மத வன்முறைகளை நிறுத்துவது, உண்மை மதங்களின் கடமை

பகை உணர்வுகளாலும், காயங்களாலும் துவண்டுபோயிருக்கும் இவ்வுலகில், மதத்தின் பெயரால் விதைக்கப்படும் பகைமை உணர்வுகளை முடிவுக்குக் கொணர, ஒன்றித்துப் பணியாற்றுவோம் என்று, அழைப்பு விடுத்துள்ளார், இந்திய ஆயர், தியடோர் மஸ்கரீனஸ்.
சீக்கிய மதத்தலைவர், Bhai Kanhaiya அவர்கள் மறைந்ததன் 300ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, புது டில்லியில் இடம்பெற்ற பலசமயக் கூட்டமொன்றில், இந்திய ஆயர் பேரவையின் செயலர், ஆயர் மஸ்கரீனஸ் அவர்கள் வழங்கிய உரையில், இவ்வாறு கூறினார்.
மத அடிப்படையில் உருவாகும் வன்முறைகள், குறிப்பாக, மத சிறுபான்மையினருக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்துவரும் இன்றையச் சூழலில், இந்நிலையை மாற்ற, அமைதியை போற்றி வளர்க்க, மதங்கள் கடமைப்பட்டுள்ளன என்று, ஆயர் மஸ்கரீனஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.
பகைமை உணர்வு என்பது, எந்த ஒரு மதத்திற்குள்ளும் ஒரு பகுதியாக இருக்கமுடியாது என்றும், மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிரிக்கும் சக்திகள் வளர்ந்துவருவதை தடுக்க, அமைதியையும், சகிப்புத்தன்மையையும் வளர்க்க உழைக்கும் ஆர்வமுடையோர் தேவைப்படுகின்றனர் என்றும், ஆயர் மஸ்கரீனஸ் அவர்கள், தன் உரையில் வலியுறுத்தினார்.
ஆயர் மஸ்கரீனஸ் அவர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், சீக்கியம், புத்தம், இந்து, சமணம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் ஆகிய மதங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர் என்று UCA செய்தி கூறுகிறது

Comments are closed.