இத்தாலிய கத்தோலிக்கப் பணி இளையோருடன் திருத்தந்தை

இத்தாலியில், கத்தோலிக்கப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் Catholic Action என்ற அமைப்பைச் சேர்ந்த இளையோரை, டிசம்பர் 20, இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவையொட்டி நிகழும் இச்சந்திப்பு தனக்கு மகிழ்வைத் தருகிறது என்று கூறினார்.

கிறிஸ்தவ விழுமியங்களோடு இளையோரை உருவாக்குவதில் அக்கறை கொண்டுள்ள இத்தாலிய கத்தோலிக்கப் பணி அமைப்பினர், இயேசுவுக்கும், பெத்தானியாவில் வாழ்ந்த மார்த்தா, மரியா என்ற இரு சகோதரிகளுக்கும் இடையே நிலவிய நட்பினை, இவ்வாண்டின் மையக்கருத்தாகத் தெரிவு செய்துள்ளதை, திருத்தந்தை பாராட்டிப் பேசினார்.

இவ்வமைப்பைச் சேர்ந்த இளையோர், தங்கள் வளர்ச்சியின் ஒரு பகுதியாக, பிறரன்பு பணிகளில் ஈடுபடுவதை, சிறப்பாகக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு, நிலத்தில் உழைக்கும் மனிதர்களுக்கு உணவளிக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது குறித்து, அவர்களுக்கு தன் பாராட்டுக்களை வழங்கினார்.

தன்னைச் சந்திக்க வந்திருந்த இளையோருக்கு, கிறிஸ்து பிறப்பின் மகிழ்வை வழங்கிய திருத்தந்தை, உலகின் பல நாடுகளில், கடினமானச் சூழல்களில் வாழும் இளையோருடன், இத்தாலிய கத்தோலிக்கப் பணி அமைப்பின் இளையோர், அந்த மகிழ்வைப் பகிர்ந்துகொள்ளும்படி அழைப்பு விடுத்தார்.

Comments are closed.