2019ல் புலம்பெயர்ந்தோர் உலக நாள், செப்டம்பர் 29

பிரமாணிக்கமாக இருப்பது, சுதந்திரமான, பக்குவம் அடைந்த மற்றும் பொறுப்புள்ள மனித உறவுகளை வெளிப்படுத்தும் பண்பாகும்” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியில், நவம்பர் 20, இச்செவ்வாயன்று பதிவாகி இருந்தன.

மேலும், புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோரின் 105வது உலக நாள், 2019ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி சிறப்பிக்கப்படும் என்று, திருப்பீட செய்தி தொடர்பகம், இச்செவ்வாயன்று அறிவித்துள்ளது.

2019ம் ஆண்டில் சிறப்பிக்கப்படும், 105வது புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோரின்  உலக நாள் பற்றி, இச்செவ்வாயன்று அறிக்கை வெளியிட்ட, திருப்பீட செய்தி தொடர்பாளர் Greg Burke அவர்கள், பல்வேறு ஆயர் பேரவைகளின் விண்ணப்பத்தின்பேரில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த உலக நாளை, செப்டம்பர் மாதத்தின் இறுதி ஞாயிறன்று சிறப்பிக்கப் பணித்துள்ளார் என்று கூறியுள்ளார்.

புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோரின் உலக நாளுக்கான திருத்தந்தையின் செய்தி, வழக்கம்போல், அந்த உலக நாளுக்கு சில மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்படும் எனவும், Greg Burke அவர்கள் அறிவித்துள்ளார்.

1914ம் ஆண்டிலிருந்து இந்த உலக நாள், ஒவ்வோர் ஆண்டும் சனவரியில் திருஅவையில் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. ஐ.நா. நிறுவனம், இரண்டாயிரமாம் ஆண்டில் இந்த உலக நாளை உருவாக்கி, அந்நாளை, ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதத்தில் கடைப்பிடித்து வருகின்றது.

ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் நிறுவனத்தின் கணிப்புப்படி, உலகில் 6 கோடியே 50 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கட்டாயமாக குடிபெயர்ந்துள்ளனர். இவர்களில் 2 கோடியே 25 இலட்சம் மக்கள் புலம்பெயர்ந்தவர்கள்.

Comments are closed.