திருத்தந்தை – இயேசுவை சாலையில் சந்தியுங்கள்

இறையழைத்தலும், தெளிந்து தேர்தலும், தூய ஆவியாரின் மிகச் சிறந்த வேலையாகும், இளையோர் மற்றும் அவர்களுக்குப் பயிற்சியளிப்போரின் ஒத்துழைப்பு, இதற்கு அவசியம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலிய குருத்துவ மாணவர்கள் குழு ஒன்றிடம் கூறினார்.

இத்தாலியின் Agrigento உயர்மறைமாவட்ட பேராயர், கர்தினால் Francesco Montenegro அவர்கள் தலைமையில் வந்திருந்த ஏறத்தாழ நாற்பது குருத்துவ மாணவர்களை, நவம்பர் 24, இச்சனிக்கிழமையன்று, வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எம்மாவுஸ் செல்லும் வழியில், உயிர்த்த இயேசுவை சந்தித்த சீடர்கள் பற்றி எடுத்துரைத்தார்.

எம்மாவுஸ் சென்ற இரு சீடர்களுக்கு இயேசு காட்சியளித்தபோது, அவர்களோடு நடந்து, அவர்கள் பேசுவதைக் கேட்டு, அவர்கள் உள்ளத்திலிருந்த நம்பிக்கை, மற்றும் ஏமாற்றத்தை வெளிக்கொணரச் செய்து, அவர்களை மறைப்பணிக்கு அனுப்பினார் என்றுரைத்த திருத்தந்தை, இயேசு செவிமடுக்கிறார், அவரோடு நடக்கின்றேன், அவர் பேசுவதைக் கேட்கிறேன், பின்னர், தெளிந்து தேர்வு செய்கிறேன் ஆகிய நான்கு கூறுகளை விளக்க விரும்புவதாக, அக்குருத்துவ மாணவர்களிடம் தெரிவித்தார்.

குருத்துவ பயிற்சியில், ஆண்டவர் பேசுவதைக் கேட்பதும், அவரிடம் பேசுவதும் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்று கூறியத் திருத்தந்தை, குருத்துவ கல்லூரி, அழைத்தலை, தெளிந்து தேர்தலின் இடம் எனவும் எடுத்துரைத்தார்.

கடந்த அக்டோபரில் நிறைவடைந்த இளையோர் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றம் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எருசலேமிலிருந்து எம்மாவுஸ் சென்ற இரு சீடர்களும், இயேசுவை சந்தித்த பின்னர் அவர்கள் மீண்டும் எருசலேம் சென்று, திருத்தூதர்கள் குழுவுடன் இணைந்து மறைப்பணியாளர்களாக மாறியதையும் விளக்கினார்.

மறைப்பணியில் தனியாளாக, சிறந்து விளங்க வேண்டுமென்று எழுகின்ற சோதனைக்கு உட்படாமல், குழுவாக இணைந்து பணியாற்றவும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, எம்மாவுஸ் சீடர்களை எடுத்துக்காட்டாகக் கொண்டு வாழுமாறு கூறினார்

Comments are closed.