மறையுரைச் சிந்தனை (நவம்பர் 10)

எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது”

ஓர் ஊரில் பணக்காரன் ஒருவன் இருந்தான். ஒருநாள் அவன் தன் வீட்டுக்கு குரு ஒருவரை அழைத்து வந்தான். பெரிய வீடு. இருவரும் மொட்டை மாடியில் நின்றுகொண்டிருந்தார்கள். அப்போது பணக்காரன் குருவிடம், தனக்கு மனநிம்மதியே இல்லை என்று மிக வருத்தத்தோடு சொல்லிக்கொண்டிருந்தான்.

“குருவே, வடக்குப் பக்கம் பாருங்கள். அதோ அங்கே தூரத்தில் ஒரு பனைமரம் தெரிகிறதே. அதுவரை என்னோட நிலம்தான். நான்தான் கவனிக்கிறேன். இதோ தெற்குப் பக்கம் தெரிகிறதே ஒரு மாமரம். அதுவரைக்கும் என் இடம்தான். மேற்குப் பக்கம் பாருங்கள், தூரத்தில் ஒரு ட்ரான்ஸ்பார்ம் தெரியுதே. அதுவரைக்கும் என் இடம்தான். அப்புறம் வீட்டுக்கு எதிரில் கிழக்குப் பக்கம். அது முழுவதும் என்னுடையதுதான்” என்று தன் வீட்டைச் சுற்றியுள்ள இடங்களைக் காட்டினான்.

“இந்தச் சொத்துக்கள் எல்லாம் நான் கஷ்டப்பட்டு சம்பாதித்தவை. இத்தனை வசதிகள் இருந்தும் எனக்கு நிம்மதி இல்லாமல் இருக்கிறது குருவே” என்றான். குரு அவனை அமைதியாகப் பார்த்தார். “எல்லா இடங்களிலேயும் சொத்து சேகரித்து வைத்திருக்கிறாய். இங்கே சேர்த்து வைத்திருக்கிறாயா? என்று அவன் நெஞ்சை சுட்டிக் காட்டினார். பணக்காரன் ஒன்றும் புரியாமல் விழித்தான். உடனே குரு அவனிடம், “அன்பு பாசம், நட்பு போன்ற நல்ல சொத்துக்களை அங்கே சேர்க்கவேண்டும். அதுதான் நிம்மதி தரும்” என்றார்.

எல்லா இடத்திலும் சொத்து சேகரித்து வைத்துவிட்டு, உள்ளத்தில் சொத்து சேகரித்து வைக்காமல், நிம்மதியில்லாமல் போன அந்தப் பணக்காரனைப் போன்றுதான் நாமும் பலநேரங்களில் இறைவனுக்கு உகந்த வழியில் நடக்காமல், உலகப் போக்கிலான வழியில் நடந்துவிட்டு நிம்மதியில்லாமல் தவிக்கிறோம்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, “எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது” என்கின்றார். இதையே நாம் நம்முடைய இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

இயேசு சொல்வதுபோல் யாரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது. ஒருவரை வெறுத்துத்தான் இன்னொருவரை அன்பு செய்ய முடியும். அல்லது இன்னொருவரை வெறுத்துத்தான் ஒருவரை அன்புசெய்ய முடியும். அப்படியே நாம் இருதலைவர்களை அன்புசெய்கின்றோம் என்றால், நாம் நமக்கு உண்மையில்லாதவர்களாக இருக்கின்றோம் என்பதுதான் அர்த்தமாக இருக்கின்றது.

ஆண்டவர் இயேசு இப்படிப்பட்ட வார்த்தைகளை பரிசேயக் கூட்டத்திற்கு எதிராக உதிர்க்கின்றார். ஏனென்றால் அவர்கள் கடவுளை, பல்வேறு சட்டதிட்டங்களையும் சடங்குமுறைகளையும் கடைப்பிடித்து, அதன்மூலம் அன்புசெய்வது போன்று மக்களுக்குக் காட்டிக்கொண்டார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் கடவுளின் கட்டளைகளுக்கு எதிராகச் செயல்பட்டார்கள். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், அவர்கள் கைம்பெண்களின் வீடுகளை அபகரிப்பதும் ஆலயத்திலிருந்து நிறைய இலாபம் சம்பாதிப்பதுமாக உலகப் போக்கிலான வாழ்க்கை வாழ்ந்துவந்தார்கள். அதனால்தான் இயேசு அவர்களைப் பார்த்து, “நீங்கள் உங்களை மக்கள்முன் நேர்மையாளராகக் காட்டிக்கொள்கிறீர்கள். கடவுள் உங்கள் உள்ளங்களை அறிவார். நீங்கள் உங்களை மக்கள்முன் உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொள்வது கடவுள் பார்வையில் அருவருக்கத்தக்கதாகும்” என்கின்றார். ஆதலால், பரிசேயக் கூட்டம் யாருக்கும் உண்மையாய் வாழவில்லை என்பதுதான் உண்மை.

நாமும்கூட பல நேரங்களில் மக்கள் பார்வைக்கு நல்லவர்களைப் போன்று பக்திமான்களைப் போன்று வாழ்ந்துகொண்டு, உள்ளுக்குள் பொய்யும் புரட்டுமாய், பணத்தாசை பிடித்தவர்களாய் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இத்தகைய வாழ்க்கை ஒரு வெளிவேடமான, போலித்தனமான வாழ்க்கை. இதைக் குறித்து பவுலடியார் சொல்கின்றபோது, “பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர். அந்த ஆசையால் சிலர் விசுவாசத்தினின்று பிறழ்ந்து திரிந்து பல வேதனைகளைத் தாங்களாவே தங்கள்மேல் வருவித்துக் கொள்கிறார்கள். கடவுளின் மனிதனாகிய நீ, இவற்றிலிருந்து தப்பி ஓடு. நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மனவுறுதி, பணிவு ஆகியவற்றை நாடித் தேடு” (1திமோ 6:10,11)என்பார். ஆகையால், பொருள் ஆசையையும் இன்னபிற ஆசைகளையும் விட்டுவிட்டு ஆண்டவரின்மீது பற்றுக்கொண்டு வாழ்வதே இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வதே இறைவனுக்கு ஏற்ற வாழ்க்கை ஆகும். அத்தகைய வாழ நாம் தயாரா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பணம், பொருள், செல்வம் இவை ஒரு மனிதனுக்கு நிம்மதியை, வாழ்வை தரும் என்று நினைத்துகொண்டு, அவற்றுக்குப் பின்னால் சென்றுகொண்டிருக்கின்றோம். உண்மையில் இவையல்ல, ஆண்டவருக்கு உகந்த வாழ்க்கை வாழ்வதுதான் நமக்கு நிம்மதியைத் தரும்.

ஆகவே, நமக்கு நிம்மதியும் வாழ்வும் தருகின்ற ஆண்டவருக்கு மட்டும் பணிவிடை செய்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.