பாடகர் குழுக்கள், விசுவாசிகள் பாடுவதற்கு உதவ அழைப்பு

ஆலய பாடகர் குழுக்கள், நற்செய்தி அறிவிப்புக்கு உண்மையான கருவிகளாக உள்ளனர் என்றும், திருவழிபாட்டுக் கொண்டாட்டங்கள், குறிப்பாக, திருப்பலிக்கு உதவி, விண்ணகத்தின் அழகை உணரச் செய்கின்றனர் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாராட்டினார்.

புதிய வழியில் நற்செய்தி அறிவிப்பு திருப்பீட அவை நடத்திய, திருவழிபாட்டு பாடகர் குழுக்களின் 3வது உலகளாவிய மாநாட்டில் கலந்துகொண்ட ஏறத்தாழ ஏழாயிரம் பேரை, இச்சனிக்கிழமையன்று, வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருவழிபாட்டில் பங்குகொள்ளும் இறைமக்கள் எல்லாரும் பாடுவதற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார்.

இக்குழுக்கள், தங்களின் குரல்களால், திருஅவை சமூகத்திற்கு ஆற்றிவரும் பணியைத் தொடருமாறும் கூறியத் திருத்தந்தை, பாடலும், இசையும், தனிப்பட்டவரின் வாழ்வில், சில நேரங்களில், ஒரு தனித்துவமிக்க தருணத்தை ஏற்படுத்துகின்றன என்றும் குறிப்பிட்டார்.

சிலநேரங்களில் திருவழிபாடுகளில் கலந்துகொள்ளும்போது, பாடகர் குழுக்கள் பாடுவதைக் கேட்பதற்கு இனிமையாக இருந்தது, ஆனால், அக்குழுக்களோடு சேர்ந்து இறைமக்கள் பாட இயலாமல் இருப்பதைப் பார்த்து வருத்தமடைந்துள்ளேன் என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பாதுகாவலர் திருவிழாக்கள், திருப்பவனிகள், வழிபாடுகளில் நடனங்கள், விசுவாசிகளின் பாடல்கள் போன்றவை, நம் மக்களின் சமயப் பண்பின் உண்மையான பாரம்பரியங்கள் என்றும், திருஅவையில் தூய ஆவியாரின் செயலாக அவை மதிக்கப்பட்டு, பேணப்பட வேண்டும் என்றும், திருத்தந்தை கூறினார்

இறைமக்களின் வழக்கத்திலிருக்கும், சமயப் பண்பை வெளிப்படுத்தும் பக்தி முயற்சிகளுக்கு இடமளிக்கப்பட வேண்டும் எனறும், திருத்தந்தை கூறினார்

Comments are closed.