சத்திய வேள்வியின் சரித்திர நாயகர்கள் – மாவீரர் நாள்

ஓயாத அலைகளாய்
ஓங்கி அடித்துக் கரைதேடி
உறங்காத விழிகளோடு
ஒவ்வொரு கணமும் உறவாடி
உரிமைகளை வென்றெடுக்க
உத்வேகமுடன் தினம் ஓடி
உள்ளத்தில் மாபெரும்
உறுதி கொண்டு களமாடி
உயிரிதழைக் காற்றிலூதி
உயரிய இலட்சியத்தீயில்
விழிமுடிப் போன எங்கள்
விடுதலைத் தீபங்களே !
உமக்கென ஒரு சுடரேற்றுகிறோம் – எம் 
இதயக்கோவிலிலே 
ஒரு முறை தரிசனம் தரவேண்டும் – எம் 
உதய வேளையிலே. 
சுவாசத்தில் சூழலும் காற்றில் – உங்கள் 
மூச்சினை உணர்கின்றோம்.
வாசம் வீசும் பூக்களில் – நீங்கள்
வண்ணங்களாய் மிளிர்வதைக் காண்கின்றோம்
வானத்து வெள்ளிகளில் – நீங்கள் 
புன்னகைப்பதைப் புரிந்துகொள்கிறோம்
மாவீரரே…
எங்கும் எதிலும் பொலியும் 
உங்கள் முகம் காணத் துடிக்கும் எங்களுக்காய் 
ஒரு முறை வரமாட்டீரோ?
காவலரண்களில் காவல்தெய்வங்களாய் – எதிரிகள்
கதை முடித்த களப்புலிகள் நீங்களெங்கே ?
எறிகணை மழை பொழிய 
சுடுகலச் சன்னங்கள் சீறும்
பெருயுத்தக் களம் மீதில்
எரிதணலாய்ப் பொருதி 
எமனையும் மலைக்க வைத்த 
இமயங்களே!
உங்களுக்காக ஒரு மனப்பட்டுக் காத்‌திருக்கிறோம்
உள்ளத்தால் உருகி நிற்கிறோம்.
ஒருமுறை கண்திறப்பீரோ? 

Comments are closed.