எதிர்கொள்ளப் பயந்தாலும், இறுதி நாள் என்பது உண்மை நிலை

நம் ஒவ்வொருவரின் இறுதி அழைப்பின்போது, நாம் இறைவனை எவ்வகையில் எதிர்கொள்ளப் போகிறோம் என்பதற்கு, இப்போதே ஒவ்வொரு நாளும் தயாரித்து வருவது, இறுதி நாளின் மகிழ்ச்சியுடன்கூடிய சந்திப்புக்கு வழிவகுக்கும் என உரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருவருகைக் காலத்தின் முந்தைய வாரத்தின் இந்நாட்களில், நம் இறுதி காலத்திற்கான தயாரிப்புகள் குறித்து சிந்திக்க திருஅவை அழைப்பு விடுக்கிறது என, சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில், இச்செவ்வாய்க்கிழமை காலை திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறுதி நாள் குறித்து மனிதர்கள் சிந்திக்க விரும்புவதில்லை, அச்சிந்தனையை எப்போதும் அடுத்த நாளுக்கென தள்ளி வைக்கவே விரும்புகின்றனர் என்றார்.

இவ்வுலகின் இறுதி நாள் குறித்துப் பேசும் இந்நாளின் முதல் வாசகம் குறித்த கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, அது குறித்துப் பேச வேண்டாம் என பலர் விரும்பினாலும், இறுதி நாள் என்பது மறைக்க முடியாத உண்மை என்றார்.

இறுதி நாளில் நாம் இறைவனை சந்திக்கும்போது, தரம் வாய்ந்த கோதுமை மணிகளை, அதாவது, தரமான நம் வாழ்வை அவரிடம் கையளிக்கவும், நாம் செய்த தவறுகள் குறித்து அவரிடம் வினவவும் அழைக்கப்பட்டுள்ளோம் என்ற திருத்தந்தை, நம் இறுதி நாள் குறித்து இறைவன் ஒருவரே அறிவார் எனவும் கூறினார்.

நான் இன்றே இறைவனால் அழைக்கப்பட்டால், எத்தகைய நற்கதிர்களை அவருக்குக் கொண்டு செல்வேன் என, ஒவ்வொருவரும் ஆன்மப் பரிசோதனை செய்யத் துவங்குவது, நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்ல உதவியாக இருக்கும் எனவும், தன் மறையுரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நாம் இவ்வுலகில் ஆற்றியவைகள் குறித்த இறுதி சந்திப்பாக இது இருந்தாலும், இச்சந்திப்பு, கருணையின், மற்றும், மகிழ்ச்சியின் சந்திப்பாக இருக்கும் எனவும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் இறுதி நாள் சந்திப்பு எப்படியிருக்கும் எனவும், நாம் எவ்வகையில் இறைவன்முன் நம்மை வெளிப்படுத்தப்போகிறோம் என்பதையும் சிந்திக்க, திருஅவை இந்நாள்களில் அழைப்பு விடுக்கிறது என மேலும் கூறினார்

Comments are closed.