நவம்பர் 4 : நற்செய்தி வாசகம்
இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 28b-34
அக்காலத்தில் மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு சதுசேயர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என்று கேட்டார்.
அதற்கு இயேசு, “ `இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக’ என்பது முதன்மையான கட்டளை.
`உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக’ என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை” என்றார்.
அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், “நன்று போதகரே, `கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை’ என்று நீர் கூறியது உண்மையே. அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்பு கொள்வதுபோல் அடுத்திருப்பவரிடமும் அன்பு செலுத்துவதும் எரிபலிகளையும் வேறு பலிகளையும்விட மேலானது” என்று கூறினார்.
அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், “நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை” என்றார்.
அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரைச் சிந்தனை :
பொதுக்காலம் முப்பத்தி ஒன்றாம் ஞாயிறு
இறையன்பு – பிறரன்பு
ஒருநாள் மாலை வேளையில் ஒரு தாத்தாவும் அவருடைய பத்து வயது பேரனும் சாலையோரம் காலார நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். அவர்கள் போன பாதையில் குட்டி ஆமையொன்று மெல்லத் தவழ்ந்து போய்க்கொண்டிருந்தது. அதைக் கவனித்த பேரன் அதனைத் தன்னுடைய கையோடு எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போனான். இதற்கிடையில் ஆமை தனக்கு ஏதோ ஒரு ஆபத்து வரப்போகிறது என்பதை உணர்ந்து தன்னுடைய தலையை ஓட்டுக்கு உள்ளே இழுத்துக்கொண்டது. வீட்டுக்கு வந்த பேரன் ஆமை தன்னுடைய தலையை உள்ளே இழுத்துக்கொண்டதை அறிந்து, ஒரு குச்சியை எடுத்து அதன்மேலேயே அடித்து, அதன் தலையை வெளியே கொண்டு வர எவ்வளவோ முயன்று பார்த்தான். ஆனால், அவனுடைய முயற்சிகள் அனைத்தும் தோல்வியில்தான் போய் முடிந்தன.
தன்னுடைய பேரன் செய்கின்ற எல்லாவற்றையும் ஓர் ஓரமாய் இருந்து கவனித்துக் கொண்டிருந்த அவனுடைய தாத்தா, “பேரான்டி! ஆமை தனது தலையை வெளியே நீட்டச் செய்வதற்கு இப்படியெல்லாம் நீ கையில் குச்சியை வைத்து, அதன்மீது அடித்துக்கொண்டிருந்தால் அது ஒருபோதும் தனது தலையை வெளியே நீட்டாது. நான் சொல்வதுபோல் செய், நீ நினைப்பது நிச்சயம் நடக்கும்” என்றார். பின்னர் பேரன், தாத்தா சொன்னது போன்று தனக்கு முன்பாக ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் கொஞ்சம் விறகுக்கட்டைகளை இட்டு, அதற்கு நெருப்பு மூட்டினான். அந்த நெருப்பிலிருந்த வெளிப்பட்ட இதமான சூட்டிற்கு ஆமை தன்னுடைய தலையை வெளியே நீட்டிக்கொண்டு அவனை நோக்கி வந்தது.
இதைப் பார்த்து தாத்தா பேரனிடம் சொன்னார், “தம்பி! நீ இந்த ஆமையின் மீது பலவந்தமாக குச்சியை அடித்தபோது அது வெளியே வரவில்லை. மாறாக, அதற்கு முன்பாக நீ இதமான நெருப்பினை மூட்டியபோது, அது உன்னை நோக்கி வரத்தொடங்கியது”. இப்படிச் சொல்லிவிட்டு தாத்தா பேரனிடம் தொடர்ந்து சொன்னார், “யாரையும் அதிகாரத்தினாலோ, அடக்கு முறையினாலோ தன்வயப்படுத்த முடியாது, அன்பினால் மட்டும்தான் ஒருவரை தன் வயப்படுத்த முடியும்”.
ஆம், வேறு எதையும் விட அன்பிற்குத்தான் அடுத்தவரை ஆட்கொள்ளும் வல்லமை இருக்கின்றது என்பதை இந்த நிகழ்வின் வழியாக அறிந்துகொள்ளலாம். பொதுக்காலத்தின் முப்பத்தி ஒன்றாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக் கேட்ட வாசகங்கள் முதன்மையான கட்டளையான இறையன்பை, பிறரன்பைக் குறித்து பேசுகின்றன. நாம் அதனைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
நற்செய்தி வாசகத்தில் மறைநூல் அறிஞர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என்று கேட்கின்றார். அவர் இயேசுவிடம் இவ்வாறு கேட்பதன் நோக்கம் இயேசுவைச் சோதிக்கவேண்டும் என்பது கிடையாது. மாறாக, இயேசுவை பொறுத்தளவில் எது முதன்மையான கட்டளை என்பதை அறிந்துகொள்ளவே அவர் இப்படிக் கேட்கின்றார். மேலும், முதன்மையான கட்டளை எது என்பதற்கு யூத இரபிகள் பலரும் பலவிதமாகச் சொல்லி இருந்தார்கள். ஹில்லல் என்பவரோ, “உனக்குத் தீங்கானதை, நீ வெறுப்பதை பிறருக்குச் செய்யாதே” என்பதைத்தான் முதன்மையான கட்டளையாகச் சொல்லி வந்தார். இத்தகைய சூழலில்தான் மக்களால் மதிக்கப்பட்ட இயேசு முதன்மையான கட்டளை என்று எதைச் சொல்கின்றார் என அறிந்துகொள்ள மறைநூல் அறிஞர் அவரிடம் அனைத்திலும் முதன்மையான கட்டளை எது என்று கேட்கின்றார்.
