மறையுரைச் சிந்தனை (நவம்பர் 28)

நீங்கள் மனவுறுதியோடு இருந்து, உங்கள் வாழ்வைக் காத்துக்கொள்ளுங்கள்”

ஜான் ஒகில்வி (John Ogilvie), இயேசுவின் சபையைச் சார்ந்த மறைசாட்சியான இவர், 1579 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் பிறந்தார். இவர் சிறுவயது முதலே குருவாக மாறவேண்டும், ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லா மக்களுக்கும் அறிவிக்க வேண்டும் என்ற ஆவல்கொண்டிருந்தார். அப்படிப்பட்ட ஜான் ஒகில்வி, 1599 ஆம் ஆண்டு இயேசு சபையில் சேர்ந்து, 1610 ஆம் ஆண்டு குருவாக அருட்பொழிவு செய்யப்பட்டார்.

குருவாக அருட்பொழிவு செய்யப்பட்ட பின்பு ஜான் ஒகில்வி, கிளாஸ்கெள, எடின்பர்க் போன்ற பகுதிகளுக்குச் சென்று, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை அங்கிருந்த மக்களுக்கு மிக வல்லமையோடு அறிவிக்கத் தொடங்கினார். இவர் அறிவித்த நற்செய்தியில் நம்பிக்கை கொண்டு, பலரும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்கள். இது அங்கிருந்த ஆட்சியாளர்களுக்கு ஒருவித அச்சத்தை உருவாக்கியது. ஜான் ஒகில்வி அறிவிக்கின்ற நற்செய்தியினால் எங்கே எல்லாரும் கிறிஸ்தவ மதத்திற்குப் போய்விடுவார்களோ என பயந்து, அவரை சிறைப் பிடித்து பலவாறு சித்திரவதை செய்யத் தொடங்கினார்கள்.

“புதிதாக கிறிஸ்தவ மதத்திற்கு வந்தவர்கள் எங்கெங்கெல்லாம் இருக்கிறார்கள் என்பதை மட்டும் சொல்லும், நாங்கள் உம்மைக் கொல்லாமல் விட்டுவிடுவோம்” என்று அவரிடத்தில் வஞ்சகமாகப் பேசினார்கள். அதற்கு அவர் சம்மதிக்காததால், அவருடைய நகத்தை ஊசியால் குத்தினார்கள், கால்களில் இரும்பு ஆயுதங்களைக் கொண்டு அடித்தார்கள், அவர் தூங்காமல் இருக்க அவருடைய விழிகளில் பழுக்கக் காய்ச்சிய திரவத்தை ஊற்றினார்கள். இப்படி பல்வேறு விதங்களில் அவர்கள் அவரைச் சித்திரவதைப் படுத்தினாலும் எதற்கும் அவர் அடிபணியாமல், தன்னுடைய விசுவாசத்தில் மிகவும் உறுதியாக இருந்தார்.

இதற்குப் பின்பு அவர்கள் அவரைக் கழுமரத்தில் ஏற்றினார்கள். அப்போதுகூட அவர் தன்னுடைய விசுவாசத்தில் சிறிதளவுகூட பிறழவில்லை. அவர் கழுமரத்தில் ஏற்றப்படுவதற்கு முன்பாக, சிறிது நேரம் அமைதியாகச் ஜெபித்துவிட்டு, தன்னுடைய கழுத்தில் அணிந்திருந்த ஜெபமாலை யாருக்காவது பயன்படும் என்று அதனை, சூழ்ந்திருந்த மக்கள் கூட்டத்தில் வீசினார். அது கிறிஸ்துவின் மீது நம்பிக்கையில்லாத ஒருவர் மீது விழுந்தது. அதை அவர் மிகவும் பத்திரமாக வைத்துக்கொண்டு, பின்னாளில் அவர் புனித வாழ்க்கை வாழத் தொடங்கினார்.

