மறையுரைச் சிந்தனை (டிசம்பர் 14)

விமர்சனங்களைக் கடந்து சாதித்துக் காட்டுவோம்!

கல்லூரியில் படித்து வந்த டோனிக்கு கால்பந்து விளையாடுவது என்றால் அவ்வளவு இஷ்டம். அவனுக்கு எப்படியாவது கல்லூரியில் உள்ள கால்பந்து அணியில் சேர்ந்துவிட வேண்டும் என்று விருப்பம். அதனால் அவன் கல்லூரியில் இருந்த கால்பந்து பயிற்சியாளரிடம் சென்று, தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தினான். அவரும் டோனிக்கு கால்பந்து விளையாட்டில் இருந்த ஆர்வத்தைக் கண்டு, அவனை ஜூனியர் கால்பந்து அணியில் சேர்த்தார்.

அன்று மாலை வீட்டிற்கு வந்த டோனி, தான் கால்பந்து அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டதைக் குறித்து, தன்னுடைய பெற்றோரிடமும் தாத்தாவிடமும் நண்பர்களிடமும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தான்.

ஒருவாரம் கழித்து டோனியை சந்தித்த அவனுடைய தாத்தா, “என்ன தம்பி, கால்பந்தாட்டப் பயிற்சிகள் எல்லாம் ஒழுகாகப் போகின்றனவா?” என்று கேட்டார். அதற்கு அவன், “அப்படியொன்றும் சொல்லிக்கொள்வது மாதிரி இல்லை. பந்தை தட்டித் தட்டி ஆடச் சொல்கிறார்கள். அப்படி ஆடும்போது சத்தமாக ஏதாவது பாட்டை – மியூசிக்கைப் – போட்டுவிடுகிறார்கள். இதனால் பயிற்சியாளர் என்ன சொல்கிறார் என்றே கேட்பதில்லை. அதனால் என்னால் ஒழுங்காக ஆடமுடியவில்லை” என்றான்.

தாத்தாவிற்குக் கோபம் கோபமாக வந்தது. ‘என்ன இவர்கள், பயிற்சி கொடுக்கிறார்களா? இல்லை ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்துகிறார்களா?’ என்று டோனியை இழுத்துக்கொண்டு, கல்லூரியில் இருந்த கால்பந்து பயிற்சியாளரிடம் சென்றார். “என்ன நீங்கள்! இவனுக்கு சரியாகப் பயிற்சி கொடுப்பதில்லையா?” என்று சற்று கோபமாகக் கேட்டார். அதற்கு பயிற்சியாளர், “ஐயா பெரியவரே! மைதான உளவியல் (Ground Psychology) என்ற ஒன்று இருக்கின்றது… இன்னும் தெளிவாகச் சொல்கிறேன் கேளுங்கள். கால்பந்து போட்டியில் விளையாடுகின்றபோது, மைதானத்தில் பார்வையாளராக இருக்கின்ற பலரும் பலவாறு கத்துவார்கள். சிலர் பாராட்டுவார்கள். சிலர் கடுமையாகத் திட்டுவார்கள். அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் இலக்கை நோக்கி முன்னேறிச் செல்வதற்காகத்தான் மியூசிக்கை சத்தமாகப் போட்டு பயிற்சி கொடுக்கிறேன்” என்றார். பயிற்சியாளர் இந்த உண்மையை விளக்கிச் சொன்னதும் தாத்தா அமைதியானார்.

கால்பந்தாட்டப் போட்டியில் மட்டுமல்ல, நம்முடைய வாழ்க்கையிலும் பலர் நம்மை ஏசுவர், பேசுவர். அவற்றை எல்லாம் உதறித்தள்ளிவிட்டு இலக்கில் மட்டுமே கவனத்தை வைத்து, அதை நோக்கி விரைந்தோம் என்றால், நமக்கு வெற்றியானது நிச்சயம் கிடைக்கும்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, யூதர்களின் முரண்பட்ட வாழ்க்கையைக் கடிந்துகொள்கின்றார். இயேசு கிறிஸ்து, யூதர்களை ஏன் கடிந்துகொள்ளவேண்டும் என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

திருமுழுக்கு யோவான் காட்டிற்குச் சென்று கடுந்தவம் புரிந்து, மிகச் சாதாரண உடை உடுத்திக்கொண்டு, மெசியாவின் வருகைக்காக மக்களைத் தயாரித்து வந்தார். மக்களோ அவரைப் பேய்பிடித்தவன் என்று விமர்சித்தார்கள். இயேசுவோ இதற்கு முற்றிலுமாக மாறாக, ஒரு குடும்பச் சூழலில் வளர்ந்து, எல்லா மக்களோடும் பேசிப் பழகி, அவர்களோடு உண்டும் குடித்தும் வந்தார். ஆனால் மக்களோ அவரை பாவிகளின் நண்பன், பெருந்தீனிகாரன் என்று விமர்சித்தார்கள். இவ்வாறு எப்படி வாழ்ந்தாலும் விமர்சித்துக் கொண்டே யூதர்கள் இருந்ததால்தான், இயேசு அவர்களைச் சாடுகின்றார்.

யூதர்கள் தங்களை விமர்சிக்கின்றார்களே என்பதற்காக திருமுழுக்கு யோவானும் சரி, இயேசுவும் சரி, தாங்கள் எடுத்த காரியத்திலிருந்து, இலட்சியத்திலிருந்து பின்வாங்கவில்லை என்பதுதான் நாம் இங்கே கற்றுக்கொள்ளவேண்டிய பாடமாக இருக்கின்றது. பலநேரங்களில் நாம் யாராவது நம்மை விமர்சித்துவிட்டால் அல்லது தகாத வார்த்தைகளைச் சொல்லி திட்டிவிட்டால், நம்முடைய அத்தனை முயற்சியையும் மூட்டை கட்டிவிட்டு, மூலையில் ஒடுங்கிப் போய்விடுகின்றோம். வாழ்க்கை என்றால் மேடு, பள்ளம், ஏற்றம், இறக்கம், ஏச்சு, பேச்சு இருக்கத்தான் செய்யும். அதற்காக நாம் நம்முடைய முயற்சிகளை மூட்டை கட்டி வைப்பது எந்தவிதத்தில் நியாயம்?.

ஒருமுறை ஒரு தன்னம்பிக்கைப் பேச்சாளர் ஒரு மேடையில் இவ்வாறு சொன்னார், “உசுப்பேத்துறங்கள உம்முன்னு… கடுப்பேத்துறவங்கள கம்முன்னு கடந்து போனா… வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்” என்று. ஆம். நம்முடைய வளர்ச்சிக்கு எந்தவிதத்திலும் உதவாத விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் கடந்துபோவதுதான் வெற்றிக்கான தலைசிறந்த வழியாகும். திருமுழுக்குக் யோவானும் இயேசுவும் நமக்கு அத்தகைய பாடத்தைக் கற்றுத் தருகின்றார்கள்.

ஆகவே, நம்முடைய வாழ்வில் நம்மீது சுமத்தப்படும் விமர்சனங்களாய், ஏச்சு, பேச்சுகளை அப்படியே ஒதுக்கித் தள்ளிவிட்டு, இலக்கை நோக்கி தொடர்ந்து முன்னேறிச் செல்வோம். இறைவனைத் தவிர எவருக்கும் அஞ்சிடாதது வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.