இயேசு அவருக்கு இணைச்சட்ட நூல் 6 ஆம் அதிகாரம் 4,5 வசனங்களையும் லேவியர் புத்தகம் 19 ஆம் அதிகாரம் 18 ஆம் வசனத்தையும் இணைத்து, “ ‘நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயா’ என்பது முதன்மையான கட்டளை. உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக’ என்பது இரண்டாவது கட்டளை இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை” என்கின்றார். அதாவது இறையன்பும் பிறரன்பும்தான் முதன்மையான கட்டளை என்று இயேசு அந்த மறைநூல் அறிஞருக்கு மிக அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றார்.
இயேசு இவ்வாறு சொன்னதைத் தொடர்ந்து மறைநூல் அறிஞர் அவரிடம், இறைவனை அன்பு செய்வதும் மனிதர்களை அன்புசெய்வதும் எரிபலிகளைவிட மேலானது என்கின்றார்.
யூதர்கள் கடவுளை அன்பு செய்வதுதான் முதன்மையான கட்டளை என்று நினைத்து வந்தார்கள். அதனாலேயே அவர்கள் பலிகளை ஒப்புக்கொடுப்பது, ஓய்வுநாள் சட்டங்களைக் கடைபிடிப்பது என்று அவற்றில் கண்ணும் கருத்துமாய் இருந்தார்கள். ஆனால், அவர்கள் சக மனிதர்களை அன்பு செய்வதற்குத் தவறினார்கள். ஆண்டவர் இயேசுவோ கடவுளை எப்படி அன்பு செய்கின்றோமோ அந்த அளவுக்கு சக மனிதர்களை அன்பு செய்யவேண்டும் என்று வலியுறுத்திக் கூறுகின்றார். இவ்வாறு இயேசு சொன்னது மட்டுமல்லாமல், சொன்னத்தை வாழ்வாக்கவும் செய்தார்.
எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகம் இயேசு இறைவனையும் சக மனிதர்களையும் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனதோடும் முழு ஆற்றலோடும் அன்பு செய்தார் என்பதற்குச் சான்றாக இருக்கின்றது. அங்கு நாம் வாசிக்கின்றோம், இவர் தூயவர் மாசற்றவர், கபடற்றவர், வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவர், மக்களுடைய பாவங்களுக்காக தம்மையே பலியாகச் செலுத்தியவர் என்று. தூயவர், மாசற்றவர் போன்ற வார்த்தைகள் அவர் கடவுளை முழுமையாய் அன்பு செய்ததற்குச் சான்றாக இருக்கின்றது. மக்களுடைய பாவங்களுக்காக செலுத்தினார் என்ற வார்த்தைகள் அவர் மனிதர்களை முழுமையாய் அன்புசெய்தார் என்பதற்குச் சான்றாக இருக்கின்றது. ஆகவே. நாம் இயேசுவைப் போன்று கடவுளையும் சக மனிதர்களையும் அன்பு செய்யவேண்டும் என்பதுதான் நம்முடைய மனதில் கொள்ளும் செய்தியாக இருக்கின்றது.
மனிதர்களாகிய நாம் பல நேரங்களில் பக்தி முயற்சிகளைச் செய்வதன் வழியாகவும் ஆலய வழிபாடுகளில் கலந்து கொள்வதன் வழியாகவும் கடவுள்மீது நமக்கு இருக்கும் அன்பினை வெளிபடுத்துகின்றோம். ஆனால், உடன் வாழுகின்ற சகோதர சகோதரிகளை நாம் அன்பு செய்வதற்குத் தவறிவிடுகின்றோம். கடவுள் மீது நாம் கொள்கின்ற அன்பு நம்மை சக மனிதரிடம் அன்பு கொள்வதற்குத் தூண்டவேண்டும். சக மனிதரிடம் நாம் கொள்கின்ற அன்பு நம்மை கடவுளிடமும் அவருடைய ஆட்சியிலும் கொண்டு சேர்க்கவேண்டும். அப்போதுதான் நம்முடைய அன்பானது முழுமையானதாய் இருக்கும். இல்லையென்றால் அது போலியான அன்பாகவே இருக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது. நாம் கடவுளிடம் அன்பு கொண்டிருக்கின்றோமா? அந்த அன்பு சக மனிதர்களிடம் வெளிப்படுகின்றதா? என்பது சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்றாக இருக்கின்றது.
