உயிர்ப்பு என்னும் உன்னதக் கொடை

கிறிஸ்தவ வாழ்வு / சீடத்துவ வாழ்வு என்பது ஒரு சொகுசான வாழ்க்கை அல்ல, அது சிலுவைகளையும் துன்பங்களையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வாழ்வு என்பதாகும். ஆண்டவர் இயேசுவுக்கும்கூட நமக்கு அதைத்தான் கற்பிக்கின்றார்.

ஒருசமயம் இயேசுவிடம் வரும் ஒருவர், “போதகரே! நீர் எங்கு சென்றாலும் நானும் உம்மைப் பின்தொடர்ந்து வருவேன்” என்று சொல்கின்றது, “நரிகளுக்கு பதுங்குக் குழிகளும் வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை” என்று சொல்லி இயேசு சீடத்துவ வாழ்வின் இன்னொரு பக்கத்தை அதாவது சிலுவைகள் நிறைந்த பக்கத்தை அவருக்குக் காட்டுவார். ஆகையால், இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம் ஒவ்வொருவரும் இந்த உண்மையை உணர்ந்து வாழ்வது நல்லது.

முன்பொரு காலத்தில் அரசர் ஒருவர் இருந்தார். அவருக்கு நீண்ட நாட்களாகியும் வாரிசே இல்லை. அதனால், தனக்குப் பின் நாட்டை ஆளுகின்ற தகுதி யாருக்கு இருக்கின்றதோ அவரை அரசராக நியமிக்கலாம் என்ற முடிவில், அவர் தன்னுடைய அமைச்சரோடு வெளியே புறப்பட்டார்.

இருவரும் நகரை விட்டு கொஞ்சம் தள்ளிச் சென்றபோது, இளைஞன் ஒருவன் கையில் சிலம்பத்தை வைத்துகொண்டு ஒற்றையாளாய் எண்பது பேரைப் பந்தாடிக்கொண்டிருந்தான். இதைப் பார்த்துவிட்டு அமைச்சர், “அரசே! இவனே அடுத்த அரசன்!, இவனிடம் அரசாங்கத்தை ஒப்படைத்தால் எதிரிகள் யாவரையும் பந்தாடிவிடுவான்” என்றார். அரசர் எதுவும் பேசாமல் முன்னோக்கி நடந்துகொண்டே இருந்தார். சிறிது நேரத்தில் இன்னொரு ஊர் வந்தது. அந்த ஊருக்குள் அவர்கள் இருவரும் சென்றபோது, மக்கள் யாவரும் அலறியடித்துக்கொண்டு ஓடிவந்தார்கள். ஏனென்று விசாரித்தபோது, ‘யானை ஒன்று ஓடிவந்துகொண்டிருக்கிறது’ என்றார்கள். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று, ஓர் ஓரமாக நின்றுகொண்டு அவர்கள் பார்க்கத் தொடங்கினார்கள்.

அப்போது அங்கு வந்த ஓர் இளைஞன் தன்னுடைய கையில் வைத்திருந்த ஒரு குச்சியைக் கொண்டு, மதம்கொண்ட யானையை கட்டுக்குள் கொண்டுவந்தான். இதைப் பார்த்துவிட்டு அமைச்சர், “அரசே! இவன்தான் நம் நாட்டை ஆட்சி செய்வதற்குப் பொருத்தமானவன்” என்றார். அதற்கும் அரசர் எதுவும் பேசாமல், நடையைக் கட்டத் தொடங்கினார். இப்படியே அவர்கள் போய்க்கொண்டிருக்கும்போது, பெரியவர் ஒருவர் இளைஞன் ஒருவனை வசைமாரிப் பொழிந்துகொண்டிருந்தார். இளைஞனோ அதற்குப் பொறுமை இழக்காமல், தன் தரப்பு நியாயங்களை எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தான். கடைசியில் அந்தப் பெரியவர் தன்னிடத்தில்தான் தவறு இருக்கின்றது என்பதை உணர்ந்தவாய், அவனிடத்தில் மன்னிப்புக் கேட்டார். இளைஞனோ அவரை மனதார மன்னித்து அனுப்பினார்.

இதைப் பார்த்துவிட்டு, அரசர், “இவன்தான் எனக்குப் பின் இந்த நாட்டை ஆள்வதற்கான தகுதியுடையவன்” என்றார். ஒன்றும் புரியாமல் விழித்த அமைச்சர், “ஏன் அப்படிச் சொல்கிறீர்?” என்று கேட்டதற்கு அவர், “இவன்தான் தன்னைக் குறித்து ஒருவர் வசைமாரிப் பொழிந்தபோது நிதானம் இழக்காமல் பொறுமையோடு இருந்தான். அது மட்டுமல்லாமல் தன்னைக் குறித்து அவதூறாகப் பேசியவரை மன்னித்தான். உண்மையில் ஒரு நாட்டை ஆளக்கூடிய அரசன், தன்னை குறித்து ஒருவர் வசைபாடுகின்றபோது, அதனை நிதானம் இழக்காமல் பொறுமையோடு சூழ்நிலையைக் கையாளத் தெரிந்திருக்கவேண்டும். அப்போதுதான் அவனால் நல்லதொரு ஆட்சியை வழங்கமுடியும். ஏனெனில் ஓர் அரசருக்கு உடல் வலிமையை விட, மனவலிமை மிகவும் முக்கியம்” என்றார்.

அரசராகுபவருக்கு மட்டுமல்ல, இயேசுவின் சீடராக மாறுபவருக்கும் துன்பங்களையும் சிலுவைகளையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வரவேண்டும்

Comments are closed.