மறையுரைச் சிந்தனை (டிசம்பர் 15)

எலியா ஏற்கனவே வந்துவிட்டார். அவரை மக்கள் கண்டுகொள்ளவில்லை”

ஒரு சமயம் பிரபல ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் தலைவருடைய அறைக்கு முன்பாக ஒரு தம்பதியர் காத்திருந்தார். அவர்களுடைய தோற்றம், அவர்கள் உடுத்தியிருந்த ஆடை மிகவும் சாதாரணமாக இருந்தது.

இதனை அலுவலகத்தின் உள்ளிருந்து பார்த்த பல்கலைக்கழகத்தின் தலைவர் தன்னுடைய செயலரைக் கூப்பிட்டு, “அவர்கள் என்ன விசயமாக வந்திருக்கிறார்கள்?” என்று கேட்டுவரச் சொன்னார். செயலரும் அந்தத் தம்பதியிடம் சென்று, “என்ன விசயமாக வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “பல்கலைக்கழகத்தின் தலைவரைப் பார்த்துப் பேசவேண்டும்” என்றர்கள். அந்தத் தம்பதியர் சொன்னதை செயலர், தலைவரிடம் சென்று சொன்னதும், அவர் அவர்களுடைய எளிய தோற்றத்தைப் பார்த்துவிட்டு, “இன்றைக்கு முழுவதும் வேலை இருக்கிறது. வேலையை முடித்துவிட்டுதான் பார்க்கமுடியும்” என்று சொல்லி அனுப்பினார். அவர் இவ்வாறு சொன்னதற்குக் காரணம், அப்படியாவது அவர்கள் வெளியே போவார்கள் என்றுதான்.

தலைவர் சொன்ன செய்தியை செயலர் அந்தத் தம்பதியரிடம் சொல்ல, அவர்களோ, “எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை, தலைவரை, இருந்து பார்த்துவிட்டுப் போகிறோம்” என்றார்கள். இதை உள்ளே இருந்து கவனித்துக்கொண்டிருந்த தலைவருக்கு மிகவும் எரிச்சலாக இருந்தது.

ஒருவழியாக தலைவர் தன்னுடைய வேலைகளை எல்லாம் (?) முடித்துவிட்டு, அந்த தம்பதியரை உள்ளே கூப்பிட்டார், “என்ன விசயமாக வந்திருக்கிறீர்கள்? சொல்லுங்கள்” என்று அவர்களை வேகப்படுத்தினார். அவர்களோ, “ஐயா! எங்களுடைய ஒரே மகன், இந்தக் கல்லூரியில்தான் சில ஆண்டுகளுக்கு முன்பாகப் படித்தான். ஆனால், எதிர்பாராத விதமாக விபத்தொன்றில் சிக்கி உயிழந்து போனான். இப்போது அவனுடைய நினைவாக இந்தக் கல்லூரியில் ஏதாவது செய்யலாம் என்று இருக்கின்றோம்” என்றார்கள். இதைக் கேட்ட பல்கலைக்கழகத்தின் தலைவருக்கு கடுமையாகக் கோபம் வந்தது. “இன்றைக்கு உங்கள் மகன் நினைவாக ஏதாவது நினைவுச் சின்னத்தை எழுப்புவீர்கள். நாளைக்கு வேறொருவர் வந்து அவருடைய மகன் நினைவாக, நினைவு சின்னம் எழுப்புவார். இப்படி எல்லாருமே வந்து நினைவுச் சின்னங்களை எழுப்ப, இது என்ன பல்கலைக்கழகமா? இல்லை கல்லறைத்தோட்டமா?” என்று தம் குரலை உயர்த்திப் பேசினார்.

