டிசம்பர் 6 : வியாழன். நற்செய்தி வாசகம்

என் தந்தையின் திருவுளப்படி செயல்படுபவரே விண்ணரசுக்குள் செல்வர்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 21, 24-27

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “என்னை நோக்கி, `ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்.

ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.

நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மறையுரைச் சிந்தனை :

சொல்லைவிட செயல் பெரிது!

அது ஒரு துறவுமடம். அந்த துறவுமடத்தில் இருந்த தலைமைத் துறவி, தன்னுடைய சாவு நெருங்கி வந்துவிட்டதை உணர்ந்தார். எனவே அவர் தான் மிகவும் மதித்த சீடனைக் கூப்பிட்டு பேசத் தொடங்கினார். “என் அன்புச் சீடனே! எனக்கு சாவு நெருங்கி வந்துவிட்டது என்று நன்றாகவே தெரிகின்றது. இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே உயிர் வாழ்வேன் என்று நினைக்கிறேன். நான் இறந்தபிறகு நீதான் இந்த துறவுமடத்தை தலைமை தாங்கி வழிநடத்தவேண்டும்” என்றார். துறவி தொடர்ந்து பேசப் பேச, சீடனுடைய கண்களிலிருந்து கண்ணீர் தாரைதாரையாக வழிந்தோடியது.

அப்போது துறவி தன்னிடத்தில் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்து சீடனுடைய கையில் கொடுத்துச் சொன்னார், “இந்த புத்தகத்தை வாங்கிக்கொள். இந்தப் புத்தகத்தில் நம்முடைய சபை போதிக்கும் எல்லா ஞானமும் உள்ளது. கடந்த ஏழு தலைமுறையாக இது போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. எனவே, நீயும் இதை வைத்துக்கொண்டு போதனை செய். உனக்கு இந்தப் புத்தகம் மிகவும் உதவும்” என்றார். உடனே சீடன் தலைமைத் துறவியிடம், “ஐயா! வாழ்க்கையில் நாங்கள் பெறவேண்டிய ஞான வழிகள் எல்லாவற்றையும் நீங்கள் எங்களுக்குப் போதித்து விட்டீர்கள். அதன்படி வாழ்ந்தும் காட்டிவிட்டீர்கள். நீங்கள் சொல்லாத ஞானமா இந்த புத்தகத்தில் இருக்கக்போகிறது? இந்தப் புத்தகம் எனக்கு வேண்டாம்” என்றார்.

அதற்கு தலைமைத் துறவி சீடனிடம், “ஐய்யனே!, நான் உன் தட்டில் இடும் பிச்சையாக எண்ணி இதை வாங்கிக்கொள்” என்றார். இப்படிச் சொல்லிவிட்டு துறவி, சீடனின் கையில் அந்தப் புத்தகத்தைக் கொடுத்தார். சீடன் அந்தப் புத்தகத்தை வாங்கிய மறுகணம், அதை தீயில் போட்டு எரிக்கத் தொடங்கினான். அதுவோ சிறிது நேரத்தில் எரிந்து சாம்பலானது. துறவியோ அதிர்ச்சி மேலிட அதையே பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது சீடன் துறவியைப் பார்த்துச் சொன்னான், “வாழக்கையில் நாங்கள் பெற வேண்டிய எல்லா ஞானத்தையும் நீங்கள் எங்களுக்கு வாழ்ந்து காட்டிவிட்டீர்கள். அந்த ஞானம் எங்கள் நினைவுகளில், செயல்களில் நிச்சயமாகப் பிரதிபலிக்கும். வெறும் புத்தக ஞானம் எங்களுக்குத் தேவையில்லை” என்று கண்களில் ஒளி பொங்கப் பேசினான். சீடன் சொன்னதை அப்படியே அமோதித்த துறவி, அவனை மனதார ஆசிர்வதித்து அனுப்பினார்.

ஆயிரமாயிரம் வார்த்தைகள்/ போதனைகளைவிடவும் ஒரு செயல்/ வாழ்ந்து காட்டும் வாழ்க்கை சிறந்தது என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு, நாம் ஆழமாக சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, “என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளப்படி நடப்பவரே செல்வர்” என்கின்றார். இயேசுவின் இவ்வார்த்தைகள் ஆழமாக சிந்தித்துப் பார்க்கப் படவேண்டியவையாக இருக்கின்றன. சிலர், நாள் தவறாமல், நேரம் தவறாமல் ஆண்டவருடைய திருநாமத்தைச் சொல்லி வழிபடுவதுண்டு. ஆனால், அவர்களுடைய நடைமுறை வாழ்க்கையோ, அன்றாடம் அவர்கள் வழிபட்டதற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். இப்படி வாழ்க்கின்ற வாழ்க்கை ஒன்றாகவும் வழிபடுவது வேறொன்றாகவும் இருக்கிறவர்கள் ஒருநாளும் விண்ணரசுக்குள் நுழையமுடியாது என்று இயேசு கிறிஸ்து மிக அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றார்.

இயேசு இதனைச் சொல்லிவிட்டு தொடர்ந்து சொல்கின்ற உவமையும் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது. யாராருடைய வாழ்க்கையெல்லாம் வழிபடுவது ஒன்றாகவும் வாழ்வது வேறொன்றாகவும் இருக்கின்றதோ அவர்கள் அனைவரும், மணல்மீது வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பானவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்டவர் நிலைத்து நிற்கமாட்டார்கள். மாறாக, எவர் ஒருவருடைய வாழ்க்கை, வழிபடுவதும் வாழ்வதும் ஒன்றாக இருக்கின்றதோ, அவர்கள் பாறையின்மீது வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பானவர்களாக இருப்பார்கள். அவர்கள் என்றுமே நிலைத்திருப்பார்கள் என்று ஆண்டவர் இயேசு மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றார்.

இந்த இருவரில் நாம் யாராக இருக்கின்றோம் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பெரும்பாலான நேரங்களில் நாம் இறைவார்த்தையை கேட்டும் ஒருசில பக்திமுயற்சிகளை மேற்கொண்டுவிட்டும் அப்படியே இருந்துவிடுகின்றோம்; இறைவார்த்தை போதிப்பதை நம்முடைய வாழ்வில் கடைபிடிக்கத் தவறிவிடுகின்றோம். அதனாலேயே நம்முடைய வாழ்வு உறுதி இல்லாமல் இருக்கின்றது. தூய யாக்கோபு தன்னுடைய திருமுகத்தில் சொல்வார், “இறைவார்த்தையைக் கேட்பவர்களாக மட்டும் இருந்து உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். அதைக் கடைப்பிடிப்பவர்களாகவும் இருங்கள்” என்று (யாக் 1:22).

நாம், இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பவர்களாக இருப்போம். சொல்லை விட, செயல் உயர்ந்தது என உணர்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.