அக்டோபர் 30 : நற்செய்தி வாசகம்
ரபூனி, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 46-52
அக்காலத்தில் இயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். அவர்களும் திரளான மக்கள் கூட்டமும் எரிகோவை விட்டு வெளியே சென்றபோது, திமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். நாசரேத்து இயேசுதாம் போகிறார் என்று அவர் கேள்விப்பட்டு, “இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று கத்தத் தொடங்கினார்.
பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்; ஆனால் அவர், “தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்” என்று இன்னும் உரக்கக் கத்தினார்.
இயேசு நின்று, “அவரைக் கூப்பிடுங்கள்” என்று கூறினார்.
அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப்பிட்டு, “துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்” என்றார்கள்.
அவரும் தம் மேலுடையை எறிந்துவிட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார்.
இயேசு அவரைப் பார்த்து, “உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” என்று கேட்டார்.
பார்வையற்றவர் அவரிடம், “ரபூனி, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்” என்றார்.
இயேசு அவரிடம், “நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று” என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு
மறையுரைச் சிந்தனை :
பொதுக்காலம் முப்பதாம் ஞாயிறு.
விடாமுயற்சியுடன் கூடிய நம்பிக்கை!
அன்றைக்கு அந்த மருத்துவமனையில் இருந்த பிரசவ வார்டுப் பகுதி மிகவும் பரபரப்பாக இருந்தது. ஏனென்றால், அங்கு வந்த ஒரு நிறைமாக கர்ப்பிணி மிகுந்த வேதனையோடு அலறிக்கொண்டிருந்தாள். அவளுக்குப் பிரசவம் பார்த்த மருத்துவர்கூட மிகுந்த பதற்றத்தோடுதான் பிரசவம் பார்த்தார்.
ஒருசில நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு அந்தப் பெண்மணி ஓர் அழகான பெண்குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவளுக்குப் பிறந்த குழந்தையை கையில் ஏந்திய மருத்துவர் பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளானார். அந்த அதிர்ச்சியை எப்படி குழந்தையின் தாயிடத்தில் சொல்வது என்ற ஒருவிதமான பதற்றத்தோடு அவர் அந்தப் பெண்மணியிடம் பேசத் தொடங்கினார். “அம்மா! இப்போது நான் உங்களிடத்தில் சொல்லக்கூடிய செய்தியைக் கேட்டு நீங்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகவேண்டாம்” என்றார். “அதிர்ச்சி தரக்கூடிய அளவுக்கு அப்படி என்ன செய்தியைச் சொல்லப்போகிறீர்கள்?, ஒருவேளை என்னுடைய குழந்தை பிறக்கும்போதே இறந்துவிட்டதா?” என்று கேட்டாள். “அப்படியில்லை உங்களுடைய குழந்தை பிறந்தபோதே பார்க்கும் திறனில்லாமலும், கேட்கும் திறனில்லாமலும் பிறந்திருக்கின்றது” என்றார். “அப்படியா! என்னுடைய குழந்தைக்கு கண்தெரியாதா?, காது கேட்காதா?. ஐயோ நான் என்ன செய்வேன்” என்று அவள் அலறினாள்.
மருத்துவமனையிலிருந்து திரும்பிய அந்தப் பெண்ணானவள் உடல் குறைபாடுகளோடு பிறந்த தன்னுடைய குழந்தையோடு மிகுந்த அன்போடு வளர்த்தெடுத்தாள். அந்தக் குழந்தையும் வளர்ந்து கைகளால் தொட்டுத் தொட்டு எல்லாவற்றையும் கற்றுகொண்டாள். பிற்காலத்தில் அவள் எல்லாராலும் வியந்து பார்க்கக்கூடிய அளவுக்கு வளர்ந்தாள். நிறையப் புத்தங்களை எழுதினாள்; பல்வேறு இடங்களுக்குச் சென்று பலருக்கும் ஊக்கமும் உத்வேகமும் தரக்கூடிய சொற்பொழிவுகளை ஆற்றி வந்தாள்.
இப்படி பிறக்கும்போதே பார்வை இல்லாது, காது கேளாது பிறந்து, பிற்காலத்தில் எல்லாரும் வியந்து பார்க்கக்கூடிய பெண்மணியாய் விளங்கியவள் வேறு யாருமல்ல ஹெலன் ஹெல்லரே ஆவார். அவர்தான் பார்க்கும் திறனற்றும் கேட்கும் திறனற்றும் பிறந்தார். அவர்தான் பிற்காலத்தில் எல்லாரும் வியந்து பார்க்கக்கூடிய அளவுக்கு சிறப்பு வாய்ந்த பெண்மணியாய் விளங்கினார். அவர் இவ்வாறு விளங்கியதற்குக் காரணம் அவருடைய நம்பிக்கையும் அதோடு கூடிய விடாமுயற்சியும்தான் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆம், நம்பிக்கைத்தான் உடல் குறைபாடுகளோடு பிறந்த ஹெலன் ஹெல்லரை உலகம் வியந்து பார்க்கக்கூடிய பெண்மணியாய் மாற்றியது.