“அப்படிச் சொல்லவில்லை ஐயா! நாங்கள் எங்களுடைய மகன் நினைவாக இந்த பல்கலைக்கழகத்தில் ஒரு கட்டடம் கட்டலாம் என்று இருக்கிறோம். அதற்காகத் தான் உங்களைப் பார்க்க வந்திருக்கிறோம்” என்றார்கள் அந்தத் தம்பதியர். அவர்களை ஏற இறங்கப் பார்த்த பல்கலைக்கழகத்தின் தலைவர், “உங்களால் கட்டடம் கட்டித்தர முடியுமா?… இந்த பல்கலைக்கழகத்தைக் கட்டி எழுப்புவதற்கு பத்து மில்லியன் டாலர் ஆகியிருக்கிறது” என்று அகங்காரத்தோடு பேசினார்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த அந்தத் தம்பதியர், “ஒரு பல்கலைக்கழகம் கட்டியெழுப்ப இவ்வளவுதான் செலவாகுமா?… நாங்களே அதைக் கட்டிக்கொள்கிறோம்” என்று சொல்லி எழுந்து போய்விட்டனர். அந்தத் தம்பதியர் சொன்ன வார்த்தைகள் பல்கலைக்கழகத்தின் தலைவருடைய உள்ளத்தில் இடியென இறங்கியது. எவ்வளவோ பெரிய மனிதர்களை அவர்களுடைய வெளித்தோற்றத்தை வைத்து இப்படி உதாசீனப்படுத்தியதால் எல்லாமே போய்விட்டதே என்று தன்னையே நொந்துகொண்டார். இதற்குப் பிறகு அந்தத் தம்பதியர் கட்டி எழுப்பிய பல்கலைக்கழகம்தான் பிரசித்தி பெற்ற ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம்.

எப்படி அந்த பல்கலைக்கழகத்தின் தலைவர், சாதாரண தோற்றத்தில் வந்த அந்த தம்பதியரை உதாசீனபடுத்தினாரோ, அதுபோன்றுதான் இன்றைக்கு நாமும் பலரை, உதாசீனப்படுத்துகின்றோம், கண்டும் காணாமலும் இருக்கின்றோம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, திருமுழுக்கு யோவானை மக்கள் எப்படி உதாசீனப்படுத்தினார்கள் என்பதைப் பற்றி பேசுகின்றார்.

இயேசு கிறிஸ்து, மலையில் உருமாற்றம் அடைந்துவிட்டு, தன்னுடைய மூன்று முதன்மைச் சீடர்களோடு கீழே இறங்கி வருகின்றார். அப்போது சீடர்கள் இயேசுவிடம், “எலியாதான் முதலில் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர்கள் கூறுகிறார்களே, அது எப்படி?” என்று கேட்கிறார்கள். இயேசு அவர்களிடம், எலியா ஏற்கனவே வந்துவிட்டார். அவரை மக்கள் கண்டுகொள்ளவில்லை” என்கின்றார்.

நெருப்புத் தேரில் இறைவாக்கினர் எலியா விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதால் (1 அர 2:11), அவர் மெசியாவின் வருகைக்கு முன்பாக வந்து மக்களை ஆயத்தப்படுத்துவார் (மலா 4:5) என்ற நம்பிக்கை யூதர்களிடத்தில் இருந்தது. அதனடிப்படியில்தான் சீடர்கள் இயேசுவிடம் இப்படியொரு கேள்வியைக் கேட்கிறார்கள். இயேசுவோ திருமுழுக்கு யோவானை அடையாளப்படுத்தி, அவர் வந்துவிட்டார் (லூக் 1:7, மத் 11:10-15) மக்கள்தான் அவரை கண்டுகொள்ளவில்லை என்கிறார். மக்கள் திருமுழுக்கு யோவானை ஏற்றுக்கொள்ளததற்குக் காரணம் அவருடைய வெளித் தோற்றம்தான். நாமும் கூட இப்படித்தான் பலரையும் அவர்களுடைய வெளித்தோற்றத்தை வைத்து அவர்களை உதாசீனப் படுத்திக்கொண்டிருக்கின்றோம்.

ஆகவே, இனிமேலும் அப்படிப்பட்ட தவறுகளைச் செய்யாமல், எல்லாரிலும் இறைவனைக் காண்போம். அவர்களுக்கு உரிய மதிப்பளிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.