மறையுரைச் சிந்தனை (நவம்பர் 03)

ஆணவமோ அழிவு தரும்; தாழ்ச்சிதான் உயர்வு தரும்!

ஓர் ஊரில் விவசாயி ஒருவர் இருந்தார். அவருக்கு பண்ணை நிலம் ஒன்றும் இருந்தது. அதில் அவர் ஆடு, மாடு, கோழி, நாய் போன்ற பிராணிகளை எல்லாம் வளர்ந்துவந்தார். மற்றவைகளை எல்லாம் பண்ணையிலே வைத்திருக்க, நாயை மட்டும் தன்னுடைய வீட்டிற்குள் வர அனுமதித்தார்.

இது நாயின் மனதில் ஒருவிதமான ஆணவத்தை ஏற்படுத்தியது. எனவே ஆடு, மாடு, கோழியைப் பார்த்து, ‘இந்த வீட்டில் நான்தான் பெரியவன்’ என்பது போல் எல்லாரையும் பார்த்து குரைக்கத் தொடங்கியது. ஆனால் ஆடும் ஆடும் கோழியும் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் அந்த நாய் ‘நம்முடைய மதிப்பு இவைகளுக்குச் தெரியவில்லை’ என்று மனதிற்குள்ளாகவே சொல்லிக்கொண்டு காட்டுப் பக்கம் போனது.

காட்டில் மான் ஒன்று மேய்ந்துகொண்டிருந்தது. அதைப் பார்த்த நாய் குரைக்கத் தொடங்கியது. இதனால் பயந்துபோன மான், ஏதோ புதுவகையான கொடிய மிருகம் போலும் என நினைத்துக்கொண்டு, அங்கிருந்து தலைதெறிக்க ஓடிப்போனது. இதனால் நாயினுடைய மனதில் ‘நம்முடைய பண்ணையிலிருகின்ற ஜீவன்களுக்கு நம்முடைய மதிப்புத் தெரியாவிட்டாலும் இதற்கு நன்றாகவே தெரிகின்றது. அதனால்தான் இந்த மான் இப்படி பயந்து ஓடுகின்றது’ என நினைத்துக் கொண்டது. தொடர்ந்து அது காட்டிற்குள் நடந்து சென்றது. அங்கே ஒரு புல்வெளி இருந்தது. அதில் சிங்கம் ஒன்று இளைப்பாறிக்கொண்டிருந்தது. இதற்கு நம்முடைய மதிப்பு தெரிகிறதா… பார்ப்போம் என்று அதற்கு முன்பாகப் போய் நாய் குரைத்தது. சிறுதுநேரம் அமைதியாக இருந்த சிங்கம், ஒரே பாய்ச்சலில் நாயின் மீது பாய்ந்து, அதை அடித்துக் கொன்றுபோட்டது.

நான்தான் பெரியவன், எல்லாரும் எனக்கு மதிப்பளிக்கவேண்டும் என்ற அலைபவர்களின் பாடு, கடைசியில் இப்படித்தான் முடியும் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த கதை நமது சிந்தனைக்குரியது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு பரிசேயர் தலைவருடைய வீட்டிற்கு உணவருந்தச் செல்கின்றார். அவ்வாறு செல்லும்போது, விருந்தினர்கள் முதன்மையான இடங்களில் அமர்வதற்கு போட்டி போடுவதைப் பார்க்கின்றார். உடனே இயேசு அவர்களுக்கு அறிவுரை கூறத் தொடங்குகின்றார்.

பொதுவாக மனிதர்கள், ‘மற்றவர் தம்மை மதிக்கவேண்டும், அவர்கள் தங்களை உயர்வாக நினைக்கவேண்டும்’ என்றே நினைப்பார்கள். திருமண விருந்துகளில்கூட இதேநிலைதான். அதனால்தான் திருமண விருந்துகளுக்குப் போகிறவர்கள் முதனமையான இருக்கைகளில் அமர்கிறார்கள். இயேசுவின் காலத்திலும் இதே ‘கூத்து’தான் நடந்தது. எனவேதான் இயேசு திருமண விருந்துக்கு வந்தவர்களிடம், “உங்களை யாராவது திருமண விருந்துக்கு அழைத்தால், முதன்மையான இடத்தைப் போய் பிடித்துக்கொள்ளாதீர்கள், ஒருவேளை உங்களை அழைத்த அவர், உங்களைவிடப் பெரியவர் ஒருவரை அழைத்திருக்கலாம், அத்தகைய நிலையில் அவர் உங்களிடம் வந்து, ‘இவருக்கு இந்த இடத்தைக் கொடுங்கள்’ என்று சொன்னால் அது உங்களுக்கு அவமானமாக இருக்கும். மாறாக, உங்களை யாராவது திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், நீங்கள் போய் கடைசி இடத்தில் அமர்ந்துகொள்ளுங்கள். ஒருவேளை உங்களை விருந்துக்கு அழைத்தவர் உங்களிடம் வந்து, ‘ஏன் இங்கே அமர்ந்துவிட்டீர்கள், முதன்மையான இடத்திற்கு வாருங்கள்’ என்று சொன்னால், அது எல்லாருக்கும் முன்பாக பெருமையாக இருக்கும்” என்று சொல்கின்றார்.

இவ்வாறு சொல்லிவிட்டு இயேசு, தம்மைத்தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்படுவர். தம்மைத் தாமே தாழ்த்துவோரோ உயர்த்தப்படுவர்” என்கின்றார். இயேசு கூருகின்ற இவ்வார்த்தைகளில் இரண்டு உண்மைகள் அடங்கி இருக்கின்றன. ஒன்று, யாராரெல்லாம் உள்ளத்தில் ஆணவத்தோடும் அகங்காரத்தோடும் இருக்கிறார்களோ, அவர்கள் தாழ்த்தப் படுவார்கள் என்பதாகும். இரண்டு, யாராரெல்லாம் உள்ளத்தில் தாழ்ச்சியோடு இருக்கிறார்களோ, அவர்கள் உயர்த்தப்படுவார்கள் என்பதாகும். தூய அகுஸ்தினார் ஒருமுறை இவ்வாறு குறிப்பட்டார், “ஆணவம் வானதூதரை (லூசிபரை) சாத்தானாக்கியது. மாறாக தாழ்ச்சியோ மனிதர்களை வானதூதர்கள் ஆக்கும்” என்று. நாம் தாழ்ச்சி நிறைந்த உள்ளதோடு வாழ்ந்து வானதூதர்கள் ஆகப்போகிறோமா? அல்லது இதற்கு மாறாகச் செயல்படப்போகிறோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

திருச்சபை ஏழு தலையாய பாவங்களைப் பட்டியலிடும்போது, ஆணவம்தான் முதலாவது வருகின்றது. மற்றவை பின்வருபவை ஆகும்: கோபம், பேராசை, பொறாமை, பெருந்தீனி, கட்டுப்பாடற்ற பாலுணர்வு, சிலைவழிபாடு. எனவே, இத்தகைய கொடும்பாவத்தை நம்முடைய வாழ்விலிருந்து அகற்றுவது நல்லது. ஏனெனில் மேன்மையடைய தாழ்ச்சியே வழி.

ஆகவே, நம்முடைய உள்ளத்தில் இருக்கின்ற ஆணவத்தை அகற்றி, தாழ்ச்சியைக் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.