அனைத்துப் புனிதர்களின் விழா (நவம்பர் 01)

கி.மு.முதலாம் நூற்றாண்டில் உரோமையை மார்கஸ் அக்ரிப்பா (கி.மு. 63- கி.மு. 12) என்ற மன்னன் ஆண்டுவந்தான். அவன் எல்லா தெய்வங்களுடைய சிலைகளையும் வைப்பதற்கு என்று பாந்தயோன் என்ற ஆலயத்தைக் கட்டி எழுப்பினான். இவ்வாலயமானது கி.பி. 126 ஆம் ஆண்டு மீண்டுமாகக் கட்டி எழுப்பப்பட்டது. 4 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதம் உரோமையின் அரச மதமாக மாறியபிறகு, அதன்பிறகு வந்த போகஸ் என்ற மன்னன் பந்தயோன் என்ற அந்த ஆலயத்தை திருச்சபைத் தந்துவிட்டான். அப்போது திருச்சபையின் தலைவராக – திருத்தந்தையாக – இருந்த ஆறாம் போனிபேஸ் என்பவர் எல்லா தெய்வங்களுக்குமாக இருந்த பந்தயோன் ஆலயத்தை அனைத்துப் புனிதர்களின் ஆலயமாக மாற்றினார். அன்றிலிருந்துதான் அனைத்துப் புனிதர்களின் விழாவானது அதிகாரப் பூர்வமாகக் கொண்டாடப்பட்டது.

வரலாற்றுப் பின்னணி
இன்று நாம் புனிதர்கள் அனைவருடைய விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். திருச்சபை ஒவ்வொருநாளும் ஒரு புனிதரை நினைவுகூறும்போது, எதற்காக அனைத்துப் புனிதர்களின் விழா என்று தனியாக ஒரு நாளை ஒதுக்கி புனிதர்களுக்கு விழாக் கொண்டாடவேண்டும் என்றும் நினைக்கலாம். ஆனால் திருவெளிப்பாடு நூலில், “யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும்திரளான மக்கள் – எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சேர்ந்தவர்கள் – அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டு, கையில் குருத்தோலைகளைப் பிடித்தவர்களாய், “அரியனையில் வீற்றிருக்கும் எங்கள் கடவுளிடமிருந்தும் ஆட்டுக்குட்டியிடமிருந்துமே மீட்பு வருகின்றது” என்று உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களை எல்லாம் 365 நாட்களில் நினைவு கூர்ந்து கொண்டாடுவது என்பது இயலாத காரியமாகும். எனவேதான் திருச்சபை, இந்த மண்ணுலகில் கடவுளுக்காக உகந்த வாழ்க்கை வாழ்ந்து வந்த தூயவர்களுக்கு விழா எடுத்துக்கொண்டாடுகின்றது. அவ்விழாதான் ‘அனைத்துப் புனிதர்கள் விழா’ என்று கொண்டாடப் படுகின்றது.
முதலில் புனிதர்கள் என்பவர் யார்?, எதற்காக நாம் அவர்களுக்கு விழா எடுத்துக்கொண்டாட வேண்டும் என்று சிந்தித்துப் பார்த்துவிட்டு, இவ்விழாவின் வரலாற்றுப் பின்னணியை சற்று அறிந்துகொள்வோம். புனிதர்கள் என்பவர்கள் வானத்திலிருந்து குதித்த வானதூதர்கள் கிடையாது, அவர்கள் இந்த மண்ணுலகில் தோன்றியவர்கள். மண்ணுலகில் தோன்றினாலும் தங்களுடைய மண்ணக வாழ்க்கையை கடவுளுக்கு உகந்ததாய் மாற்றியமைத்துக்கொண்டு, இறைத்திருவுளத்தை தங்களுடைய வாழ்வால், வார்த்தையால் நிறைவேற்றியவர்கள் அவர்கள்தான் புனிதர்கள் – தூயவர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். புனிதர்களை எதற்காக நாம் நினைவுகூறவேண்டும் என்ற கேள்வி எழலாம். அதற்கு விவிலியத்திலிருந்தே பதில் இருக்கின்றது. “உங்களுக்குக் கடவுளின் வார்த்தையை எடுத்துச் சொன்ன உங்கள் தலைவர்களை நினைவுகூருங்கள். அவர்களது வாழ்வின் நிறைவை எண்ணிப் பார்த்து, நீங்களும் அவர்களைப் போல நம்பிக்கையுள்ளவர்களாய் இருங்கள்” (எபி 13:7) என்கிறார் எபிரேயருக்கு எழுதிய திருமுகத்தின் ஆசிரியர். ஆம், நமக்கு இறைவாக்கைப் போதித்த புனிதர்களை நினைவுகூர்ந்து பார்க்கவேண்டும், அவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றி அவர்களுடைய வழியில் நடக்கவேண்டும். அதைத்தான் திருச்சபை நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றது.