பொதுக்காலத்தின் முப்பதாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் ‘நம்பிக்கையுடன் கூடிய விடாமுயற்சி என்னும் சிந்தனையைத் தருகின்றன. நாம் அதனைக் குறித்து சற்று ஆழமாக சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களோடு எரிக்கோவிலிருந்து எருசலேம் நகர் நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றார். அவரைச் சூழ்ந்து மக்கள் எல்லாம் போய்க்கொண்டிருக்கின்றார்கள். இதற்கிடையில் பாதையோரமாய் அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்த பர்த்திமேயு என்னும் பார்வையற்றவர் இயேசு அவ்வழியாய் போவதை அறிந்து, “தாவீதின் மகனே எனக்கு இரங்கும்” என்று கத்தத் தொடங்குகின்றார். இயேசுவைச் சூழ்ந்து சென்றுகொண்டிருந்த மக்களோ, அவரைக் கத்தவேண்டாம் என்று அதட்டுக்கின்றார்கள். அப்படியிருந்தும் அவர், “தாவீதின் மகனே எனக்கும் இரங்கும்” என்று இன்னும் உரக்கக் கத்துகின்றார். இதனால் அவருடைய கூக்குரல் இயேசுவின் செவிகளை எட்டுகின்றது. அவர் அந்த பார்வையற்ற பிச்சைக்காரனை அழைத்து அவருக்கு நலம் தருகின்றார்.
இயேசு பார்வையற்ற பர்த்திமேயுவுக்கு பார்வையளித்த நிகழ்வு நமக்கு ஒருசில உண்மைகளை மிகத் தெளிவாக விளக்குகின்றது. அவை என்னென்னவென்று இப்போது பார்ப்போம்.
முதலாவதாக இந்த நிகழ்வு உணர்த்தும் செய்தி பார்வையற்றவரின் உறுதியான நம்பிக்கை ஆகும். பார்வையற்ற பர்த்திமேயுவின் நம்பிக்கை எவ்வாறு இருந்தது என்று பார்க்கும்போது, அவர் இயேசுவை சாதாரண ஒரு போதகராக மட்டும் பார்க்கவில்லை, மாறாக, அவர் இயேசுவை தாவீதின் மகனாக, மெசியாகப் பார்க்கின்றார். அது மட்டுமல்லாமல், இயேசு தனக்கு நிச்சயம் குணம் தருவார் என்ற நம்பிக்கையோடு கத்துகின்றார். இயேசு அவரை அழைக்கின்றபோது, இனிமேலும் தான் பாதையோரம் அமர்ந்து பிச்சை எடுக்கின்ற நிலைவராது என்பதால் தன்னுடைய மேலுடையை தூக்கி எறிந்துவிட்டு, நம்பிக்கையோடு ஆண்டவரிடம் செல்கின்றார். ஆண்டவரும் அவருடைய நம்பிக்கையைக் கண்டு, அவருக்குப் பார்வையளிக்கின்றார். ஆகவே, நம்பிக்கைதான் பார்வையற்ற பர்த்திமேயுவுக்கு நலம் தந்தது என்று நாம் உறுதியாகச் சொல்லலாம்.
பார்வையற்ற பர்த்திமேயுவை ஆண்டவர் இயேசு குணப்படுத்தி நிகழ்வு நமக்கு உணர்த்தும் இரண்டாவது செய்தி அவரிடமிருந்த விடாமுயற்சி ஆகும். தொடக்கத்தில் பர்த்திமேயு, “தாவீதின் மகனே எனக்கு இரங்கும்” என்று கத்துகின்றபோது இயேசுவைச் சூழ்ந்து சென்றுகொண்டிருந்த மக்கள்கூட்டமோ அவரைக் கத்தவேண்டும் என்று அதட்டுகின்றனர். ஆனால் அவரோ விடாமல், இன்னும் சத்தமாகக் கத்துகின்றார். இதனால் அவருடைய குரல் இயேசுவின் காதுகளை அடைகின்றது, அதனால் அவருக்கு நலம் கிடைக்கின்றது. பார்வையற்ற பர்த்திமேயுவுக்கு இயேசுவின்மீது ஆழமான நம்பிக்கை இருந்தது என்று மேலே பார்த்தோம். நம்பிக்கையோடு விடாமுயற்சியும் இருந்தது. அதனால்தான் அவர் நினைத்த காரியம் நிறைவேறியது.
