மறையுரைச் சிந்தனை (நவம்பர் 12)

எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்”

கலிபோர்னியா மாகாணத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு விமானம் திடிரென ஓர் உயரமான மரத்தில் மோதி நொறுங்கியது.

அந்தப் பகுதி கடுமையான பனி பொழியும் மலை பிரதேசம். அங்கே வெப்ப நிலை 50 டிகிரி செல்சியஸ், அதாவது எபிரோவைவிட ஐம்பது டிகிரி குறைவு, சாதாரணமாக அந்தக் குளிரில் இரண்டு நாட்களுக்கும் மேலாக யாரும் உயிர் வாழ முடியாது. ஆனால், அந்த விபத்தில் தப்பித்த இருவர், நாற்பத்தி எட்டு நாட்கள் உயிர்வாழ்ந்தார்கள்.

நாற்பத்தி எட்டு நாட்கள் கழித்து மீட்புக் குழுவினர் வந்து அவர்களைக் காப்பாற்றினர். அப்போது அந்தக் குழுவில் இருந்த ஒருவர் அவர்களிடம், “இரண்டு நாட்கள் கூட தாங்கமுடியாத இந்த இடத்தில், எப்படி நாற்பத்தி எட்டு நாட்கள் உயிர் வாழ்ந்தீர்கள்?” என்று கேட்டபோது, அவர்கள் இருவரும், “நாங்கள் இருவரும் நிச்சயம் காப்பாற்றப்படுவோம் என்று நம்பினோம். அந்த நம்பிக்கையிலேயே இருந்தோம். பல நாட்கள் பனிக்கட்டிகள்தான் உணவாக அமைந்தது. மரக்கட்டைகளைக் கொழுத்தி தீ மூட்டிக் கொண்டோம். இவ்வாறு எங்கள் நம்பிக்கை எங்களைக் காத்தது” என்று கூறினார்கள்.

நம்பிக்கை எத்துணை மகத்துமான ஒன்று. அதை நாம் கொண்டிருக்கின்றபோது, அது நம்முடைய வாழ்விற்கு எத்தகைய ஆற்றலைத் தருகின்றது என்பதை இந்த நிகழ்வின் வழியாக நாம் அறிந்துகொள்ளலாம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களுக்கு பல அறிவுரைகளைத் தருகின்றார். பிறருக்கு ஒருபோதும் துன்மாதிரியாகவோ அல்லது இடறலாகவோ இருக்கக்கூடாது என்றும் மன்னித்து வாழவேண்டும் என்றும் போதிக்கின்றார். இயேசு இவ்வாறெல்லாம் போதிப்பதைக் கேட்ட சீடர்கள் பதற்றமடைகின்றார்கள். காரணம் இவற்றையெல்லாம் எப்படிக் கடைப்பிடிப்பது என்பதால்தான். அதனால்தான் அவர்கள் இயேசுவிடம், “எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்” என்கின்றார்கள். நம்பிக்கை தங்களிடம் மிகுதியாகுகின்ற பட்சத்தில், இயேசு சொல்வதை எல்லாம் தங்களால் கடைபிடிக்க முடியும் என்ற எண்ணத்தில், அவர்கள் அவரிடம் அப்படிச் சொல்கின்றார்கள்.

ஆனால், இயேசுவோ நம்பிக்கையை மிகுதியாக்கவேண்டிய தேவையில்லை, “கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால், நீங்கள் இந்தக் காட்டு அத்தி மரத்தை நோக்கி, ‘நீ வேரோடே பெயர்ந்து போய்க் கடலில் வேரூன்றி நில்’ எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்” என்று கூறுகின்றார். ஆகையால், நம்மிடத்தில் பெரியளவு நம்பிக்கை இருக்கவேண்டும் என்ற தேவையில்லை, கடுகளவு இருந்தாலே போதும். அதனால் நம்மால் ஏராளமான நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

ஆனால், வேடிக்கை என்னவெனில், நம்மிடம் கடுகளவு நம்பிக்கை கூட இல்லை. நம்மீதோ, பிறர்மீதோ, கடவுள்மீதோ பலருக்கு நம்பிக்கையே இல்லை. அவநம்பிக்கையோடுதான் தங்களுடைய வாழ்வை அவர்கள் கழித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதனால் ஒருவர் கிண்டலாகச் சொன்னார், “மனிதர்கள் இன்றைக்கு அதிகமாக அவதிப்படுவது நரம்புத் தளர்ச்சியினால் அல்ல, நம்பிக்கைத் தளர்ச்சியினால்” என்று. இதுதான் உண்மை. ஆகவே, இத்தகைய சூழ்நிலையில் நாம் அனைவரும் நம்பிக்கையோடு வாழ்வது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.

ஒரு சமயம் வில்வித்தைப் பயிற்சியில் ஓர் இளைஞனை அவனுடைய தந்தை சேர்த்துவிட்டார். வித்தையில் சிறந்து விளங்க அந்த இளைஞனும் நல்ல ஆர்வம் காட்டினான். அதே நேரத்தில், தன்னால் இயலுமா? என்னும் சந்தேகம் அவனுக்கு இருந்தது. அவனைக் கவனித்த பயிற்சியாளர் அவனைக் கூப்பிட்டுப் பேசினார், “தம்பி! நீ வில்வித்தையில் சிறந்து விளங்க விரும்பினால், முதலில் வில்லை நம்பவேண்டும். பிறகு உன்னை நம்ப வேண்டும். அத்துடன் என்னையும் நம்பவேண்டும். இவையெல்லாவற்றிற்கும் மேலாக நான் எடுத்த இந்தக் காரியத்தில் இறைவனுக்கு வெற்றியைத் தருவார் என்று இறைவனையும் நம்பவேண்டும். இப்படி நீ நம்பிக்கையோடு இருந்தால், உன்னால் எதையும் சாதிக்கமுடியும்” என்றார். இதைக் கேட்ட அந்த இளைஞன், அவர் சொன்னதை அப்படியே நம்பி, புதிய உத்வேகத்துடன் பயற்சி எடுத்தான். பின்னாளில் பெரிய சாதனையாளனாக மாறினான்.

ஆம், நம்முடைய வாழ்வில் சிறந்த விளங்க வேண்டுமெனில் நம்ன்மீதும் பிறர்மீதும் எல்லாவற்றுக்கும் மேலாக இறைவன்மீதும் நம்பிக்கை வைத்து வாழவேண்டும். ஏனெனில், நம்பிக்கை என்பது சாதாரண வார்த்தையல்ல, அது பலருடைய வாழக்கையையே புரட்டிப்போட்ட ஓர் ஆற்றல் வாய்ந்த அருமருந்து. அத்தகைய நம்பிக்கையை நாமும் கொண்டு வாழ்ந்தால், நம்முடைய வாழ்வு சிறக்கும் என்பது உறுதி.

ஆகவே, நம்பிக்கையோடு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.