டிசம்பர் 4 : செவ்வாய். நற்செய்தி வாசகம்

இயேசு தூய ஆவியால் பேருவகையடைகிறார்.

+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 21-24

அக்காலத்தில் இயேசு தூய ஆவியால் பேருவகையடைந்து, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன்.

ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.

ஆம், தந்தையே, இதுவே உமது திருவுளம்” என்றார். “என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார். தந்தை யாரென்று மகனுக்குத் தெரியும்; மகன் யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தெரியும். வேறு எவரும் தந்தையை அறியார்” என்று கூறினார்.

பின்பு அவர் தம் சீடர் பக்கம் திரும்பி அவர்களிடம் தனியாக, “நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்புப் பெற்றோர் பேறுபெற்றோர்.

ஏனெனில் பல இறைவாக்கினர்களும் அரசர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண விரும்பினார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மறையுரைச் சிந்தனை :

“ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்”

புறநகர் பகுதி ஒன்றில் “தனக்கு எல்லாம் தெரியும்” என்று இளைஞன் ஒருவன் இருந்தான். அவனுடைய வீட்டுக்குப் பின்புறம் பெரிய மரமொன்று இருந்தது. அது இடி விழுந்து கருகிப்போனதால், அதை அறுத்து பலகையாக்க நினைத்தான். வேலையாட்களைக் கூப்பிட்டு மரத்தை அறுக்கச் சொன்னால், அவர்களுக்கு கூலி கொடுத்து மாளாது (?) என நினைத்துக்கொண்டு, அவனாகவே அதை அறுத்து பலகையாக்க முடிவுசெய்தான்.

எனவே அவன் நகரத்தில் இருந்த ஒரு பிரபலமான கடைக்குச் சென்று, மரத்தை அறுப்பதற்கான ‘அரம்’ ஒன்றைக் கேட்டு வாங்கினான். கடைக்காரரோ அவனிடத்தில் அரத்தைக் கொடுக்கும்போது, “தம்பி! இந்த அரம் மிகவும் கூர்மையானது, அதனால் நீ இதை பார்த்துப் பயன்படுத்தவேண்டும். மேலும் நீ இதைப் பயன்படுத்தும்போது இதனுடைய ஓரத்தில் கட்டப்பட்டிருக்கின்ற கயிற்றைப் பிடித்துக்கொண்டு பயன்படுத்தவேண்டும். ஒருவேளை இந்த அரம் உன்னுடைய பயன்பாட்டுக்குச் சரிவரவில்லை என்று சொன்னால், இதை நீ என்னிடம் திரும்பிக் கொடுத்துவிடலாம், நானும் இதற்குண்டான பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்” என்று சொல்லிக் கொடுத்து அனுப்பினார். இளைஞனும் அதை வாங்கிக்கொண்டு தன்னுடைய வீட்டிற்கு கிளம்பிப் போனான்.

போனவன் மறுநாளே கடைகாரரிடம் திரும்பி வந்து, “என்ன அரம் இது, மரத்தை சரியாகவே அறுக்க மாட்டேன் என்கிறது” என்றான். கடைக்காரனுக்கு ஒன்றும் புரியவில்லை. “என்னது, நான் கொடுத்த அரம் மரத்தை சரியாக அறுக்கவில்லையா?… அந்த அரத்தை என்னிடத்தில் தா” என்றார். இளைஞனும் அவரிடம் அரத்தைக் கொடுத்தான். அரத்தைப் பார்த்த கடைக்காரர் அதிர்ந்துபோனார். ஏனெனில் அந்த அரத்தின் நுனியில் கட்டப்பட்டிருந்த கயிறானது அவிழ்க்கப்படவே இல்லை, அது அப்படியே இருந்தது. உடனே அவர் அந்த இளைஞனிடம், “தம்பி! உன்னிடத்தில் இந்த அரத்தைக் கொடுக்கும்போது என்ன சொல்லிக் கொடுத்தேன், அரத்தில் கட்டப்பட்டிருக்கின்ற கயிற்றை அவிழ்த்துவிட்டுத்தானே மரத்தை அறுக்கச் சொன்னேன். நீ என்னடா என்றால், கயிற்றை அவிழ்காமல் அப்படியே வைத்திருக்கின்றாயே” என்று மிகவும் வருத்தப்பட்டார்.

