உனக்கு அடுத்திருப்பவருக்கு எதிராக பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக

அன்பு நெஞ்சங்களே, இப்புதன்கிழமையின் தட்பவெப்ப நிலை, குளிரின் தாக்கத்தைக் கொண்டிருந்தாலும், சூரிய வெப்பமும் ஓரளவு இருந்ததால், ஏற்றுக்கொள்ளக் கூடிய இதமான காலநிலையாக இருந்தது. திருப்பயணிகள், மற்றும் சுற்றுலாப் பயணிகள், உரோம் நகர் புனித பேதுரு வளாகத்தை நிறைத்திருக்க, இறைவன் வழங்கிய பத்துக் கட்டளைகளுள் ‘பொய் சான்று சொல்லாதிருப்பாயாக’ என்ற கட்டளை குறித்து தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
அன்பு சகோதர சகோதரிகளே, பத்துக் கட்டளைகள் குறித்த நம் தொடர் மறைக்கல்வி உரையில் இன்று, ‘உனக்கு அடுத்திருப்பவருக்கு எதிராக பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக’ என்ற எட்டாவது கட்டளை குறித்து நோக்குவோம். மற்றவர்களுடன் நாம் கொள்ளும் உறவுகளில், உண்மைக்கு தவறான அர்த்தம் கொடுப்பதை, இந்தக் கட்டளை தடை செய்கிறது என திருஅவையின் மறைக்கல்வி ஏடு எடுத்துரைக்கிறது. நம் வார்த்தைகளில் மட்டுமல்ல, மற்றவர்கள் குறித்த நம் அனைத்து நடவடிக்கைகளிலும் நாம் உண்மையானவர்களாக நடந்துகொள்ள வேண்டும் என அழைப்புப் பெற்றுள்ளோம். இதில் நம் மிக உயரிய எடுத்துக்காட்டாக இயேசுவே உள்ளார். அவர் உண்மையே உருவானவர். பிலாத்துவின் முன்னால் விசாரணைக்கு கொண்டு வரப்பட்டபோது, உண்மைக்கு சான்று பகரவே தான் இவ்வுலகிற்கு வந்ததாக இயேசுவே எடுத்துரைத்தார் (யோவான் 18:37). அவரின் வாழ்வு, மரணம், மற்றும், உயிர்ப்பு என்ற மறையுண்மையில், நம் வாழ்வின் ஆழமான அர்த்தத்தை வெளிப்படுத்திய இயேசு, அவரின் தெய்வீக வாழ்வில் பங்குபெறும்படி நம்மை அழைக்கிறார். இயேசு நமக்கு கொடையாக வழங்கியுள்ள தூய ஆவியாராகிய உண்மையின் ஆவியானவர், வானகத் தந்தையின் தத்துப் பிள்ளைகளாக நாம் மாறவும், அவரன்பில், சகோதர சகோதரிகளாக நாம் வாழவும், நமக்கு ஊக்கமளிக்கிறார். இந்த புதிய வாழ்வை முழுமையாக வாழ இந்த எட்டாவது இறைக் கட்டளை நமக்கு உதவுகிறது. இவ்வாறு வாழ்வதன் வழியாக, கடவுளின் மீட்பளிக்கும் அன்பிற்கு, நமக்காக மனித உரு எடுத்த நமதாண்டவராம் இயேசு கிறிஸ்துவின் அன்பிற்கு, உண்மை சாட்சி பகர்வோமாக.
இவ்வாறு, தன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறுதியில், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்

Comments are closed.