மாசற்ற குழந்தைகள் திருநாள் மறையுரை

ஈராக் நாட்டில் உருவான வெறுப்பு, வன்முறை என்ற கொடுமைகளை, வரவேற்பு, விருந்தோம்பல், ஒருங்கிணைப்பு என்ற நேர்மறை பண்புகளைக் கொண்டு கத்தோலிக்க மக்கள் வென்றுள்ளனர் என்று திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் தன் மறையுரை ஒன்றில் கூறினார்.

டிசம்பர் 24, திங்கள் முதல், டிசம்பர் 28, வெள்ளிவரை, ஈராக் நாட்டில் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்டுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், அங்காவா (Ankawa) என்ற நகரில், புனித யோசேப்பு, கல்தேய வழிபாட்டு முறை பேராலயத்தில், டிசம்பர் 27, இவ்வியாழன் மாலை, மாசற்ற குழந்தைகள் திருநாள் திருப்பலியை நிறைவேற்றிய வேளையில் வழங்கிய மறையுரையில் இவ்வாறு கூறினார்.

சவுல், தமஸ்கு நகருக்குச் செல்லும் வழியில், அவரை இடைமறித்துப் பேசிய இயேசு, துன்புறும் மக்களுடன் தன்னையே அடையாளப்படுத்திக்கொண்டது போல், (தி.பணிகள் 9:5) திருஅவை பெரும் இன்னல்களுக்கு உள்ளாகும் நேரங்களில் எல்லாம், துன்புறுவோருடன் தன்னையே இணைத்துக் கொள்கிறார் என்று கர்தினால் பரோலின் அவர்கள் தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

மன்னன் ஏரோதுவால் கொல்லப்பட்ட மாசற்ற குழந்தைகள், வாய் மொழியாக தங்கள் சாட்சியத்தை வழங்குவதற்கு முன்னதாகவே, தங்கள் இரத்தத்தால் சாட்சியம் வழங்கினர் என்பதை, கர்தினால் பரோலின் அவர்கள் சிறப்பாகச் சுட்டிக்காட்டினார்.

மறைசாட்சிகளின் ஆலயமாக விளங்கும் ஈராக் தலத்திருஅவை, தீமை இவ்வுலகில் ஒருபோதும் வெற்றி கொள்ளாது என்பதை உலகிற்கு பறைசாற்றி வருகிறது என்று கர்தினால் பரோலின் அவர்கள் தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறினார்.

Comments are closed.