மறையுரைச் சிந்தனை (அக்டோபர் 30)

இறையாட்சியும் கடுகுவிதையும்!

‘நெல்லை நண்பர்கள் கழக’த்தைப் பற்றி எப்போதாவது, எங்கேயாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?. தமிழ்நாட்டில் எத்தனையோ கழகங்கள் இருப்பதனால் ‘நெல்லை நண்பர்கள் கழகத்தைப்’ பற்றி நீங்கள் தெரிந்திருப்பதற்கு அவ்வளவாக வாழ்ப்பில்லை.

இந்தக் கழகமானது 1961 ஆம் ஆண்டு, டி.ஜான் என்பவரால் தொடங்கப்பட்டது. இந்த கழகம் வளர்வதற்கு டி.ஜான் தன்னுடைய வாழ்வின் பெரும்பகுதியைச் செலவழித்தார். இதன்மூலம் கூடைப் பந்து, கபடி, கைப்பந்து, கால்பந்து போன்ற பல்வேறு விளையாட்டுகளில் திறமையுள்ள பல விளையாட்டு வீரர்களை உருவாக்கினார். இன்றைக்கு இவர் உருவாக்கிய ‘நெல்லை நண்பர்கள் கழகத்திலிருந்து’ பயிற்சி பெற்ற ஆயிரக்கணக்கானோர் இந்தியன் இரயில்வே, தமிழ்நாடு காவல்படை, வங்கிகள் மற்றும் மத்தியக் கணக்காய்வகம் போன்ற பல அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்புப் பெற்றுள்ளனர். இன்னும் பெற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.

டி.ஜான் என்ற சாதாரண ஒரு மனிதரால் தொடங்கப்பட்ட ‘நெல்லை நண்பர்கள் கழகம்’ இன்றைக்கு பலரும் வேலைவாய்ப்பினை பெறுவதற்குக் காரணமாக இருக்கின்றது என்பதை நினைத்துப் பார்க்கின்றபோது, மிகவும் பெருமையாக இருக்கின்றது. ஆம், உலகில் தோன்றிய மாற்றங்கள், வளர்ச்சிகள் எல்லாம் எங்கோ இருந்த யாரோ ஒரு சாதாரண மனிதரால் தொடங்கப்பட்டதுதானே!

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு இறையாட்சியை கடுகுவிதைக்கு ஒப்பிடுகின்றார். இறையாட்சி என்பது எவ்வளவு பெரியது. அதனைப் போய் இயேசு கடுகுவிதைக்கு ஒப்பிடுகின்றாரே? என்று நாம் நினைக்கலாம். ஆனால், கடுகுவிதையானது அளவில் சிறியதாக இருந்தாலும் அவர் வளர்ந்து பெரியதாகின்றபோது, வானத்துப் பறவைகள் எல்லாம் அதில் தாங்கும். அந்தளவுக்கு அது பெரியதாகும். இறையாட்சிக்கான விதையானது நாசரேத்து என்ற குக்கிராமத்தில் விதைக்கப்பட்டாலும் அது வளரும்போது உலக மக்களையெல்லாம் உள்ளடக்கியதாக இருக்கும். இப்படி இறையாட்சியும் கடுகுவிதையும் ஒத்த இயல்பினைக் கொண்டதாக இருப்பதால்தான் என்னவோ, ஆண்டவர் இயேசு இறையாட்சியை கடுகுவிதைக்கு ஒப்பிடுகின்றார்.

