நவம்பர் 6 : நற்செய்தி வாசகம்

எனது வீடு நிரம்பும் அளவுக்கு மக்களை வற்புறுத்திக் கூட்டி வாரும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 15-24

அக்காலத்தில் இயேசுவோடு பந்தியில் அமர்ந்தவர்களுள் ஒருவர் இயேசுவிடம், “இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்” என்றார்.

இயேசு அவரிடம் கூறியது: “ஒருவர் பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்து பலரை அழைத்தார். விருந்து நேரம் வரவே அவர் அழைப்புப் பெற்றவர்களிடம் தம் பணியாளரை அனுப்பி, `வாருங்கள், எல்லாம் ஏற்கெனவே ஏற்பாடு செய்தாகிவிட்டது’ என்று சொன்னார்.

அவர்கள் எல்லாரும் ஒருவர் பின் ஒருவராய்ச் சாக்குப்போக்குச் சொல்லத் தொடங்கினர்.

முதலில் ஒருவர், `வயல் ஒன்று வாங்கியிருக்கிறேன்; அதை நான் கட்டாயம் போய்ப் பார்க்க வேண்டும். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்’ என்றார்.

`நான் ஐந்து ஏர் மாடுகள் வாங்கியிருக்கிறேன்; அவற்றை ஓட்டிப்பார்க்கப் போகிறேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்’ என்றார் வேறொருவர்.

`எனக்கு இப்போதுதான் திருமணம் ஆயிற்று; ஆகையால் என்னால் வர முடியாது’ என்றார் மற்றொருவர். பணியாளர் திரும்பி வந்து இவற்றைத் தம் தலைவருக்கு அறிவித்தார்.

வீட்டு உரிமையாளர் சினமுற்றுத் தம் பணியாளரிடம், `நீர் நகரின் வீதிகளுக்கும் சந்துகளுக்கும் விரைந்து சென்று ஏழையர், உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர் ஆகியோரை இங்கே கூட்டி வாரும்’ என்றார்.

பின்பு பணியாளர், `தலைவரே, நீர் பணித்தபடி செய்தாயிற்று; இன்னும் இடமிருக்கிறது’ என்றார். தலைவர் தம் பணியாளரை நோக்கி, `நீர் வழியோரங்களிலும் நடைபாதைகளிலும் போய், எனது வீடு நிரம்பும் அளவுக்கு மக்களை வற்புறுத்திக் கூட்டி வாரும். அழைக்கப் பெற்றவர்களுள் எவரும் என்னுடைய விருந்தைச் சுவைக்கப் போவதில்லை என உமக்குச் சொல்கிறேன்’ ” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மறையுரைச் சிந்தனை :

அற்ப காரியங்களுக்காக ஆண்டவரை மறந்தவர்கள் நாம்!

அவர் ஒரு தொழிலதிபர். சின்னதாக ஒரு மளிகைக்கடையில் ஆரம்பித்த அவரது தொழில் நகைக்கடை, உணவகம், துணிக்கடை என விரிந்திருந்தது. விடிவதற்கு முன் தொடங்கிவிடும் ஒரு நாள் பொழுது, நள்ளிரவில்தான் அவருக்கு முடியும். மனைவி, பிள்ளைகளுடன் உரையாடவோ, சேர்ந்து சாப்பிடவோகூட நேரமில்லாமல் அவர் ‘வேலை, வேலை’ என்று அலைந்துகொண்டிருந்தார்.

ஒருநாள் இரவு அவர் வீடு திரும்பியபோது மணி பன்னிரண்டைத் தாண்டியிருந்தது. வழக்கமாக அவரை எதிர்கொண்டு அழைக்கக் காத்திருக்கும் அவர் மனைவி அன்றைக்கு இல்லை. வீட்டுப் பணியாளர்தான் கதவைத் திறந்தார். அவர் முகக்குறிப்பை உணர்ந்து அந்தப் பணியாளர் “ஐயா! அம்மாவுக்கு திடீர் என்று மயக்கம் வந்திருச்சு. அதான் மருத்துவமனைக்குப் போய் மருத்துவரப் பார்த்துட்டு, இப்போ அவங்க அறைல தூங்குறாங்க’’ என்றார். “ஏன், என்ன ஆச்சு?’’ என்று அவர் கேட்டதற்கு பணியாளர், “பிரஷர்னு டாக்டர் சொல்லியிருக்காங்க, ஆனா, பயப்படத் தேவையில்லையாம்’’ என்றார்.

உடனே அவர் தன் மனைவி படுத்திருந்த அறைக்குள் அவசரமாக நுழைந்தார். அவருடைய மனைவியோ ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள். அவர், மனைவியின் தலையை ஆதுரமாக வருடிக் கொடுத்தார். “சே இவளை கவனிக்காமல் விட்டுவிட்டோமே!’ என்கிற வருத்தம் அவருக்கு எழுந்தது. அவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்ந்திருந்த நாள்களையெல்லாம் நினைவுக்குக் கொண்டுவர முயன்றார். அவர் நினைவுக்கு வந்தது மிகமிகச் சொற்ப தினங்களே! தன் மனைவியின் பக்கத்தில் இப்படி நெருக்கமாக அமர்ந்தே வெகு நாள்கள் ஆகிவிட்டது என்பதை நினைத்ததும் அவருக்கு `திடுக்’கென்று இருந்தது.

