கிறிஸ்மஸ் புலம்பெயர்ந்தோர் பற்றி சிந்திக்க அழைக்கின்றது

விசுவாசத்தில் நாம் புதுப்பிறப்படையவும், நம்பிக்கையில் வாழ்வதற்கு நம்மைக் கையளிக்கவும், பிறரன்பை நம்மில் உயிரூட்டம் பெறச் செய்யவும், கிறிஸ்மஸ் நமக்கு அழைப்பு விடுப்பதால், அது எப்போதும் புதுமையாக விளங்குகின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று, தான் சந்தித்த கலைஞர்கள் குழு ஒன்றிடம் தெரிவித்தார். போர்கள், சமூக அநீதி, காலநிலை மாற்றம் ஆகியவற்றால் துன்புற்று புலம்பெயர்கின்ற மற்றும், குடிபெயர்கின்ற மக்கள் பற்றி சிந்தித்து பார்ப்பதற்கு, இவ்வாண்டு கிறிஸ்மஸ் சிறப்பாக அழைப்பு விடுக்கின்றது என்றும், அக்குழுவிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கானில் கிறிஸ்மஸ் இசை நிகழ்ச்சி ஒன்றை, டிசம்பர் 15, இச்சனிக்கிழமையன்று நடத்தவிருக்கும், இசைக் கலைஞர்கள் 180 பேரை, இவ்வெள்ளி நண்பகலில், வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கூறினார்.

திருக்குடும்பமும், துன்பங்களை அனுபவித்து எகிப்தில் புகலிடம் தேடியது என்றும், இன்றைய உலகில் புலம்பெயர்ந்தோரில் பாதிப்பேராக இருக்கும் சிறாரை, குழந்தை இயேசு, நமக்கு நினைவுபடுத்துகின்றார் என்றும், இச்சிறார், மனிதரின் அநீதிக்குப் பலியாகி இருப்பவர்கள் என்றும், திருத்தந்தை எடுத்துரைத்தார்.

இந்த மக்களுக்கு திருஅவை பல்வேறு நடவடிக்கைகள் வழியாக உதவி வருகின்றது எனவும், இம்மக்களின் துன்பங்களை அகற்றுவதற்கு, மேலும் அதிக அளவில் திட்டமிடப்பட்ட செயல்பாடுகள் அவசியம் எனவும், திருத்தந்தை கூறினார்.

குடிமக்கள் என்ற உணர்வில், வருங்காலத்தில் பொதுநலனைக் கட்டியெழுப்புவதில்,  புலம்பெயர்ந்துள்ள சிறார் பங்கெடுக்கவும், பணியாற்றவும் உதவும் விதத்தில், அவர்களுக்கு கல்வியளிக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திருத்தந்தை, புலம்பெயர்ந்து வரும் மக்களைப் புறக்கணிக்காமல், வரவேற்பதற்கு நம் அனைவருக்கும் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

உகாண்டாவில் சலேசிய சபையினரும், ஈராக்கில் Scholas Occurrentes அமைப்பும், புலம்பெயர்ந்துள்ள சிறாருக்கு ஆற்றிவரும் கல்விப்பணிக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்மஸ் இசைக் கலைஞர்கள் ஆற்றிவரும் நற்பணிகளையும் ஊக்கப்படுத்தினார்.

Comments are closed.