நவம்பர் 24 : சனி. நற்செய்தி வாசகம் :

அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக
வாழ்வோரின் கடவுள்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 27-40

அக்காலத்தில் உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசேயர் இயேசுவை அணுகி, “போதகரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்துபோனால் அவர் மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு தம் சகோதரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதிவைத்துள்ளார்.

இங்குச் சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். இரண்டாம், மூன்றாம் சகோதரர்களும் அவரை மணந்தனர். இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி இறந்தனர்; கடைசியாக அப்பெண்ணும் இறந்தார். அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே?” என்று கேட்டனர்.

அதற்கு இயேசு அவர்களிடம், “இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்து கொள்வதில்லை. இனி அவர்கள் சாகமுடியாது; அவர்கள் வானதூதரைப் போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே. இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, `ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்’ என்று கூறியிருக்கிறார். அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர்களே” என்றார்.

மறைநூல் அறிஞருள் சிலர் அவரைப் பார்த்து, “போதகரே, நன்றாகச் சொன்னீர்” என்றனர். அதன்பின் அவர்கள் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மறையுரைச் சிந்தனை :

உயிர்ப்பு என்னும் உன்னதக் கொடை!

அது ஒரு கிராமத்துப் பங்கு. அந்தப் பங்குத்தளத்தில் எப்போது பார்த்தாலும் ஒரே சண்டைச் சச்சரவும் பிரச்சனையுமாக இருந்தது. இதற்கு ஒரு முடிவுகட்ட விரும்பிய பங்குத்தந்தை, ஒரு ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலியின்போது, “அன்பார்ந்த மக்களே! நான் உட்பட, இந்தக் கிராமத்தைச் சார்ந்த எல்லாரும் ஒருநாள் இறக்கத்தான் போகிறோம். அதனால் சண்டை சச்சரவு இல்லாமல் ஒற்றுமையுடன் வாழ்வோம்” என்று போதித்துக் கொண்டிருந்தார்.

இதைக் கேட்ட, அந்தக் கூட்டத்திலிருந்த ஒருவன் சத்தமாகச் சிரிக்கத் தொடங்கினான். குருவானவருக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. அவர் அவனிடத்தில், “ஏனப்பா இப்படிச் சிரிக்கிறாய்? நான் சொல்வது உனக்குக் கிண்டலாகத் தெரிகிறதா?” என்று கேட்டார். அதற்கு அவன், “இந்த கிராமத்தைச் சார்ந்த எல்லாரும் ஒருநாள் இறக்கப் போகிறோம் என்று சொன்னீர்கள் அல்லவா!… நல்லவேளையாக, எனக்கு இந்த கிராமம் கிடையாது, பக்கத்துக் கிராமம், ஒருவேளை நானும் இந்த கிராமத்தைச் சார்ந்தவனாக இருந்திருந்தால், இறக்க வேண்டியிருக்குமே. அதனால்தான் சிரித்தேன்” என்றான்.

மனிதராகப் பிறந்த எல்லாருக்கும் இறப்பு உண்டு, இதை உணராத அந்த கிராமத்தானைப் போன்று, இறந்த ஒருவர் உயிர்த்தெழுவார் என்ற அடிப்படைப் புரிதல்கூட இல்லாமல், சதுசேயர்கள் இயேசுவிடத்தில் கேள்வியைக் கேட்கின்றார்கள். பரிசேயர்களின் கேள்விக்கு இயேசுவின் பதில் எப்படிப்பட்டதாக இருந்தது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவின் பணிவாழ்வில், அவரோடு அடிக்கடி பிரச்சனையில் ஈடுபட்டவர்கள் பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்கள். இவர்களில் இரண்டாவதாக வரக்கூடிய சதுசேயர்களோ பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள், யூத சமூகத்தில் மிக முக்கிய பொறுப்புகளையும் பதவிகளையும் வகித்து வந்தவர்கள். இப்படிப்பட்டவர்கள் ‘பெண்டடூக்’ எனப்படும் விவிலியத்தில் உள்ள முதல் ஐந்து நூல்களை மட்டும் ஏற்றுக்கொண்டார்கள். அவர்களுக்கு வானத்தூதர்கள் மீதோ, உயிர்ப்பின் மீதோ நம்பிக்கை கிடையாது. இப்படிப்பட்ட சித்தாந்தங்களோடு இருந்த சதுசேயர்கள்தான், இயேசுவை எப்படியாவது சிக்கலில் மாட்டிவிட வேண்டும் என்பதற்காக ஒரு கேள்வியோடு வருகிறார்கள்.

