‘வலைத்தள மிரட்டல்களை’த் தடுக்க விழையும் திருத்தந்தை

அதாவது, ‘வலைத்தள மிரட்டல்கள்’ என்ற வன்முறையைக் கண்காணிக்கும் பன்னாட்டு அமைப்பு என்ற ஒரு வலைத்தள முயற்சி துவக்கப்பட்டுள்ளதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் விருப்பத்தை, வலைத்தளத்தில் பயன்படுத்தப்படும் ‘like’ என்ற குறியீடு வழியே வெளியிட்டுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புவனஸ் அயிரஸ் பெருமறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றிய வேளையில், பள்ளிகளில் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கும் இளையோரை மனதில் கொண்டு, Scholas Occurrentes என்ற அமைப்பை உருவாக்கினார்.
அவ்வமைப்பு, தற்போது, ஒரு பாப்பிறை அறக்கட்டளையாக மாறி, உலகெங்கும் 4 இலட்சத்து 40,000 பள்ளிகள் வழியே பணியாற்றி வருகிறது.
இவ்வமைப்பின் உலக இயக்குனர், José Maria del Corral அவர்கள், ICO எனப்படும் ‘வலைத்தள மிரட்டல்களைக் கண்காணிக்கும் பன்னாட்டு அமைப்பை’ உருவாக்கியதைத் தொடர்ந்து, திருத்தந்தை தன் விருப்பத்தை ‘like’ குறியீடு வழியே வெளியிட்டுள்ளார்.
திருத்தந்தை வெளியிட்டுள்ள இந்த ‘like’ குறியீடு, அவரது ஆசீரைப்போல் அமைந்து, பல்வேறு நாட்டு அரசுகளையும், வலைத்தள நிறுவனங்களையும் ‘வலைத்தள மிரட்டல்’ என்ற வன்முறையைக் களைவதற்குத் தூண்டும் என்று தான் நம்புவதாக, Corral அவர்கள் கூறினார்.
வலைத்தளங்கள் வழியே பரவிவரும் பல்வேறு வன்முறைகளைத் தடுப்பதும், குறிப்பாக, ‘வலைத்தள மிரட்டல்’ என்ற வன்முறைக்கு மாற்று சொற்களையும், கருத்துக்களையும் வலைத்தளம் வழியே பரப்புவதும், ICO அமைப்பின் ஒரு முக்கிய குறிக்கோள் என்று Corral அவர்கள், செய்தியாளர்களிடம் கூறினார்.
வருகிற ஆண்டு ஏப்ரல் மாதத்தில், வத்திக்கானில் ‘வலைத்தள மிரட்டலை’ மையப்படுத்தி Scholas Occurrentes அமைப்பினர், ஓர் உலக மாநாட்டை நடத்த உள்ளனர் என்று Corral அவர்கள் அறிவித்தார்.

Comments are closed.