நவம்பர் 5 : நற்செய்தி வாசகம்

நண்பர்களையல்ல, ஏழைகளையும் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 12-14

அக்காலத்தில் தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, “நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும்போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும்.

மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறுபெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்” என்று கூறினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

மறையுரைச் சிந்தனை :

எது உண்மையான விருந்து?

உடுமலைப்பேட்டையைச் சார்ந்தவர் திருவாளர் பால முருகன். இவர் உடுமலைப்பேட்டையை ஒட்டிய பகுதிகளில் பேருந்திலும் நடந்தும் செல்லும்போது ஆதரவற்ற பலர் எச்சில் இலைகளிலிருந்து கிடைக்கின்ற உணவையும் குப்பை மேடுகளில் தூக்கி வீசிப்பட்ட உணவையும் உண்பதைப் பார்த்தார்.

இது பால முருகனின் உள்ளத்தை ஏதோ செய்தது. அவர் உணவின்றித் தவிக்கும் ஆதரவற்ற, கைவிடப்பட்ட மக்களுக்கு ஏதாவது செய்ய நினைத்தார். எனவே அவர் தன்னுடைய இல்லத்திலே உணவு சமைத்து, அதை உடுமலைப் பேட்டை பேருந்து நிலையம், பழனி செல்லும் சாலை, பொள்ளாச்சி சாலை, ராஜேந்திர சாலை என்று நாலா பக்கத்திலும் இருந்த ஆதரவற்ற ஏழை எளிய மக்களுக்குக் கொடுக்கத் தொடங்கினார். தொடக்கத்தில் இருபது பேருக்கு மட்டுமே உணவு கொடுத்து வந்த பால முருகன், இன்றைக்கு 120 க்கும் மேல் உணவு கொடுத்துக்கொண்டு வருகின்றார்.

இவருடைய இந்த சேவையைப் பார்த்துவிட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தங்களால் இயன்ற அளவு அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவற்றைக் கொடுத்து உதவி வருகிறார்கள். யாராவது இவரிடம், “உங்களுடைய இந்த சேவை உங்களோடு முடிந்துவிடுமா?” என்று கேட்டால், “இல்லை இல்லை, நான் செய்துவருகின்ற இந்தப் பணியை என்னுடைய பிள்ளைகளும் அவர்களுடைய பிள்ளைகளும் தொடர்ந்து செய்வார்கள்” என்பார். அந்தளவுக்கு அர்ப்பண உள்ளத்தோடு ஆதவரற்ற மக்களுக்கு ஒவ்வொரு நாளும் உணவு கொடுத்துக்கொண்டு வருகின்ற திருவாளர் பால முருகன் நம்முடைய பாராட்டிற்கு உரியவர்.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம், “நீர் பகல் உணவோ, இரவு உணவோ அளிக்கும்போது உம் நண்பர்களையோ, உம் சகோதர சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்போது அதுவே உமக்குக் கைமாறாகிவிடும். மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறுபெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்” என்கின்றார்.

இயேசு கூறும் இவ்வார்த்தைகளில் நம்முடைய வாழ்விற்கான ஒருசில பாடங்கள் அடங்கியிருக்கின்றன. அவை என்னென்ன இன்று இப்போது பார்ப்போம். பெரும்பாலான நேரங்களில் நாம் நடத்தக்கூடிய சுபகாரியங்கள், அதிலும் குறிப்பாக கொடுக்கப்படுகின்ற விருந்துகள் நம்முடைய ‘வீண்’பெருமையைப் பறைசாற்றுபவையாகவே இருக்கின்றன. இத்தனை பேருக்கு விருந்து கொடுத்தேன், அதில் இன்னார் இன்னார் எல்லாம் கலந்துகொண்டார்கள் என்று தம்பட்ட அடிப்பதாகவே இருக்கின்றன நாம் கொடுக்கின்ற விருந்துகள். இத்தகைய விருந்துகளால் ஒருவருக்குக் கைம்மாறு கிடைக்கவே கிடைக்காது என்று இயேசு மிக அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றார்.

மேற்சொன்னதன்படி நடந்துகொள்கின்றபோது ஒருவருக்கு கைம்மாறு கிடையாது எனச் சொல்லும் இயேசு, பின் எதுதான் ஒருவருக்கு கைம்மாறு கிடைக்கச் செய்யும் என்று என்பதற்கு ஆதரவற்றவர்களுக்கும் உடல் ஊனமுற்றவர்களுக்கும் கொடுக்கக்கூடிய விருந்து தான் ஒருவருக்குக் கைம்மாறு பெற்றுத் தரும் என்கின்றார்.

இந்த உலகத்தில் இருக்கின்ற பலர், தாங்கள் விருந்துகொடுக்கின்றபோது ஏழைகளையோ, அனாதைகளையோ, உடல் ஊனமுற்றவர்களையோ நினைத்துப் பார்ப்பது கூட கிடையாது. ‘அவர்களை ஏன் நினைக்கவேண்டும், அவர்களை நினைத்துப் பார்த்து, அவர்களுக்கு விருந்தளிப்பதால் மட்டும் நம்முடைய பேரும் புகழவும் உயர்ந்துவிடுமா என்ன? என்பது போலே நடந்துகொள்கின்றார்கள். ஏழைகளுக்கும் கைவிடப்பட்டவர்களுக்கும் விருந்துகொடுப்பதால் இந்த மண்ணுலகில் வேண்டுமானால் கைம்மாறு கிடைக்காமல் போகலாம், ஆனால் விண்ணகத்தில் அதற்கான கைம்மாறு நிச்சயம் உண்டு.

இறுதித் தீர்ப்பின்போது, ஆண்டவர் தன்முன்னால் இருக்கின்ற மக்கள் கூட்டத்தைப் பார்த்து கேட்கின்ற முதல்கேள்வி, “நான் பசியாய் இருந்தேன், நீ எனக்கு உணவு கொடுத்தாயா?” என்பதுதான். உணவு கொடுத்தவர்களுக்கு விண்ணகமும், அதனைக் கொடுக்காதவர்களுக்கு நரகமும் கிடைக்கின்றது. ஆகையால், ஒருவருக்கு வாழ்வும் தாழ்வும் அவர் பணக்காரருக்கு எத்தன முறை உணவும் விருந்தும் கொடுத்தார் என்பதைப் பொறுத்து அல்ல, மாறாக உணவின்றித் தவித்த ஏழைக்கு எத்தனை முறை உணவு கொடுத்தார் என்பதைப் பொறுத்தே அமைகிறது.

ஆகவே, நாம் இந்த மண்ணகத்தில் கிடைக்கின்ற கைம்மாறுகாக வீண் ஆடம்பரங்களில் ஈடுபடாமல், விண்ணகத்தில் கிடைக்கின்ற கைம்மாறுக்காக ஏழைகளுக்கு உணவு கொடுப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.