அர்ச்சியசிஷ்ட அந்தோணியாரை நோக்கி இரண்டாம் மன்றாட்டு.
உபத்திரவப்படுகிறவர்களுக்கு ஊக்கமுள்ள சிநேகிதருமாய், கச்திப்படுகிரவர்களுக்கு உமது ஆறுதல் உதவிகளை ஏராளமாய்ப் பொழிகிறவருமாகிய பேறு பெற்ற புனித அந்தோனியாரே! இத்தேவாலயத்தில் உம்மைத் தேடி வணங்க வருகிற நிர்பாக்கிய பாவியின் பேரில் நீர் வீற்றிருக்கும் மாட்சிமை தாங்கிய மேலான சிம்மாசனத்தினின்று கிருபா நோக்கம் பாலித்தருளும். நீர் ஒரு நாள் போலோனியா பட்டணத்து வங்கிஷபதியான ஓர் பெண் பிள்ளைக்கு கேள்வியுற அருளிய ஆறுதல் நிறைந்த வார்த்தைகளை ஞாபகப்படுத்திக்கொள்ளும். தொடர்ச்சியாய் ஒன்பது செவ்வாய்க்கிழமை நமது சுரூபத்தைச் சந்தித்து வருவாயானால் உன் மன்றாட்டு கையேற்றுக் கொள்ளப்பட்டது என்று நீ அறிந்து கொள்ளுவாய் என்று திருவுளம் பற்றினீரே! இந்தக் கட்டளையை நிறைவேற்ற வேண்டி உமது சுரூபத்தை இக்கோவிலில் சந்திக்க வந்து அதன் முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து உமக்கு என் அவசரங்களைச் சொல்லிக் காட்டுகிறேன்.
மகா பேறு பெற்ற அர்ச்சிஷ்டவரே! கிருபை தயாபத்தின் விலை மதிக்கப்படாத பாத்திரமே! பரிசுத்தத்தனம் முதலிய சகல புண்ணியங்களும் விளங்கும் மாணிக்கமே! அடியேன் உம்மை வணங்கி உமது சுரூபத்தைத் தோத்தரிக்கிறேன். இச்சுரூபத்திற்கு முன் முழந்தாழ்ப்படியிட்டு என் ஆத்துமத்தைத் தாழ்த்தி என் அவசரங்களை உமக்குச் சொல்லிக் காட்டி, இரக்கமுள்ள உமது இருதயத்தின் தயாளத்தைக் கெஞ்சி மன்றாடுகிறேன். உமது சுரூபத்திலல்லாமல் வேறெங்கே நான் உம்மைக் கண்டடைவேன்? உமது பீடத்திற்கு அருகாமையிலன்றி வேறெங்கே நான் உமது அருகில் நெருங்குவேன்? பரிசுத்தராகிய நீர் என் கண்முன்னே நிற்பதைக் காண்பேனாகில் உம்மைக் கனப்படுத்த நான் எவ்வளவோ தீவிரத்துடன் ஓடி வருகிறேன். உமது திருப்பாதங்களைத் தாழ்ச்சியுடன் வணங்கி முத்தம் செய்ய எவ்வளவோ ஆசிப்பேன். உம்மைக் கட்டி முத்தமிடவும், உம்மிடத்தில் பேசவும் என் ஆவல் எவ்வளவோ பெரிதாய் இருக்கும். இவ் விஷேசித்த கிருபை எனக்குக் கிடையாததினாலல்லோ, உம்மையே பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தால் நான் உமக்கு எவ்வித மகிமைகளைச் செலுத்துவேனோ, அந்த மகிமைகளையே உமது சுரூபத்திற்குச் செலுத்த ஆசிக்கிறேன்.
ஆகையால் புனித அந்தோனியாரே! நான் உம்மை வணங்குகிறதுமல்லாமல் நான் உமக்குச் செலுத்த வேண்டிய மரியாதையோடு குற்றம் நிறைந்த என் சிரசை உமக்கு முன்பாகத் தாழ்த்தி பாவக்கறைபட்ட என் கண்களை உமது பேரில் நோக்குகிறேன். கஸ்திப்படும் என் இருதயம் உம்மை நோக்கித் தாவுகிறது. ஆத்துமங்களுக்கு உண்மையான ஆறுதல் தரும் உன்னத புனித அந்தோனியாரே! என் துன்மார்க்கங்களை முன்னிட்டு உமது ஆதரவை அடைய நான் அபாத்திரவானென்பது உண்மையிலும் உண்மை. தெய்வ மகத்துவத்திலும் உமது மன்றாட்டின் உதவியினாலும் நீதிமான்களை மாத்திரமல்ல, மெய்யான பக்தியோடும், உறுதியான நம்பிக்கையோடும் உம்மை நாடி வரும் பாவிகளையும் ஆறுதல் படுத்த சித்தமாய் இருக்கிறீர். ஆகையால் என் நெருக்கடியான அவசரங்களில் நான் உம்மை அண்டி வந்து என் முழு இருதயத்தோடு உமது தாள நெருக்கத்தை நோக்கி அபயமிடுகிறேன். என் வேண்டுதல் உமது சன்னதி மட்டும் வரக்கடவது. இரக்கமுள்ள இருதயமே! எனது பெருமூச்சுகளைக் கேட்கக்கக் கடவது.
ஒ என் அன்புக்குரிய தந்தையே! என் இக்கட்டு ஏக்க கலக்கங்களை நீர் அறிவீர். நான் கேட்பதைக் கடவுளிடத்தினின்று நீர் எளிதில் அடைந்து கொடுப்பீர். உமது கைகளால் தழுவப்பட சித்தமான நேசத்திற்குரிய இயேசு உமது ஆசைக்கு இணங்காதிருப்பாரோ? உலக எத்திசையிலும் அதிசயிக்கப்படும் உமது இரக்கப் பெருக்கத்தை நான் கொண்டாட விடை கொடுத்தருளும். நிர்பாக்கியப் பாவிகளின் மட்டில் நீர் காட்டும் உதாரத்துவத்தையும் உருக்கமுள்ள விசுவாசத்தோடு உம்மை மன்றாடுகிற நிர்பாக்கியங்களை ஆறுதல்படுத்த நீர் எடுத்துக் கொள்ளும் கவலையையும், உமது ஒத்தாசையைக் கேட்ட ஏறக்குறைய அனைவரும் ஏற்கனவே கண்டறிந்து இருக்கிறார்கள். ஆகையால் என் மன்றாட்டை உமது கரங்களில் ஒப்புவித்து உமது பாதுகாவலில் வைக்கிறேன். என் ஆசை விருப்பங்களை உமது நல்ல இயேசுவுக்கு ஒப்புக்கொடும். அவர் அவைகளைத் தமது திருச்சித்தத்தின்படியே கேட்கக் கடவாராக! ஆமென்
Comments are closed.