இலவுரன்தீனோ கல்லறைத் தோட்டத்தில் திருத்தந்தையின் திருப்பலி

வெள்ளியன்று, இறந்த நம்பிக்கையாளர் அனைவரின் திருநாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மரணம், மறுவாழ்வு ஆகிய எண்ணங்களை தன் டுவிட்டர் செய்தியில் வெளியிட்டார்.

“மரணமே இறுதிச் சொல் என்ற எண்ணத்தை அழிக்க இயேசு செயலாற்றினார். நம்பிக்கை கொண்டோர் அனைவரும் தந்தையின் இரக்கம் மிகுந்த அன்பினால் உருமாற்றம் பெற்று, நித்திய, மகிழ்வான வாழ்வை அடைவர்” என்ற நம்பிக்கை மிகுந்த சொற்களை, திருத்தந்தை, தன் டுவிட்டர் செய்தியாக பதிவு செய்தார்.

மேலும், நவம்பர் 2, இவ்வெள்ளி பிற்பகல் 3.15 மணிக்கு, வத்திக்கானிலிருந்து புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 3.45 மணிக்கு, இலவுரன்தீனோ கல்லறை வளாகத்தைச் சென்றடைந்தார்.

பிறக்குமுன்னரே இறந்துவிடும் குழந்தைகளுக்கென, அவ்வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள கல்லறைகளை முதலில் பார்வையிட்டு, அங்கு சிறிது நேரம் செபித்தபின், அங்குள்ள உயிர்த்த இயேசு சிற்றாலயத்தில், இறந்த நம்பிக்கையாளர் அனைவருக்காகவும் திருப்பலி நிறைவேற்றினார்.

பிறக்கும் முன்னரே இறந்துபோகும் குழந்தைகளுக்கென இலவுரன்தீனோ கல்லறையில், ‘வானதூதரின் தோட்டம்’ என்ற பெயருடன் ஆறு ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டுள்ள கல்லறைக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதல் முறையாகச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2013, 2014, 2015 ஆகிய மூன்று ஆண்டுகள், உரோம் நகரில் அமைந்துள்ள காம்போ வெரானோ என்ற கல்லறைத் தோட்டத்தில், நவம்பர் 2ம் தேதியன்று திருப்பலிகளை நிறைவேற்றியத் திருத்தந்தை, 2016ம் ஆண்டு, பிரீமா போர்த்தா எனுமிடத்தில் அமைந்துள்ள கல்லறைத் தோட்டத்தில் திருப்பலியாற்றினார்.

இரண்டாம் உலகப்போரில் இறந்த படைவீரர்கள் புதைக்கப்பட்டுள்ள நெத்துனோ கல்லறைத் தோட்டத்தில், உயிர் துறந்த வீரர்களின் நினைவாக, கடந்த ஆண்டு, திருப்பலி நிறைவேற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Comments are closed.