நன்றிகெட்ட நரியே!” என்று. அதற்கு அந்த நரி, “அட இரட்டை மொழி மனிதப் பதரே! உனக்கா நான் நன்றி சொல்லவேண்டும்? உன் பேச்சைப்போல் உன் செய்கையும் இல்லையே… இப்படிச் சொல் வேறு செயல் வேறு என்று வாழ்ந்தால், உன்னைச் சொறி நாயும் மதிக்காது” என்று சொல்லிவிட்டு வேகமாக ஓடியது.
சொல்வதும் ஒன்றும் செய்வது ஒன்றுமாய் வாழக்கூடிய மனிதப் பதர்களை நெற்றிப்பொட்டில் அறைந்தார்போல் இருக்கின்றது ஈசோப்பின் இந்தக் கதை.
நற்செய்தி வாசத்தில் இயேசுவின் சீடர்கள் இருவர் எம்மாவுஸ் நோக்கிப் பயணப்படுகின்றார்கள். அப்போது இயேசு அவர்களுக்கு முன்பாக ஒரு வழிபோக்கரைப் போல் தோன்றி, “வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருப்பது என்ன?” என்று கேட்கின்றார். அதற்கு அவர்கள் அவரிடம், “நாசரேத்து இயேசுவைப் பற்றியேதான் பேசுகின்றோம்” என்று சொல்லிவிட்டு, “அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார்” என்பார்கள். இவ்வார்த்தைகள் நம்முடைய சிந்தனைக்குரியவையாக இருக்கின்றன.
இந்த உலகத்தில் இருக்கின்ற பலர் சொல்வது போன்று செய்வது கிடையாது. சொல்வது ஒன்று, செய்வது வேறொன்று என்றுதான் நிறையப் பேர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இயேசுவின் காலத்தில் வாழ்ந்து வந்த பரிசேயர்கள், மறைநூல்கள் இவர்களுக்கு எதிராக இயேசு வைக்கக்கூடிய முதன்மையான குற்றச்சாட்டே அவர்கள் சொல்வது போன்று செய்வதில்லை என்பதுதான் (மத் 23:4). இந்தப் பின்னணியில்தான் எம்மாவுஸ் நோக்கிப் பயணப்படும் சீடர்கள் இயேசுவைக் குறித்துச் சொல்கின்ற, “அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார்” என்ற வார்த்தைகளை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
இயேசு, இன்றைய அரசியல்வாதிகளைப் போன்றோ அல்லது கட்சித் தலைவர்களைப் போன்றோ (பொய்யான) வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு அதனை நிறைவேற்றாமல் இல்லை. அவர் சொன்னார் அதை நிறைவேற்றவும் செய்தார். ஏழைகளுக்கு நற்செய்தி, சிறைப்பட்டோருக்கு விடுதலை, ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வு, பார்வையற்றோருக்குப் பார்வை என்று முழக்கமிட்டார். அதனை நிறைவேற்றவும் செய்தார். அது மட்டுமல்லாமல் ‘இக்கோவிலை இடித்துவிடுங்கள், இதனை மூன்றுநாளில் எழுப்பிவிடுவேன்” (யோவான் 2: 13-15) என்றார். தான் சொன்னது போன்று மூன்றாம் நாளில் உயிர்த்தெழவும் செய்தார். இவ்வாறு இயேசு சொல்வீரராக மட்டுமல்லாமல், செயல்வீரராகவும் விளங்கினார். இவற்றின் அடிப்படையில் நாம் பார்க்கின்றபோது, எம்மாவுஸ் நோக்கி பயணப்பட்ட சீடர்கள் இருவரின் கூற்று பொய்யில்லை, நூற்றுக்கு நூறு உண்மை எனச் சொல்லலாம்.
இயேசுவின் வழியில் நடக்கும் நாம் சொல்லிலும் செயலில் வல்லவர்களாக விளங்குகின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். வாக்கு மாறாது இருத்தல், சொன்ன சொல் காப்பாற்றுதல் போன்ற பண்புகள் எல்லாம் இன்றைக்கு அரிதாகப் போய்விட்டன. அதனால்தான் ஒருவர் ஒருவர்மீது இன்றைக்கு நம்பிக்கை ஏற்படுவதில்லை. நாம் அடுத்தவருக்குக் கொடுக்கின்ற வாக்குறுதிகளைக் காப்பாற்றுகின்றபோது, அடுத்தவருக்கு நம்மீது தானாகவே நம்பிக்கை ஏற்படும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது.
ஆகவே, நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இயேசுவைப் போன்று சொல்லிலும் செயலிலும் வல்லவர்களாக விளங்குவோம், கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்
Comments are closed.