சதுசேயர்கள் இயேசுவிடம் வைக்கக்கூடிய கேள்வி, எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளத் தக்கது கிடையாது. பெண் ஒருவரை மகப்பேறு இல்லை என்ற ஒரே காரணத்திற்காக எழுவர் மணப்பதையும் அவர்கள் அனைவரும் மகப்பேறின்றி இறக்கிறார்கள் என்பதையும் உயிர்த்தெழுதலின் போது அந்தப் பெண்மணி யாருக்கு மனைவியாக இருப்பார் என்பதையும் எப்படி ஏற்றுக்கொள்வது? அதற்கு எப்படித்தான் பதில் சொல்வது?. ஆனாலும் இயேசு அவர்களுடைய குறுக்குப் புத்தியை அறிந்து, அவர்களுக்கு தெளிவான பதிலைச் சொல்லி அவர்களை வாயடைக்கச் செய்கின்றார்.

சதுசேயர்களைப் பொறுத்தளவில், ஐநூல்களில் உயிர்த்தெழுதல் பற்றிய செய்தியே கிடையாது என்பதாக இருந்தது. ஆனால் ஆண்டவர் இயேசு, சதுசேயர்கள் நம்பி ஏற்றுக்கொண்ட ஐநூல்களில் ஒன்றான விடுதலைப் பயணத்திலே ‘உயிர்த்தெழுதல்’ பற்றிய செய்தி இருக்கின்றது என்று எடுத்துச் சொல்லி, கடவுள் இறந்தோரின் கடவுள் அல்ல, அவர் வாழ்வோரின் கடவுள் (விப 3:6), இதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களே என்று அவர்களை திக்குமுக்காடச் செய்கின்றார்.

அடுத்ததாக, உயிர்த்தெழுதல் என்ற ஒன்று இருந்தால், அதில் மண்ணகத்தில் நடப்பது போன்றே பெண் கொடுப்பதும் எடுப்பதுமாக இருக்கும் என்பதாக இருந்தது சதுசேயர்கள் எண்ணம். ஆனால் இயேசுவோ, விண்ணகத்தில் அப்படியெல்லாம் இருக்காது. அங்கே ஒவ்வொருவரும் வானதூதரைப் போன்று இருப்பார்கள் என்று அவர்களுக்கு தெளிவான பதிலைச் சொல்கின்றார்.

நற்செய்தியில் இயேசு, சதுசேயர்களுக்கு அளித்த விளக்கம், நமக்கு ஒருசில செய்திகளை மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது. அதில் முதலாவது, அரைகுறை அறிவை வைத்துக்கொண்டு கடவுளை சோதனைக்குட்படுத்தக் கூடாது என்பதாகும். ஐநூல்களில் உயிர்த்தெழுதல் பற்றிய செய்திகள் இல்லை, ஆகவே, நாங்கள் உயிர்த்தெழுதலை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று சதுசேயர்கள் முரண்டுபிடித்தார்கள். ஆனால் உயிர்த்தெழுதல் பற்றி செய்தி, அவர்கள் ஏற்றுக்கொண்ட ஐந்நூல்களிலே இருந்தது. இருந்தும் அவர்கள் குருடராக, அறியாமையில், அரைகுறையான அறிவோடு இருந்தார்கள். இப்படி அரைகுறை அறிவோடு இருந்துகொண்டு இயேசுவிடம் கேள்விகேட்டதை என்னவென்று சொல்வது?

அடுத்ததாக, உயிர்த்தெழுதல் என்ற ஒன்று, உறுதியாக உண்டு என்பதை நற்செய்தி வாசகம் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றது. எனவே, நாம் ஒவ்வொரும் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை கொண்டு, இறைவனுக்கு ஏற்ற வாழ்க்கை வாழ்வதே சாலச் சிறந்தது. பவுலடியார் சொல்வார், “ஒவ்வொருவரும் அவரவர் முறைவரும்போது உயிர்பெறுவர்” என்று. (1 15:23).

ஆதலால் நாமும் ஒருநாள் உயிர்த்தெழுவோம் என்ற நம்பிக்கையுடன் வாழ்வோம், நம்மிடம் இருக்கின்ற பேதமையான எண்ணங்களை அகற்றி, இறைவனுக்கு உகந்த வாழக்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.