பொது நலனுக்கு அடித்தளமாக இருப்பது குடும்பம்

சமுதாயத்தின் பொது நலனுக்கு அடித்தளமாக இருப்பது குடும்பம் என்றும், ஒவ்வொரு தனி மனிதரின் அடையாளத்தையும், மாண்பையும் முழுமையாகப் பெறுவதற்கு குடும்பங்கள் பெரும் உதவியாக உள்ளன என்றும் வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர், ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.

பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு திருப்பீடத்தின் நேரடிச் செயலராகப் பணியாற்றும் காப்ரியெல்லா கம்பீனோ (Gabriella Gambino) அவர்கள், “குடும்பம்: ஐரோப்பாவில் கலாச்சார வாழ்வுக்குரிய சூழல்” என்ற தலைப்பில், Brussels நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கருத்தரங்கில், நவம்பர் 6 இச்செவ்வாயன்று உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

“ஐரோப்பாவில் கத்தோலிக்கக் குடும்பக் கழகங்களின் ஒருங்கிணைப்பு” (Fafce) என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்தில் உரையாற்றிய கம்பீனோ அவர்கள், இன்றைய உலகில், அன்பை வளர்ப்பதற்கு, ஒவ்வொரு குடும்பமும் போராடி வருகிறது என்று கூறினார்.

எக்காரணம் கொண்டும் குடும்பங்களை, மற்ற அமைப்புக்களால் நிரப்ப முடியாது என்ற உண்மையை, ஐரோப்பிய சமுதாயம் விரைவில் கற்றுக்கொள்வதன் வழியே, இச்சமுதாயத்தின் உண்மையான கலாச்சாரத்தைக் காக்கமுடியும் என்று கம்பீனோ அவர்கள், தன் உரையில், வலியுறுத்திக் கூறினார்.

ஒவ்வொரு குடும்பமும் ஓர் அருளடையாளம் என்பதை, கிறிஸ்தவ குடும்பங்கள் உணர்ந்து, அந்த அருளடையாளத்திற்குரிய மதிப்பை வழங்கவேண்டும் என்று கம்பீனோ அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.

07 November 2018, 15:56

Comments are closed.