மறையுரைச் சிந்தனை (நவம்பர் 27)

கோவிலின் கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இடிக்கப்படும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 5-11

அக்காலத்தில் கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களாலும் கோவில் அழகுபடுத்தப் பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர்.

இயேசு, “இவற்றை யெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்” என்றார்.

அவர்கள் இயேசுவிடம், “போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், “நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்; ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, `நானே அவர்’ என்றும், `காலம் நெருங்கி வந்துவிட்டது’ என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள். ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெனில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது” என்றார்.

மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: “நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளைநோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மறையுரைச் சிந்தனை :

“நீங்கள் ஏமாறதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்”

முன்பொரு காலத்தில் ராஜா ஒருவர் இருந்தார். அந்த ராஜா இருந்த நாட்டில் ஒருசிலர் இருந்தனர். அவர்கள் தங்களை அறிவில் முதிர்ந்தவர்கள், மிகப்பெரியவர்கள், பணக்காரர்கள் என்று பீற்றிக் கொள்வது வழக்கம்.

அவர்களது முகத்திரையைக் கிழிக்க ராஜா முடிவு செய்தார். இதனால் ஒரு நாள் தண்டோரா மூலம், நாட்டில் உள்ள பணக்காரர்கள் அனைவரும் அரசுக்கு பெருமளவு பொருளுதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். உடனே ராஜாவை இந்த போலி அறிவுஜீவிகள் அணுகினர். தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று ராஜாவிடம் கேட்டனர். அதற்கு ராஜா, “பொது இடத்தில் வைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய பாத்திரத்தில், இன்று இரவு நீங்கள் தனித்தனியாகப் பால் ஊற்றிப் போங்கள். நீங்கள் ஊற்றும் பாலை விற்று, அரசாங்கத்திற்கு நிதி திரட்டிக்கொள்கிறேன்” என்றார். போலி அறிவுஜீவிகள் உடனே கூடி விவாதித்தனர். ராஜா சொல்வது போன்றே செய்துவிடுவோம் என்று முடிவு செய்துவிட்டுக் களைந்துபோனார்கள்.

இதற்குப் பின்னர், தாங்கள் ஊற்றுவது பால்தானா என்பது யாருக்குத் தெரியும் என்று அவர்களாகவே நினைத்துக்கொண்டு, இரவோடு இரவாக வந்து பாலுக்குப் பதில் தண்ணீரை ஊற்றிப் போனார்கள். மறுநாள் காலையில் ராஜா வந்து, பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த பெரிய பாத்திரத்தைப் பார்த்தபோது பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார். ஏனென்றால், அந்தத் பாத்திரம் முழுவதும் தண்ணீராக இருந்தது. இதனால் கடும்கோபம் கொண்ட ராஜா, அறிவு ஜீவிகள் என்று தங்களை அழைத்துக்கொண்டு போலியாக நடந்துகொண்ட போலி அறிவுஜீவிகளை மக்களுக்கு முன்பாகக் கொண்டு வந்து நிறுத்தினார். மக்களோ அவர்கள்மீது காறித்துப்பிவிட்டுக் கடந்து போனார்கள்.

தங்களை அறிவு ஜீவிகள் என்று அழைத்துக்கொண்டு, போலியான வாழ்க்கை வாழ்ந்த ‘போலி அறிவுஜீவிகளைப்’ போன்று, தங்களை ‘மெசியா’ என்று அழைத்துகொண்டு மக்களை திசைதிருப்பும் ஒருசில போலி இறைவாக்கினர்களைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று இன்றைய நற்செய்தி வாசகத்தின் மூலமாக ஆண்டவர் இயேசு நமக்கு எச்சரிக்கை விடுக்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில், ஒருசிலர், எருசலேம் திருக்கோவில் எப்படி கவின்மிகு கற்களால் அழகுறக் கட்டப்பட்டிருக்கிறது என்று வியந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது இயேசு அவர்களிடம், இந்த எழில்மிகு கோவிலைப் பார்க்கிறீர்கள் அல்லவா?, ஒரு காலம் வரும், அப்போது கற்கள் ஒன்றின்மீது ஒன்று இராதபடி தகர்க்கப்படும் என்கின்றார். இயேசு இவ்வாறு பேசியதைக் கேட்ட அவர்கள், “போதகரே, இவை எப்போது நிகழும், இவை நிகழ்வதற்கான அறிகுறிகள் என்ன?” என்று கேட்கின்றார்கள்.

இயேசு மேலே சொன்னவற்றைக் கூறியபோது, அவரிடம் கேள்வி கேட்டவர்கள், இப்படியெல்லாம் நிகழப் போகிறதே, இதற்காக நாங்கள் என்ன செய்யவேண்டும், இந்த அழிவிலிருந்து எங்களை எப்படிக் காத்துக்கொள்ள வேண்டும், நாங்கள் எப்படியெல்லாம் எங்களைத் தயார்செய்யவேண்டும் என்று கேட்கவில்லை. மாறாக, இவையெல்லாம் நிகழ்வதற்கான அறிகுறிகள் என்ன என்றே கேட்கின்றார்கள். அதாவது எதிர்காலத்தில் என்ன நடக்கும் என தெரிந்துகொள்வதற்கு ஆசைப்பட்ட அவர்கள், எதிர்காலத்திற்கு எப்படி எல்லாம் தங்களைத் தயார்செய்யவேண்டும் என்று கேட்கவில்லை.

உடனேதான் இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ‘நானே அவர்’ என்றும் காலம் நெருங்கி வந்துவிட்டது’ என்றும் கூறுவார்கள். அவர்கள் பின்னே போகாதீர்கள்” என்கிறார். இயேசு கூறிய வார்த்தைகளில் துளியளவுகூட பொய்யில்லை. ஏனென்றால், இயேசுவின் காலத்திற்கு முன்பும் சரி, அவருடைய காலத்திற்குப் பின்பும் சரி (இன்றைக்குக் கூட) பலர் தங்களைத் தாங்களே மெசியா என்று சொல்லிக்கொண்டு மக்களை திசை திருப்பினார்கள். யூத வரலாற்று ஆசிரியரான ஜோசேப்புஸ் கூறும்போது, “டசிதேயுஸ், சைமன் மக்னஸ், தேயோடஸ் போன்றோர் வெவ்வேறு காலகட்டத்தில் தோன்றி, தாங்கள்தான் மெசியா என்று சொல்லிக்கொண்டு மக்களை திசை திருப்பினார்கள். இவர்கள் அனைவரும் உரோமை அரசாங்கத்தால் நசுக்கப்பட்டார்கள்” என்று கூறுவார். இத்தகைய ஓர் ஆபத்து இருந்ததால்தான் இயேசு தன்னுடைய சீடர்களிடத்திலும் மக்களிடத்திலும், ஏமாறதவாறு பார்த்துக்கொள்ளுங்கள் என்கின்றார்.

ஆகையால், நாம் போலிகளை இனங்கண்டு கொள்ளவேண்டிய பங்குவத்தைப் பெறவேண்டும். பல நேரங்களில் நாம், உண்மை எது, பொய் எது, நன்மை எது, தீமை எது என்று அறிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றோம். இத்தகைய சூழ்நிலையில் நாம் தூய ஆவியாரின் துணையை நாடுவது சிறந்தது.

எனவே, போலிகளை இனங்கண்டு கொண்டு, அவற்றிலிருந்து விலகி, உண்மையின் உறைவிடமான இயேசுவின் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

 

Comments are closed.