திருத்தந்தையின் மறைக்கல்வியுரை : பத்துக்கட்டளைகளின் இறுதி இரு கட்டளைகள்

இறைவன் இவ்வுலகிற்கு வழங்கிய 10 கட்டளைகளை, கடந்த சில வாரங்களாக, ஒவ்வொன்றாக விளக்கி வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று, அக்கட்டளைகளுள் இறுதிக் கட்டளைகள் குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். பிறருக்கு உரியவைகள் மீது நாம் ஆசை கொள்ளக்கூடாது என்பதை எடுத்துரைக்கும் இறுதி இரு கட்டளைகள் குறித்ததாக திருத்தந்தையின் இப்புதன் மறைக்கல்வி உரை இருந்தது. மனதில் எழும் அநீதியான ஆசைகளால் உருவாகும் இந்த பாவங்களைத் தடை செய்ய அழைப்பு விடுக்கும் ஒன்பதாவது கட்டளையான, பிறர் மனைவி மீது ஆசை கொள்ளாதே, என்பது குறித்தும், பத்தாவது கட்டளையான, பிறர் உடைமையை விரும்பாதே, என்பது குறித்தும் தன் சிந்தனைகளை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அன்பு சகோதரர் சகோதரிகளே, பத்துக் கட்டளைகள் குறித்த நம் மறைக்கல்வித் தொடரில் இன்று, ‘பிறர் மனைவி மீது ஆசை கொள்ளாதே, மற்றும், பிறர்க்குரியது எதையும் கவர்ந்திட விரும்பாதே என்ற இறுதிக் கட்டளைகள் குறித்து நோக்குவோம். இந்த கடைசி கட்டளைகள், ஒரு வகையில் பார்த்தோமென்றால், பத்துக் கட்டளைகளின் முழுச்சாரத்தையும் தங்களுள் கொண்டுள்ளன. இயேசு உரைப்பதுபோல், அனைத்துப் பாவங்களும், மனித இதயத்தில் இருந்து வெளிப்படும் தீய ஆசைகளிலிருந்தே பிறக்கின்றன. “மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன. தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன”(மாற்கு 7:21-23) என்கிறார் இயேசு. ஒருவர் மற்றவருடனும், இறைவனுடனும் எவ்வாறு சிறப்பான முறையில் வாழ்வது என்பது குறித்து நமக்குக் கற்பிக்கும் இந்த பத்துக் கட்டளைகள், தூய ஆவியாரிலிருந்து மட்டுமே பெறக்கூடிய கொடையான, விடுதலையுடன் கூடிய இதய மாற்றத்தின் தேவை குறித்து நமக்குக் காட்டுகின்றன‌. தன்னலப் பாதைகளைத் தேடி ஓடுவதிலிருந்து விலகி நிற்கவும், நாம் தன்னிறைவு பெற்றவர்கள் என்ற மாயையிலிருந்து வெளியேறவும், மீட்பு நமக்குத் தேவை என்பதை உணர்ந்து கொள்ளவும் இந்த கட்டளைகள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. நம் ஆன்மீக வறுமையை நாம் தாழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும்போது, நம் இதயங்கள் இறை இரக்கத்தை நோக்கித் திறக்கின்றன. இறை இரக்கமே நம்மை மாற்றியமைத்து, புதுப்பித்து, தந்தையாம் இறைவனின் பார்வையில், இறைமகனால் மீடகப்பட்டு, தூயஆவியாரால் கற்பிக்கப்பட்டு, நாம் நேர்மையான ஒரு வாழ்வை வாழ உதவுகிறது. இவ்வாறு வாழ்வதன் வழியாக, நாம் கிறிஸ்துவில் பெற்ற இரக்கத்தை மற்றவர்களுக்கு காண்பிக்க கற்றுக்கொள்கிறோம்.
இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று, அதாவது, நவம்பர் 21ம் தேதி சிறப்பிக்கப்பட்ட, அன்னைமரியா அவர்கள் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட திருவிழாவையும்; ஆழ்நிலை தியான வாழ்வையும், செப வாழ்வையும் தேர்ந்து கொண்டோருக்கென சிறப்பிக்கப்படும் Pro Orantibus நாளையும் நினைவுறுத்தி, செபத்தில் தங்களை ஈடுபடுத்தியுள்ள இவர்கள் அனைவருக்கும் திருஅவை, தன் ஆதரவையும் அனைத்து உதவிகளையும் வழங்குவதாகக் கூறினார். இறுதியில், அனைவருக்கும் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்து, அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.