ஜான் ஒகில்வி கொல்லப்பட்டதற்குப் பின்பு, அவருடைய மரணத்தை நேரடியாகக் கண்டு பலர் கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கினர். எத்தனையோ துன்பங்களையும் சித்ரவதைகளையும் சந்தித்தபோதும் ஜான் ஒகில்வி, விசுவாசத்தில் உறுதியாக இருந்தது நம்முடைய கவனத்திற்கு உரியதாக இருக்கின்றது

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, தன்னைப் பின்பற்றி வரக்கூடியவர்களுக்கும் தன்னுடைய சீடர்களுக்கும் நிகழப்போகிற சித்ரவதைகளையும் சிலுவைகளையும் அவமானங்களையும் பற்றிப் பேசுகின்றார். நற்செய்தியில் இயேசு கூறுகின்ற வார்த்தைகள் நமக்கு மூன்று முக்கியமான செய்திகளை எடுத்துச் சொல்கின்றது.

ஒன்று. இயேசுவைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு ஏற்படப்போகிற துன்பங்கள் உண்டு. தன்னுடைய பணிவாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் இயேசு, தன்னைப் பின்பற்றி வரக்கூடியவர்கள் எத்தகைய துன்பங்களை எல்லாம் தங்கிக்கொள்ளவேண்டும் என்பது பற்றி பேசிக்கொண்டே இருக்கிறார். இன்றைய நற்செய்தியிலும் அதே வலியுறுத்திக்கூறுகின்றார். நீங்கள் யூத சங்கங்களுக்கு இழுத்துச் செல்லப்படுவீர்கள்; கடுமையாக சித்ரவதை செய்யப்படுவீர்கள்; எல்லாருக்கும் முன்பாக தன்னைக் குறித்து சான்றுபகரவேண்டும் என்று இயேசு தன்னுடைய சீடர்களுக்கு எடுத்துச் சொல்கின்றார். ஆகையால், இயேசுவைப் பின்பற்றி நடப்பவர்கள் கட்டாயம் சிலுவைகளை தாங்கிக் கொள்ளக்கூடியவர்களாக இருக்கவேண்டும்.

இரண்டு, சீடர்கள் சந்திக்கக்கூடிய துன்பங்கள் வெறும் துன்பங்கள் மட்டுமல்ல, அவை இயேசுவை மாட்சிப்படுத்த கிடைத்த வாய்ப்புகள். இயேசு, தன்னுடைய சீடர்கள் பட இருக்கின்ற துன்பங்கள் யாவற்றையும் பட்டியலிட்டுவிட்டுச் சொல்வார், “எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும்” என்று. ஆகையால், இயேசுவின் பொருட்டு, நாம் அனுபவிக்கின்ற துன்பங்களை நினைத்து வருத்தம் கொள்ளாமல், அவற்றின் மூலம் நாம் இயேசுவுக்கு சான்று பகரலாம் என உணர்ந்து செயல்படுதல் நல்லது.

மூன்று, சீடர்கள் பல்வேறு துன்பங்களையும் சவால்களையும் சந்தித்தாலும், அவர்களோடு இறைவனின் துணை எப்போதும் இருக்கும். நற்செய்திக்காக இவ்வளவு துன்பங்களை அனுபவிக்கின்றோமா? இத்தகைய சூழ்நிலையில், இறைவன் நம்மோடு இருப்பாரா? என்றால் ஆம் என்பதுதான் இயேசுவின் பதிலாக இருக்கின்றது. “உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழாவே விழாது. ஆகவே, எதற்கும் பயப்படாமல் தொடர்ந்து பணிசெய்யுங்கள் என்று தன்னுடைய சீடர்களுக்கு ஆறுதல் மொழி கூறுகின்றார்.

எனவே, இயேசுவின் சீடர்களாக இருக்கின்ற நாம், எதிர்வரும் எதிர்ப்புகளைக் கண்டு பயப்படாமல், மனவுறுதியோடு நற்செய்திப் பணி செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.