பின்னர் அந்த அரத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்த்துவிட்டு, அருகே கிடைத்த ஒரு கட்டையை சரசரவென அறுத்தார். அது கண்ணிமைக்கும் நேரத்துக்குள் இரண்டு துண்டாகிப் போனது. இதைப் பார்த்த அந்த இளைஞன், இந்த ஒரு சாதாரண விசயம்கூட தெரியாமல், ‘எல்லாம் தெரிந்தவன் நான்’ என்று பீற்றிக்கொண்டு அலைகின்றோனே என்று வெட்கித் தலைகுனிந்து நின்றான்.

‘தனக்கு எல்லாம் தெரியும்’ என்ற செருக்கோடு இருப்பவர்களுக்கு சாதாராண விஷயங்கள்கூட தெரியாமல் இருப்பதும் ஞானமில்லாமல் இருப்பதும் அன்றாடம் நாம் கண்கூடாகப் பார்க்கக்கூடிய விசயங்களாக இருக்கின்றன.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, தூய ஆவியால் பேருவகையடைந்து, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்” என்கின்றார். இறைஞானம் குழந்தைகளுக்கும் அதைவிட, குழந்தை உள்ளம் கொண்டவர்களுக்கும் வெளிப்படுத்தப்படுத்தப்படுகின்றது. இதற்கு மிக முக்கியமான காரணம் ஒன்றே ஒன்றுதான். ஞானிகளும் அறிஞர்களும் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற ஆணவத்தில் இருகிறார்கள். ஆனால் குழந்தைகளோ அப்படியில்லை. அவர்கள் தாழ்ச்சியின் மறுவுருவாக இருக்கிறார்கள். அதனாலேயே அவர்களுக்கு இறை ஞானமானது வெளிப்படுத்தப்படுகின்றது.

இன்றைய நற்செய்தியின் இறுதியில் ஆண்டவர் இயேசு, தம் சீடர்கள் பக்கம் திரும்பி, “நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்புப் பெற்றோர் பேறுபெற்றோர்” என்கின்றார். இதுவும் இயேசு மேலே சொன்ன வார்த்தைகளும் ஒத்துப்போகத்தான் செய்கின்றது. ஏனென்றால், யூதர்கள் இயேசுவை கண்களால் கண்டபோதும் அவர்கள் அவர்மீது நம்பிக்கை கொள்ளவில்லை, மாறாக அவர்கள் இயேசுவோடு எப்போதும் பிரச்சனையில்தான் ஈடுபட்டார்கள். ஆனால், சீடர்களோ அப்படியில்லை, அவர்கள் இயேசுவைக் கண்டு, அவரே இறைமகன் என்று நம்பினார்கள். அது மட்டுமல்லாமல், அவர்கள் பார்வைக்கு எளியவர்களாகவும் உள்ளத்தில் கள்ளம் கபடு அற்றவர்களாகவும் இருந்தார்கள். அதனாலே அவர்களுக்கு மெசியா வெளிபடுத்தப்பட்டார். நாம் உள்ளத்தில் தாழ்ச்சியோடு இருக்கின்றோமா? அல்லது செருக்கோடு இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

எருசலேமில் உள்ள The Church of the Nativity of Christ என்ற ஆலயத்தின் வாசல் மிகவும் குறுகியது. அதன் உள்ளே செல்லக்கூடியவர் தலையைத் தாழ்த்தித்தான் உள்ளே செல்லமுடியும். இல்லையென்றால் தலையில் பலத்த அடிதான் விழும். இதைக் குறித்துச் சொல்லும் பேராயர் புல்டன் சின், “யாராரெல்லாம் இறைவனுக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்திக் கொள்கின்றார்களோ, அவர்களுக்கே இறைவன் காட்சி அளிப்பார்” என்று. இதுதான் உண்மை, இதுதான் இன்றைய நற்செய்தியின் இரத்தினச் சுருக்கம்.

ஆகவே, ஆணவத்தோடு அல்லாமல், உள்ளத்தில் தாழ்ச்சியோடு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.