இரண்டாம் வத்திகான் சங்கமானது “தூயவர்களின் வாழ்விலே மாதிரியையும் அவர்களின் ஒன்றிப்பிலே தோழமையையும் அவர்கள் பரிந்து பேசுவதால் உதவியையும் அவர்களிடமிருந்து நாம் தேடுகின்றோம்” என்கிறது. ஆகவே, புனிதர்கள் அல்லது தூயவர்களின் விழாவைக் கொண்டாடுவதால் பயன்பெறப் போவது என்னமோ நாம்தான் என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.
எதற்காக அனைத்துப் புனிதர்களின் விழாவைக் கொண்டாடுகின்றோம் என்று சிந்தித்துப் பார்த்த நாம், இவ்விழாவின் வரலாற்றுப் பின்னணியை இப்போது உணர்ந்துகொள்வோம். புண்ணிய வாழ்வு அல்லது சாட்சிய வாழ்வு வாழ்ந்து வந்தவர்களுக்கு விழா எடுத்துக் கொண்டாடும் வழக்கம் 155- 156 ஆம் ஆண்டிலிருந்தே இருந்து வந்திருக்கிறது. கமிர்னா நகரின் ஆயராக இருந்த போலிக்கார்ப்பின் எலும்புகளை எடுத்து, அதனை பத்திரமாக வைத்து இறைமக்கள் அவருடைய விண்ணகப் பிறப்பு விழாவைக் கொண்டாடி இருக்கிறார்கள். மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த சிப்ரியான் என்பவரும் புனிதர்களுக்கு விழா எடுத்துக்கொண்டாடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இப்படி இருந்த வழக்கம் திருத்தந்தை ஆறாம் போனிபேஸ் காலத்தில் பந்தயோன் ஆலயம் அனைத்துப் புனிதர்களின் ஆலயமாக மாற்றப்பட்டபிறகு அனைத்துப் புனிதர்களின் விழா திருச்சபை முழுவதும் கொண்டாடப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை இவ்விழாவானது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1 ஆம் நாள் கொண்டாடப் பட்டு வருகின்றது.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
அனைத்துப் புனிதர்களின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவர்களிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்ப்போம்.
1. சாட்சிய வாழ்வு
புனிதர்கள் அசாதரணமான காரியங்களைச் செய்துவிடவில்லை. மாறாக அவர்கள் சாதரணமான காரியங்களை அசாதாரணமாக செய்தார்கள். அதனால்தான் அவர்கள் இன்றைக்கு நம்மால் புனிதர்களாக நினைவுகூரப்படுகின்றார்கள். எத்தகைய வாழ்க்கை வாழ்ந்தால் நாம் தூயவர்களாக மாறலாம் என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அதற்கு விடையாக இன்றைய நாளில் நாம் படிக்கக்கேட்கும் நற்செய்தி வாசகமானது அமைகின்றது. ஏழையரின் உள்ளத்தவராக, துயறுருபவராக, கனிவுடையவராக, நீதியை நிலைநாட்டும் வேட்கை கொண்டவராக, இரக்கமுடையவராக, தூய்மையான உள்ளத்தோராக, அமைதியை ஏற்படுத்துவோராக, நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோராக நாம் வாழும்போது உண்மையிலே நாம் தூயவராக இருக்கின்றோம் என்பதில் எந்தவித சந்தேகமில்லை. கிறிஸ்தவ வாழ்வின் மையமாக இருக்கும் இத்தகைய போதனைகளின் படி நாம் வாழ்கின்றோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
அன்னை தெரசாவின் வாழ்வில் நடைபெற்ற நிகழ்வு இது. ஒருநாள் இலண்டன் தெருக்களில் அன்னை தெரசா நடந்துகொண்டிருந்தார். அப்போது தெருவோரத்தில் மிகவும் மோசமாகவும் கோரமாகவும் ஒருவர் இருந்தார். அவர் அருகே சென்ற அன்னை தெரசா, அவரது கையை எடுத்து குலுக்கியபடியே கேட்டார், “எப்படி இருகிறீர்கள்?” என்று. அதற்கு அம்மனிதர் அன்னையின் கையில் இருந்த இளஞ்சூட்டை உணர்ந்தவராய், “அம்மா… நீண்ட நாட்கள் கழித்து, இப்போதுதான் ஓர் இளஞ்சூடான, இனிமையான அன்பை ஒரு மனிதரின் கரங்களின் மூலமாக உணர்கின்றேன்” என்றார்.
