மறையுரைச் சிந்தனை (டிசம்பர் 01)

உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தால் மந்தமடையாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள்”

மது அல்லது குடிவெறி எவ்வளவு கொடியது என்பதை விளக்க அரபுநாடுகளிலே சொல்லப்படுகின்ற ஒரு கதை.

ஒருசமயம் இளைஞன் ஒருவன் காட்டுவழியாக நடந்துபோய்க்கொண்டிருந்தான். அது ஆள் அரவம் இல்லாத காடு. ஒரு திருப்பத்தில் அவன் திரும்பியபோது, பெண்ணொருத்தி கையில் குழந்தையோடு எதிரே நடந்து வந்துகொண்டிருந்தாள். இந்த நட்ட நடுக்காட்டில் எப்படி இந்தப் பெண்மணியால் தனியாக நடந்துவர முடிகிறது என்று அவன் ஆச்சரியப்பட்டான்.

அவன் இவ்வாறு யோசித்துக்கொண்டிருக்கும்போதே, அவனுக்கு முன்பாக சாத்தான் தோன்றியது. அதைப் பார்த்ததும் அவன் திடுக்கிட்டான். அப்போது சாத்தான் அவனிடம், “இப்போது நீ மூன்று பாவங்களில் ஒன்றைச் செய்யவேண்டும்” என்றது. “மூன்று பாவங்களா? அவை என்னென்ன?” என்று வியப்பு மேலிடக் கேட்டான் இளைஞன். உடனே சாத்தான் அவனிடம், “ஒன்று, இந்தப் பெண்ணைக் கெடுக்கவேண்டும், இரண்டு, இந்தப் பெண்ணின் கையிலுள்ள குழந்தையைக் கொல்லவேண்டும், மூன்று, என் கையில் உள்ள இந்த மதுபானத்தைக் குடிக்கவேண்டும். இதில் ஏதாவது ஒன்றைக் கட்டாயம் செய்தாகவேண்டும். இல்லையென்றால் நான் உன்னை அடித்தே கொன்றுவிடுவேன்” என்று மிரட்டியது.

இளைஞன் ஒருகணம் யோசித்தான். பெண்ணைக் கெடுப்பது பெரிய பாவம், அதைவிடவும் அவளுடைய கையிலுள்ள குழந்தையைக் கொல்வது மிகப்பெரிய பாவம். மதுபானத்தைக் குடிப்பதுதான் இருப்பதிலே சிறிய பாவம் என யோசித்துவிட்டு, சாத்தானின் கையில் இருந்த மதுபானத்தை வாங்கி மடமடவெனக் குடித்தான். அவன் மதுபானத்தைக் குடித்த மறுகணம் போதை தலைக்கேறியது. அதனால் அவன், தான் என்ன செய்கிறேன் என்று தெரியாமல், அந்த பெண்மணியைப் பிடித்து, அவளுடைய வாழ்வை சீரழித்தான். அடுத்த சில நிமிடங்களிலேயே அந்தப் பெண்ணின் கையில் இருந்த குழந்தையைப் பிடித்து இழுத்து, அருகில் கிடந்த கல்லில் ஓங்கி ஒரு அடி அடித்துக் கொன்றே போட்டான்.

அவன் குழந்தையைக் கொன்றபின்தான் தெரிந்தது தான் செய்தது எல்லாம், மகா மகாப் பாவங்கள் என்று. அவன் தன்னுடைய தவற்றுக்காக கண்ணீர் விட்டு அழுதான். அப்போது சாத்தான் மீண்டுமாக அவனுக்கு முன்பாகத் தோன்றி, “நான் உன்னை மகாப் பாவியாக்க நினைத்தேன், அதனால்தான் இந்த மதுவைக் கையில் எடுத்தேன்” என்று சொல்லிவிட்டு மறைந்துபோனது.

மதுவும் குடிவெறியும் மனிதன் செய்யக்கூடிய எல்லாப் பாவங்களுக்கும் அடிநாதமாக இருக்கின்றது என்ற உண்மையை விளக்கிச் சொல்லும் இந்தக் கதை நமது சிந்தனைக்குரியது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறு, அந்நாள் திடிரென வந்து ஒரு கண்ணியைப் போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள்” என்கின்றார். மானிட மகனுடைய இரண்டாம் வருகையைக் குறித்துப் பேசும் இயேசு, அவருடைய வருகை எந்நேரத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆகவே, அதற்காக தயார் நிலையில் ஒவ்வொருவரும் இருக்கவேண்டும் என்று தன்னுடைய சீடர்களைப் பார்த்துக் கூறுகின்றார்.

மானிட மகனுடைய வருகையின்போது, நாம் தயார்நிலையில் இருப்பதற்கு குடிவெறி, களியாட்டம், உலகப் போக்கிலான வாழ்க்கை குறித்த கவலைகள் எல்லாம் தடையாக இருக்கலாம். அதனால்தான் இயேசு, இதைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள் என்கின்றார். நோவாவின் காலத்தில் மக்கள் உண்டும் குடித்தும் உலகப் போக்கிலான வாழ்க்கை வாழ்ந்தும் கடவுளையே மறந்துநின்றார்கள். அதனால்தான் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, நோவாவின் குடும்பம் தவிர மற்ற எல்லாரும் அழிந்துபோனார்கள். நாமும் அப்படி அழிந்து போகக்கூடாது என்பதற்காகத்தான் இயேசு நம்மை எச்சரிக்கின்றார்.

ஆனால், இன்றைக்கு தமிழகத்திலும் சரி, உலகெங்கிலும் சரி, பெரும்பாலோர் போதைக்கு அடிமையாகி இருபதைக் காணமுடிகின்றது. தமிழகத்தில் ஒருகாலத்தில், அரசாங்கம் கல்வியைத் தந்தது, தனியாரோ சாராயம் தந்தது. ஆனால், இன்றைக்கு தனியார் கல்வியையும் அரசாங்கம் சாராயத்தையும் தந்துகொண்டிருக்கும் அவலநிலைதான் இருக்கின்றது. சாராயத்தை அரசாங்கமே கையில் எடுத்தால்தான் எங்கும் குற்றங்கள் மலிந்துவிட்டன. இத்தகைய ஒரு இழிபிழைப்பிலிருந்து மக்கள் விழித்துக் கொள்வது எப்போதோ?.

மானிடமகனுடைய வருகைக்காக தயார்நிலையில் இருக்கச் சொல்லும் இயேசு, விழித்திருந்து மன்றாடுங்கள் என்றும் சொல்கின்றார். ஆம், ஜெபம்தான் நம்மை எல்லாவிதமான ஆபத்துகளிலிருந்தும் காக்கவல்ல ஓர் அற்புத ஆயுதம்.

ஆகவே, உலகப் போக்கிலான வாழ்க்கையில் மூழ்கிப்போகாமால், இறைவனிடம் எப்போதும் விழித்திருந்து ஜெபிப்போம். மானிட மகனுடைய வருகைக்காக எப்போதும் தயார்நிலையில் இருப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.