மறையுரைச் சிந்தனை (டிசம்பர் 11)

அவ்வாறே இச்சிறியோருள் ஒருவர்கூட நெறிதவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்”

கவிஞர் கண்ணதாசனிடம் வித்தியாசமான ஒரு வழக்கம் இருந்தது. அவர் தன்னுடைய பதினான்கு பிள்ளைகளுக்கு தேர்வு முடிவுகள் வெளிவரும் நேரத்தில் பரிசுகள் கொடுப்பது வழக்கம்.

இப்படி ஒருமுறை அவர் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு நூறு ரூபாய் வீதம் பரிசுகொடுத்துக் கொண்டிருந்தார். தேர்வில் வெற்றிபெற்ற எல்லாரும் வரிசையில் வந்து, அவரிடம் பரிசு வாங்கிக்கொண்டு போனார்கள். ஒருவனைத் தவிர.

“பதிமூன்று பேர் பரிசு வாங்கிவாங்கிவிட்டீர்கள், இன்னும் ஒருவனை எங்கே?” என்று அவர் அவர்களிடம் கேட்டபோது, அவர்களில் ஒருவன், “அவன் தேர்வில் தோற்றுவிட்டான். அதனால்தான் இங்கு வரவில்லை” என்று கேலியாகச் சொன்னான். இதைக் கேட்டதும் கண்ணதாசனுக்கு ஏதோ போல் ஆகிவிட்டது. உடனே அவர் தேர்வில் தோற்றுப்போனவனைத் தேடித்போனார். அவன் ஒரு மூலையில் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தான். அவனை அள்ளியெடுத்த கண்ணாதாசன் அவனைத் தேற்றி அவனுக்கு இருநூறு ரூபாய் பரிசு கொடுத்தார்.

தந்தையானவர் தேர்வில் தோற்றவனுக்கு இருநூறு ரூபாய் பரிசு கொடுத்திருக்கின்றார் என்ற செய்தி மற்ற பிள்ளைகளுக்குத் தெரியவர, அவர்கள் கொதித்தெழுந்தார்கள். “தேர்வில் வெற்றிபெற்ற எங்களுக்கு 100 ரூபாயைக் கொடுத்துவிட்டு, தேர்வில் தோற்றுப்போன இவனுக்கு எப்படி 200 ரூபாய் கொடுக்கலாம்?” என்று கண்ணதாசனிடம் சண்டை பிடித்தார்கள். அப்போது கண்ணதாசன் ஒரு தந்தைக்குரிய பாசத்துடன், “என் அன்பு மக்களே! தேர்வில் வெற்றிபெற்ற நீங்கள் சந்தோசமாக இருப்பீர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு நூறுருபாய் பரிசு கொடுத்தால், இன்னும் கொஞ்சம் சந்தோசமாக இருப்பீர்கள். ஆனால், தேர்வில் தோற்ற இவன் அப்படியில்லை. அவன் தேர்வில் தோற்றதால் மனமுடைந்து இருந்திருக்கிறான். அப்படிப்பட்டவன் உங்கள் அளவுக்கு சந்தோசமாக இருக்கவேண்டுமெனில், அவனுக்கு இருநூறு ரூபாய் கொடுத்தால்தான் ஈடாகும்… இப்போதைக்கு தேர்வில் தேறிய உங்களைவிடவும், தேர்வில் தோற்ற இவனுக்குத்தான் என்னுடைய அன்பும் அரவணைப்பும் தேவை” என்றார்.

எப்படி தேர்வில் தோற்ற மகன்மீது கண்ணதாசனுக்கு அதிக அன்பு இருந்ததோ, அதுபோன்று ஆண்டவராகிய இயேசுவுக்கு பாவம் செய்து, வழிதவறி அலைகின்ற பாவிகள்மீது அதிக அன்பு உண்டு. அந்த அன்பை/ உண்மையை எடுத்துச் சொல்வதுதான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வருகின்ற காணாமல் போன ஆடு உவமை.

காணாமல் போன ஆடு உவமையில், ஆயன் தொண்ணூற்று ஒன்பது ஆடுகளையும் விட்டு, வழிதவறிப் போன ஆட்டினைத் தேடிச் செல்கின்றார். அதைத் தேடிக் கண்டுகொண்டதும் மட்டில்லா மகிழ்ச்சி அடைகின்றார். இந்த உவமையின் வழியாக, இயேசு தன்னை ஒரு நல்ல ஆயனாக மக்களிடத்தில் எடுத்துச் சொல்கின்றார். ஆயர்களில் ஒருசிலர் கூலிக்கு மேய்ப்பவர்கள் உண்டு. அப்படிப்பட்டவர் ஆடுகளின் மீது அவ்வளவாக அக்கறை காட்டுவது கிடையாது. அவற்றுக்கு ஏதாவது ஓர் ஆபத்து வந்துவிட்டது என்றால், தங்களுடைய உயிரைத்தான் பெரிதாக நினைப்பார்களே ஒழிய, ஆடுகளை நினைத்துப் பார்ப்பது கிடையாது. ஆனால், இயேசு அப்படி கிடையாது. அவர் ஆடுகளாகிய நமக்கு எதையும் செய்வார். தன்னுடைய உயிரைத் தந்துகூட நம்மைக் காப்பாற்றுவார்/ காப்பாற்றினார். அப்படி ஆடுகளுக்காக தன்னுடைய உயிரையும் தருவதால், அவர் நல்ல ஆயராக விளங்குகின்றார்.

இயேசு ஒரு நல்ல ஆயராக விளங்க இன்னொரு காரணம், அவர் காணாமல் போனதை தேடிக் கண்டடையும் போது மட்டில்லா மகிழ்ச்சி அடைகின்ற ஒருவராக இருக்கின்றார். சில ஆயர்கள் காணாமல் போன ஆட்டைத் தேடிக் கண்டுபிடித்துவிட்டால், அதை அடி அடியென அடித்து, அதை ‘கவனிக்கிற விதமே’ வேறு. ஆனால், இயேசுவோ காணாமல் போனதைக் கண்டுபிடிக்கின்றபோது மகிழ்கின்ற ஒருவராக இருக்கின்றார். ஆம், அவர் பாவத்தால் வழிதவறிப் போன மக்கள், தங்களுடைய பாவத்தை உணர்ந்து, அவரிடத்தில் திரும்பி வருகின்றபோது மிகவும் மகிழ்கின்ற ஒருவராக இருக்கின்றார்

Comments are closed.