இயேசுவைப் பின்பற்றி நடக்கும் நமக்கு நம்பிக்கை அதோடு கூடிய விடாமுயற்சி இருக்கின்றதா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் நாம் இறைவனிடம் வேண்டுகின்றபோது ஒருமுறை ஜெபித்துவிட்டு, இறைவன் என்னுடைய வேண்டுதலுக்கு செவிசாய்க்கவில்லை என்று அவரிடம் குறைபட்டுக்கொள்கின்றோம். ஆனால், உண்மை என்னவேனில் விடாமுயற்சியோடு ஜெபிப்போருக்கும் கேட்போருக்கும்தான் இறைவன் தன்னுடைய ஆசிரை அதிகமாக வழங்குகின்றார். லூக்கா நற்செய்தி 18:7 ல் இயேசு கூறுவார், “தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பழகும் தம்மை நோக்கி கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணை செய்யக் காலம் தாழ்த்துவாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்று. ஆகையால், நாம் நம்பிக்கையோடு ஜெபிக்கவேண்டும் அதோடுகூட விடாமுயற்சியோடும் ஜெபிக்கவேண்டும்.
நிறைவாக நற்செய்தி வாசகம் நமக்கு உணர்த்துகின்ற செய்தி இயேசுவிடமிருந்து நன்மைகளை, நலன்களைப் பெற்றுக்கொள்கின்ற நாம், அவரை இறுதிவரை பின்பற்றிச் செல்லக்கூடியவர்களாக இருக்கவேண்டும் என்பதாகும். பார்வையற்ற பர்த்திமேயு இயேசுவிடமிருந்து குணம்பெற்றதும் நினைத்தது நடந்துவிட்டது பிறகு எதற்கு இயேசுவைப் பின்தொடர்ந்து செல்லவேண்டும் என்று இருக்கவில்லை, மாறாக அவர் இயேசுவைப் பின்தொடர்ந்து செல்கின்றார். அவர் இயேசுவைப் பின்தொடர்ந்து சென்றதால், அதனால் வந்த இழப்புகளையும் அவர் சந்தித்திருக்கவேண்டும். இவ்வாறு அவர் ஓர் உண்மையான சீடனுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குகின்றார். இயேசுவிடமிருந்து அருளையும் ஆசிரையும் அதிகமாய் பெற்றுக்கொள்கின்ற நாம் அவருக்கு எப்போதும் நன்றியுள்ளவர்களாக, அவரை இறுதி வரைக்கும் பின்பற்றி நடப்பவர்களாக இருக்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
இதுவரை பார்வையற்ற பர்த்திமேயு எப்படி ஆழமான நம்பிக்கையும் விடாமுயற்சியையும் கூடவே சீடத்துவ பண்பினையும் கொண்டிருந்தார் என்று சிந்தித்த நாம், இயேசு எவ்வாறு பார்வையற்றோருக்கு இரங்குகின்ற பரிவு என்னும் குணத்தினைக் கொண்டிருந்தார் என்று சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசு எரிக்கோவிலிருந்து எருசலேம் நோக்கிப் போக்கும்போது, வழியில் தன்னுடைய சீடர்களுக்கும் தன்னைப் பின்பற்றி வந்தவர்களுக்கும் பலவற்றைக் குறித்து போதித்துக் கொண்டே சென்றிருக்கவேண்டும். ஏனென்றால், வழக்கமாக யூத இரபிக்கள் தன்னுடைய சீடர்களுக்கு பயணத்தில்போதுதான் பலவற்றைக் குறித்து கற்பிப்பார்கள். அப்படியானால் இயேசுவும் தன்னைப் பின்தொடர்ந்து வந்தவர்களுக்கு பயணத்தின்போது நிறைய போதித்துக்கொண்டேதான் சென்றிருக்கவேண்டும். இத்தகைய சூழலில்தான் பார்வையற்ற பர்த்திமேயு தன்னை குணப்படுத்துமாறு கத்துகின்றார். இயேசு அவர் கத்தியைக் கண்டு, தன் போதித்துக்கொண்டிருப்பதற்கு இடையூறாக இருக்கின்றது என்று நினைக்கவில்லை, மாறாக அவர் அவரை அழைத்து அவருடைய தேவையை நிவர்த்தி செய்கின்றார், அதாவது அவருக்குப் பார்வையளிக்கின்றார். இவ்வாறு அவர் பார்வையற்ற பர்த்திமேயுவுக்கு நலமளித்து தான் மக்கள்மீது பரிவுகொள்ளும் இறைமைந்தன் என்பதை நிரூபித்துக்காட்டுகின்றார்.
இயேசு செய்த இந்த புதுமை எரேமியாப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் வருகின்ற, “அழுகையோடு வருகின்ற பார்வையற்றோர், காலூனமுற்றோர், கருவுற்றோர், பேறுகாலப் பெண்டீர் போன்றோரை நான் ஆறுதலளித்துக் கூட்டி வருவேன்” என்ற வார்த்தைகளையும், “அவர் பரிவு காட்டுகின்றவராக இருக்கின்றார்” என்று இரண்டாம் வாசகத்தில் வருகின்ற வார்த்தைகளையும் நிறைவு செய்வதாய் இருக்கின்றது.
Comments are closed.