இன்றையதினம் இலங்கையின் முதலாவது கருதினாலும், கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயரும், அமல மரித்தியாகிகள் சபையின் ஆயருமாகிய அதி.உன்னத கருதினால் தோமஸ் பெஞ்சமின் கூரே ஆண்டகை அவர்களின் 30வது ஆண்டு நினைவுதினமாகும்.
1901 டிசம்பர் 28ல் நீர்கொழும்பில் பிறந்த தோமஸ் கூரே ஆண்டகை 27 யூன் 1929ல் அமல மரித்தியாகிகள் சபையின் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.
14 டிசம்பர் 1945ல் கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் இணை ஆயராக திருப்பொழிவு செய்யப்பட்டார்.
1947ல் கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் முதலாவது சுதேசிய ஆயராக நியமிக்கப்பட்டார்.
வத்திக்கான் பொதுச் சங்க கூட்டங்களில் பங்கேற்றார்.
யாழ் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயரும், முதல் தமிழ் ஆயருமான பேரருட் கலாநிதி எமிலியானுஸ் பிள்ளை ஆண்டகையோடு நேருக்கமான நட்புறவைப் பேணினார், சுதந்திரத்திற்கு பின்னரான இன ஐக்கியத்திற்கும், கத்தோலிக்க திருச்சபையின் வளர்ச்சிக்கும் இருவரும் இணைந்தே பாடுபட்டனர்.
22 பெப்ரவரி 1965ல் முன்னாள் திருத்தந்தை புனித 6ம் சின்னப்பரால் இலங்கையின் முதலாவது கருதினாலாக நியமிக்கப்பட்டார்.
முன்னாள் திருத்தந்தையர்கள் திருத்தந்தை 1ம் அருளப்பர் சின்னப்பர், திருத்தந்தை புனித 2ம் அருளப்பர் சின்னப்பர் ஆகியோரின் தெரிவுகளில் கலந்துகொண்டார்.
2ம் உலகப்போரின் தாக்கத்திலிருந்து இலங்கை காப்பாற்றப்பட்டதற்காக அன்னை மரியாளிற்கு நன்றியாக தேவத்தை இலங்கை அன்னை ஆலயத்தைக் கட்டுவதற்கான முன்னோடியாகத் திகழ்ந்தார்.
1970ல் திருத்தந்தை புனித 6ம் சின்னப்பரை இலங்கையில் வரவேற்றவர் இவரே.
1976 செப்டம்பர் 2ல் தனது ஆயர்த்துவ பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
29 அக்டோபர் 1988ல் தனது இவ்வுலக வாழ்வின் பயணத்தை முடித்துக்கொண்டார், அவரது உடல் தேவத்தை இலங்கை அன்னை பசிலிக்காவில் அடக்கம்செய்யப்பட்டுள்ளது.
புனிதர் பட்டமளிப்பின் முதற்படியான இறையடியார் எனும் பட்டத்தை இவருக்கு 22 நவம்பர் 2010ல் முன்னாள் திருத்தந்தை 16ம் ஆசீர்வாதப்பர் அளித்தார்.
இவர் மிக விரைவில் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட இறைவனை தொடர்ந்து மன்றாடுவோம்.