இயேசுவைப் பின்தொடர்தல், தனித்துவம் மிக்க முடிவு

இயேசுவைப் பின்தொடர்வது என்ற முடிவு, மிகவும் தனித்துவம் மிக்கது என்பதையும், அதை, உலகின் பல்வேறு கடமைகளோடு கலந்துவிடக்கூடாது என்பதையும் வலியுறுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 28, இப்புதனன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.

“பல்வேறு விடயங்களின் சுமைகளை உணரும் நாம், உண்மையில் இயேசுவைப் பின்தொடர முடியாது, ஏனெனில், நமது உள்ளம், வேறுபல பொருள்களால் நிறைந்திருக்கும்போது, அங்கு ஆண்டவருக்கு இடமின்றி போகும்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன.

மேலும், டிசம்பர் 12ம் தேதி சிறப்பிக்கப்படும் குவாதலூப்பே அன்னை மரியா திருநாளன்று, மாலை 5.30 மணிக்கு புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நடைபெறும் செபமாலை பக்தி முயற்சியையும், பின்னர் 6 மணியளவில் நடைபெறும் திருப்பலியையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலத்தீன் அமெரிக்க திருப்பீட அவை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், இத்திருநாளின்போது, அண்மித்துவரும் உலக இளையோர் நாளுக்கென சிறப்பான மன்றாட்டுக்கள் எழுப்பப்படும் என்றும், இந்த இளையோர் நாளுக்கென உருவாக்கப்பட்டுள்ள பாடல், டிசம்பர் 12ம் தேதி திருப்பலியின் இறுதியில் பாடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.