அறையைவிட்டு வெளியே வந்தார். அடுத்த அறைக் கதவைத் திறந்து பார்த்தார். அவருடைய இரு மகன்களும் படுக்கையில் படுத்திருந்தார்கள். சத்தமில்லாமல் கதவை மூடினார். பின்னர் மாடியிலிருந்த தன் தனி அறைக்குப் போய் கதவைச் சாத்திக்கொண்டு கட்டிலில் அமர்ந்தார். ‘இவ்வளவு சம்பாதித்து என்ன பிரயோசனம், பிள்ளைகள், மனைவி இவர்களோடுகூட நேரத்தைச் செலவழிக்க முடியாமல் போய்விட்டதே’ என்று தன்னையே நொந்துகொண்டார். கடைசியில் அவர் ஒரு முடிவுக்கு வந்தார். ‘இன்றுதான் கடைசி. இன்றோடு பிசினஸிலிருந்து ஓய்வு பெற்றுவிட வேண்டும். இனிமேல் வாழ வேண்டும். எனக்காக, என் மனைவிக்காக, என் குடும்பத்துக்காக’

அப்போதுதான் கட்டிலுக்கு அருகிலிருந்த நாற்காலியில் யாரோ உட்கார்ந்திருப்பது அவருக்குத் தெரிந்தது. `கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டுத்தானே வந்தோம்..! இது யார்… எப்படி உள்ளே வந்தார்?’ என்று யோசித்துக்கொண்டே, “யார் நீங்க… எப்படி உள்ளே வந்தீங்க?” என்று கேட்டார். அந்த உருவம் சொன்னது, “நான் மரண தேவதை. உன்னை அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன்’’. அவர் திடுக்கிட்டுப் போய். “ஐயா சாமி! நான் இப்போதுதான் வாழவேண்டும் என்று முடிவு செஞ்சிருக்கேன். இப்போ போய் என்னை கூட்டிட்டுப் போக வந்திருக்கீங்களே! கொஞ்சம் அவகாசம் கொடுங்க!’’ என்று கெஞ்சிக் கேட்டார். ஆனால் மரணதேவதையோ அவருக்கு செவிசாய்க்க மறுத்து, அவருடைய உயிரை அப்படியே பறித்துக்கொண்டு போனது.

மேலே சொல்லப்பட்ட கதையில் வரும் தொழிலதிபரைப் போன்றுதான் நாமும் பலநேரங்களில், வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அற்பக் காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, கடைசியில் நம்முடைய வாழ்வையே தொலைத்து நிற்கின்றோம். இந்நிலையில் நம்முடைய வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழவேண்டும் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இன்றைய இறைவார்த்தையைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமானது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசுவிடம் ஒருவர் விண்ணக விருந்தைப் பற்றிப் பேசும்போது, இயேசு அவருக்கு ஓர் உவமையைச் சொல்கின்றார். அதில் ஒருவர் விருந்தொன்றை ஏற்பாடு செய்கின்றார். அந்த விருந்திற்கு அழைப்புப் பெற்றவர்களை அழைத்துவர தன் பணியாளர்களை அனுப்பி வைக்கிறார். ஆனால் அழைப்புப் பெற்றவர்களோ ‘நான் வயல் ஒன்று வாங்கியிருக்கிறேன்’, ‘ஏர்மாடுகளை வாங்கி இருக்கிறேன்’, ‘இப்போதுதான் எனக்கு திருமணம் ஆகியிருக்கிறது’ என்று ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி திருமண விருந்திற்கு வரமாலே போய்விடுகிறார்கள். அதனால் சினம் கொள்ளும் அந்த மனிதர் தெருவோரங்களில் இருக்கின்ற சாதாரண மனிதர்களை அழைத்து, அவர்களுக்கு விருந்துகொடுக்கின்றார்.

இறைவன் தரும் விண்ணக விருந்து மிகவும் ஒப்புயர்வற்றது, உன்னதமானது. அதையே அற்ப காரியங்களுக்காக வேண்டாம் என்று ஒதுக்குபவர்களை என்னவென்று சொல்வது?. நாமும்கூட பல நேரங்களில் இதுபோன்ற தவறுகளைச் செய்துகொண்டிருக்கின்றோம் என்பதுதான் அப்பட்டமான உண்மை.

ஆகவே, நாம் நமது வாழ்விற்கு ஊற்றும் மகிழ்ச்சிக்குக் காரணருமாகிய இறைவனுக்கு முக்கியத்தும் கொடுத்து வாழ்வோம், அவருக்கு ஏற்புடையவற்றை நாடுவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.