அன்னை தெரசா செய்தது பெரிய காரியமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் இந்த ஒரு சாதாரண அன்புச் செயல் எல்லோராலும் புறக்கணிக்கப்பட்ட அந்த மனிதரின் உள்ளத்தில் அன்பை, மகிழ்ச்சியைக் கொண்டுவந்திருக்கும் என்பதில் எந்தவிதச் சந்தேகமுமில்லை. நாம் அன்பினால் உந்தப்பட்டு பெரிய காரியங்களைச் செய்யவேண்டும் என்பதில்லை, சாதாரண காரியங்களைச் செய்தாலும் போதும். அது நம்மை விண்ணகத்தில் உள்ள புனிதர்கள் கூட்டத்தில் சேர்த்துவிடும். இதில் மாற்றுக் கருத்து எதுவும் கிடையாது.
ஆகவே, புனிதர்களைப் போன்று நாம் செய்யக்கூடிய எளிய, அன்புச் செயல்களால் இயேசுவுக்கு சான்று பகர்வோம், அதன்வழியாக விண்ணகத் திருக்கூட்டத்தில் இடம்பெறும் பாக்கியம் பெறுவோம்.
2. பரிந்து பேசுதல்
புனிதர்கள் இறைவனின் திருமுன் இருப்பதால் அவர்கள் எப்போதும் நமக்காக பரிந்து பேசுகிறார்கள் என நாம் நம்புகிறோம். இத்தகைய ஒரு பணியைச் செய்துவரும் புனிதர்களை நமக்குத் தந்திருக்கும் இறைவனுக்கு நாம் நன்றி செலுத்தவேண்டும். அதே நேரத்தில் புனிதர்களைப் போன்று கடவுளிடத்தில் பரிந்து பேசும் வல்லமை நமக்கு இல்லாவிட்டாலும், நாம் ஒருவர் மற்றவர்க்காக ஜெபிக்கலாம். ‘நம்மோடு இருப்பவர்களுக்காக நாம் ஜெபிக்கும்போது இறைவன் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்வர்’ என்பது ஆழமான உண்மை. ஆகவே, புனிதர்களின் பரிந்துரையின் மீது ஆழமான நம்பிக்கை வைத்திருக்கும் நாம், ஒருவர் மற்றவருக்காக ஜெபிப்போம்.
‘அவனும் அவளும் புனிதராக மாறும்போது, என்னால் ஏன் புனிதராக மாறமுடியாது?” என்பார் தூய அகுஸ்தினார். அனைத்துப் புனிதர்களின் விழாவைக் கொண்டாடும் இன்று, நாமும் புனிதர்களாக மாற இறைவன் நமக்குக் கொடுத்திருக்கும் கட்டளைகளின் படி வாழ முயற்சிப்போம். நம்மோடு வாழும் சகோதர சகோதரிகளிடத்தில் உண்மையான அன்பும் அக்கறையும் கொண்டுவாழ்வோம். அதன்வழியாக புனிதர்கள் கூட்டத்தில் இடம்பெறும் பேறுபெறுவோம்

Comments are closed.