கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு ஒரு வரலாற்றுப் புரட்சி

வானதூதர் கபிரியேல் மரியாவிடம் இறைமகனின் பிறப்பைக் குறித்து அறிவித்த நிகழ்வு, மனித வரலாற்றை முற்றிலும் மாற்றியமைத்த தருணம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை திருப்பலியில் வழங்கிய மறையுரையில் கூறினார்.

தான் வாழும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இவ்வியாழன் காலை திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, இன்றைய நற்செய்தியில், கூறப்பட்டுள்ள நிகழ்வை மையப்படுத்தி தன் மறையுரை கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட வேளையில், இளம்பெண் மரியாவுக்கு வானதூதர் வழங்கிய செய்தி, உண்மையில் புரட்சிகரமான செய்தி என்று குறிப்பிட்டார்.

“வியப்புகளின் இறைவன்” நம் இறைவன் என்பதை இந்த நற்செய்திப் பகுதி நமக்கு நினைவுறுத்துவதால், இதனைக் குறித்து மறையுரை வழங்குவது அவ்வளவு எளிதல்ல என்பதை, தன் மறையுரையின் துவக்கத்தில் திருத்தந்தை எடுத்துரைத்தார்.

லூக்கா நற்செய்தியில் (லூக்கா 1: 26-38) பதிவு செய்யப்பட்டுள்ள பகுதியை, இவ்வியாழனன்று வழங்கிய மறையுரையின்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மீண்டும் ஒருமுறை வாசித்து, திருப்பலியில் கலந்துகொண்டோர் அனைவரையும் தன்னுடன் இணைந்து தியானிக்கும்படி அழைப்பு விடுத்தார்.

ஒவ்வோர் ஆண்டும், கிறிஸ்து பிறப்பு பெருவிழாவைக் கொண்டாடும் வேளையிலும், மார்ச் 25ம் தேதி, கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு திருவிழாவைக் கொண்டாடும் வேளையிலும், நம் விசுவாசப் பிராமணத்தில், “பரிசுத்த ஆவியினால் கன்னிமரியிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார்” என்ற சொற்களைக் கூறும்போது நாம் முழந்தாள் படியிடுவதை, தன் மறையுரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார் திருத்தந்தை.

கிறிஸ்மஸ் விடுமுறை காலம் துவங்கவிருப்பதால், டிசம்பர் 20, இவ்வியாழன் சாந்தா மார்த்தா இல்லத்தில் நிகழ்ந்த இத்திருப்பலியைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்தும் திருப்பலிகளை, சனவரி 7ம் தேதி, திங்களன்று மீண்டும் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.