இந்த உவமையின் வழியாக இயேசு கிறிஸ்து நமக்குச் சொல்கின்ற செய்தி என்ன என்று இப்போது சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசு கிறிஸ்து இந்த உவமையின் வழியாக நமக்குச் சொல்லும் முதன்மையான செய்தி, எவரையும் அவருடைய உருவத்தை வைத்து எடைபோட்டுவிடக்கூடாது என்பதாகும். இன்றைக்குப் பலர், ஏன் நாமும்கூட மனிதர்களுடைய வெளித்தோற்றத்தை வைத்து, குறைத்து மதிப்பிடுகின்றோம். ஆனால் அவர்களால் ஆகுகின்ற செயல் நம்முடைய கண்களுக்குத் தெரிவதில்லை. ஈசாவுக்கு எட்டுப் புதல்வர்கள் இருக்க, அவர்களில் பெரியவர்களும் பலசாலிகளும் ஓரங்கட்டப்பட்டு, கடையவனாகிய தாவீதுதான் இஸ்ரயேலின் அரசராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார். ஆகையால், ஒருவருடைய வெளித்தோற்றத்தை வைத்து இவர் சிறியவர், வறியவர், ஒன்றுக்கும் உதவாதவர் என்று மதிப்பிடுவது எந்தவிதத்திலும் நியாயமில்லை.

அடுத்ததாக, இந்த உவமையின் வழியாக இயேசு நமக்குச் சொல்லும் செய்தி, சமூக மாற்றத்திற்காகவும் இறையாட்சி இம்மண்ணில் மலர்ந்திடவும் நாம் பெரிய அளவில் எதையும் செய்யவேண்டியதில்லை, மாறாக சிறிய அளவில் ஏதாவது செய்தால்கூட, கடவுள் அதனை பெரிய அளவில் மாற்றித் தந்திடுவார் என்பதாகும். ‘உலங்கெங்கும் நற்செய்தி அறிவித்திடணும் சமுதாயத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்று சொன்னால், பலர் ‘அவ்வளவு பெரிய காரியத்தை, தனியொரு மனிதனால் எப்படிச் செய்திட முடியும்?’ என்று மலைப்பதைப் பார்க்க முடிகின்றது. எதார்த்தம் என்னவென்றால், நாம் நம்முடைய பணிகளை, அது சிறிய அளவில் இருந்தாலும் தொடர்ந்து செய்துகொண்டே இருந்தால், இன்றைக்கு அல்ல என்றைக்காவது ஒரு நாள் பலன்தந்தே ஆகும்.

தொடக்கத்தில் சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் டி.ஜான் பலருக்கும் வேலை வாய்ப்பினை பெற்றுத்தருவும் அவர்களுடைய திறமைகளை வளர்த்தெடுக்கவும் நினைத்தார். அதற்காக அவர் சிறிய அளவில் ‘நெல்லை நண்பர்கள் கழகத்தை’ ஆரம்பித்தார். இன்றைக்கு அது பெரிய ஆலமரம் போன்று வளர்ந்து, பலருக்கும் நனமைகளைத் தருகின்றதல்லவா? அத்போன்று இன்றைக்கு சிறிய அளவில் நாம் தொடங்குகின்ற இறையாட்சிப் பணி அல்லது சமூக மாற்றுப் பணி என்றைக்காவது ஒருநாள் அதற்கான பலனைத் தந்தே ஆகும்.

நிறைவாக இந்த உவமையின் வழியாக ஆண்டவர் இயேசு நமக்குச் சொல்கின்ற செய்தி ‘நாம் எதைச் செய்தாலும் அதை தொடர்ந்து செய்யவேண்டும்’ என்பதாகும். கடுகுவிதையானது, தான் சிறிய விதையாக இருக்கின்றேனே, நான் எப்படி பெரிய மரமாக மாறப்போகிறேன்’ என்று தன்னுடைய வளர்ச்சியை நிறுத்திக்கொள்வதில்லை. மாறாக அது தொடர்ந்து வளர்கின்றது. இறுதியில் வானத்துப் பறவைகள் தங்கக்கூடிய அளவுக்கு பெரிய மரமாக மாறுகின்றது. நாமும்கூட, இந்தப் பணி எப்படி பலன்தரப்போகிறது என்று முடங்கிவிடாமல், தொடர்ந்து மனதளராது உழைத்தோம் என்றால், அதற்கான பலனை பெற்றுக்கொள்வோம் என்பது உறுதி.

ஆகவே, நாம் சிறியவர்களாக, பார்வைக்கு எளியவர்களாக இருந்தாலும் தொடர்ந்து இறையாட்சிப் பணியை, சமூக மாற்றுப் பணிகளைச் செய்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.