கடவுளை முழுமையாய் அன்பு செய்யவேண்டும். அதே அளவுக்கு சக மனிதர்களை அன்பு செய்யவேண்டும் என்று இதுவரைக்கும் சிந்தித்துப் பார்த்தோம். கடவுளை அன்பு செய்வது, அதே அளவுக்கு சக மனிதர்களை செய்வது என்ற இந்த அன்புக் கட்டளை நாம் கடைப்பிடித்து வாழ்கின்றபோது இறைவன் நமக்கு எத்தகைய ஆசீர்வாதத்தைத் தருவார் என்பதை இன்றைய முதல்வாசகம் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றது. அங்கு நாம் வாசிக்கின்றோம், “நீங்களும் உங்கள் பிள்ளைகளும், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லா நியமங்களையும் கட்டளைகளையும் நீங்கள் கடைபிடிப்பீர்களாக! இதனால் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்; பாலும் தேனும் நிறைந்து வழியும் நாட்டில் நீ நலம் பல பெற்று மேன்மேலும் பெருகுவாய்” என்று வாசிக்கின்றோம். ஆம், கடவுளின் இந்த கட்டளையைக் (இறையன்பு, பிறரன்பு) கடைபிடித்து வாழ்கின்றபோது நாம் நலம் பல பெறுவதோடு நீண்ட நாட்கள் வாழ்வதற்கான ஆசிரைப் பெறுவோம் என்பது உறுதி. அது மட்டுமல்லாமல் நாம் இறையாட்சியை உரித்தாக்கிக் கொள்வோம் என்பது உறுதி.
கடவுளையும் சக மனிதனையும் அன்புசெய்வதால் நாம் எத்தகைய ஆசிரைப் பெறுவோம் என்பதை விளக்க ஒரு கதை.
ஓர் ஊரில் ஒரு பணக்காரப் பெண்மணி இருந்தார். அவருக்கு நீண்ட நாட்களாகக் குழந்தையே இல்லை. எனவே, அவர் பக்கத்து ஊரில் இருந்த அனாதை இல்லத்திற்குச் சென்று, அங்கிருந்த பதினைந்து வயது ஆனி என்ற பெண் குழந்தையைத் தத்தெடுத்தார். அப்பெண் குழந்தை பெண்மணியிடம் மிகுந்த அன்பு காட்டியது, அது மட்டுமல்லாமல் அக்குழந்தை பக்தியாகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்தது. இதனால் அந்தப் பணக்காரப் பெண்மணிக்கு ஆனியை மிகவும் பிடித்துவிட்டது, அவளை அவர் தான் பெற்றெடுத்த மகளைப் போன்று வளர்த்து வந்தார்.
அந்த ஆண்டு கிறிஸ்து பிறப்புப் பெருவிழா வந்தது. அப்போது அந்த பணக்காரப் பெண்மணி ஆனியிடம் சிறிது பணம் கொடுத்து, “இந்த கிறிஸ்மஸ்க்கு உனக்குப் பிடித்த உடையை எடுத்துக்கொள்” என்றார். ஆனியோ மிகவும் தயங்கியவாறு நின்றார். “என்னமா? ஏன் இப்படி தயங்கி நிற்கின்றாய்?” என்று கேட்டார் அவர். “அது ஒன்றுமில்லையம்மா! எனக்கு இப்போது தேவைக்கு அதிகமாகவே ஆடைகள் இருக்கின்றன. ஆனால், முன்பு நான் இருந்த அனாதை இல்லத்தில் என்னுடைய தோழியான ஜெனி போதிய ஆடையின்றி இருக்கின்றாள். அவளுக்கு நான் நீங்கள் கொடுத்த பணத்திலிருந்து ஆடை வாங்கித் தருட்டுமா?” என்றாள். ஆனியின் வார்த்தைகளில் வெளிப்பட்ட அவளுடைய தோழியின் மீதான அன்பு அவரை மெய்சிலிர்க்க வைத்தது. உடனே அவர் ஆனியிடம், “நான் உனக்குக் கொடுத்த பணத்தை நீயே வைத்துக்கொள், உன்னுடைய தோழி ஜெனிக்கு தனியாக நான் பணம் தருகின்றேன். அதை வைத்து அவளுக்கு உடைகள் வாங்கித் தா” என்றார். இதைக் கேட்டு ஆனி இன்னும் அதிகமாய் மகிழ்ச்சி அடைந்தாள்.
நாம் நம்மோடு வாழக்கூடியவர்களிடம் உணமையான அன்பு வைத்திருக்கும்போது அது நமக்கு மட்டுமல்ல, நம்மைச் சார்ந்தவர்களுக்கும் ஆசிரைப் பெற்றுத் தருகின்றது என்னும் உண்மையை இந்தக் கதை மிக அழகாக எடுத்துக்கூறுகின்றது.
ஆகவே, ஆண்டவர் இயேசுவின் வழியில் நடக்கும் நாம், இறைவனையும் நம்மோடு வாழும் அயலாரையும் முழுமையாய் அன்பு செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.
Comments are closed.