மறையுரைச் சிந்தனை (அக்டோபர் 29)

தளரா நம்பிக்கையுடன் வாழ்வோம்!

ஒரு நாளல்ல, இரண்டு நாட்களல்ல எழுபத்திரெண்டு நாட்கள் தன்னந்தனியாக, ஆபத்து நிறைந்த அட்லாண்டிக் கடலில், ஓர் ஓட்டைப் படகில் எங்கே போகிறோம் என்பதுகூடத் தெரியாமல் அலைந்து பிழைத்த மனிதரை உங்களுக்குத் தெரியுமா?. ஸ்டீபன் கல்லகன் என்பவர்தான் அந்த மனிதர்.

1982 ஆம் ஆண்டில் ஒருநாள், ஸ்டீபன் கல்லகன் அட்லாண்டிக் பெருங்கடலில் தனியாக உல்லாசப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, அவரது படகானது ஒரு பாறையில் மோதி உடைந்து போனது. இதனால் அவர் வேறொரு, சிறிய, ஒரு ஆள் மட்டுமே அமரக்கூடிய படகில் ஏறி தப்பிக்கத் தொடங்கினார். உண்ண உணவு கிடையாது, காற்று அடிக்கும் பக்கமெல்லாம் படகு போனது. குளிரும் இராத்திரிகள், தன்னந்தனியான பகல்கள் என்று நாட்கள், மாதங்கள் கழிந்தன. இதற்கு மத்தியில் அவர் சென்றுகொண்டிருந்த படகுகூட ஓட்டையாகி, தண்ணீர் உள்ளே வரத் தொடங்கியது. இதனால் அவர் உள்ளே வந்த தண்ணீரை மொண்டு மொண்டு வெளியே ஊற்றத் தொடங்கினார். குடிப்பதற்கு கடல் தண்ணீரையும் உணவிற்கு கடலில் எப்போதாவது கையில் கிடைக்கும் மீன்களையுமே பயன்படுத்தினார்.

இப்படி அவருடைய நாட்கள் கடலில், ஓர் ஓட்டைப் படகில் கழிய, ஒருநாள் கடலில் சென்றுகொண்டிருந்த கப்பல் ஒன்று, அவரைத் தற்செயலாய் கண்டுபிடித்து கரைசேர்த்தது.

இன்றுவரை சாதனையாகவே கருதப்படும் இந்த நிகழ்விற்குப் பிறகு ஸ்டீபன் கல்லகனிடம் ஒருவர், “எப்படி உங்களால் இந்த எழுபத்தி இரண்டு நாட்களும் வாழ முடிந்தது?” என்று கேட்டதற்கு அவர், “எப்படியும் கரை சேர்ந்துவிடுவோம் என்ற நம்பிக்கையால்தான் என்னால் வாழ முடிந்தது” என்று உறுதியாகச் சொன்னார்.

நட்ட நடுக்கடலில், தன்னந்தனியாக, அன்னம் தண்ணீரில்லாமல் எழுபத்தி இரண்டு நாட்கள் ஸ்டீபன் கல்லகனால் வாழ முடிந்ததற்கு அவருடைய நம்பிக்கைதான் காரணமாக இருந்தது என்பதை அறிகின்றது ‘நம்பிக்கை எத்துணை வல்லமை’ என்பதை நம்மால் உணர முடிகின்றது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, பதினெட்டு ஆண்டுகளாக கூன் விழுந்த நிலையில் இருந்த ஒரு பெண்ணை தொழுகைக்கூடத்தில் வைத்து, அதுவும் ஓய்வுநாள் குணப்படுத்துகின்றார். இயேசு இந்தப் பெண்மணியை எப்படிக் குணப்படுத்தினார் என்று சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னர், கூன் விழுந்த பெண்மணியின் நம்பிக்கை எத்தகையது என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

கூன் விழுந்த பெண்மணி பதினெட்டு ஆண்டுகளாக அதே நிலையில் இருக்கின்றார் என்று நற்செய்தி வாசகமானது நமக்கு எடுத்துச் சொல்கின்றது. இப்படி பதினெட்டு ஆண்டுகளாகக் கூன்விழுந்த நிலையில் இருந்தாலும் அவர் இறைவனைச் சபித்துக்கொண்டு, தொழுகைக் கூடத்திற்கு வராமல் இருக்கவில்லை. தொடர்ந்து தொழுகைக்கூடத்திற்கு வந்து நம்பிக்கையோடு இறைவனைத் தொழுகின்றார். இப்படிப்பட்ட தளரா நம்பிக்கைதான் ஆண்டவர் இயேசுவை அவர்பால் பரிவுகொள்ளச் செய்தது. இன்றைக்குப் பலர் தங்களுடைய வாழ்வில் ஏதாவது ஒரு கெடுதல் நடந்துவிட்டது என்றால், இறைவனைச் சபித்துவிட்டு ஆலயத்திற்கு வராமலே இருப்பதைப் பார்க்கின்றோம். இவர்களுக்கு மத்தியில் நற்செய்தியில் வருகின்ற இந்த கூன் விழுந்த பெண்மணி இறைவனிடம் தளராத நம்பிக்கை கொண்டு வாழவேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாக இருக்கின்றார்.

இத்தகைய சூழ்நிலையில் தொழுகைக்கூடத்திற்கு வருகின்ற இயேசு, பதினெட்டு ஆண்டுகளாகக் கூன்விழுந்த நிலையில் இருந்த அந்தப் பெண்மணியைப் பார்த்து, அவர்மீது பரிவுகொண்டு அவரைக் குணப்படுத்துகின்றார். இறைவனிடத்தில் யாராரெல்லாம் தளரா நம்பிக்கையுடன் வாழ்கிறார்களோ அவர்களுக்கு இறைவன் நன்மைகளைச் செய்வதுதானே வழக்கம்!. நற்செய்தியில் வருகின்ற இந்தப் பெண்மணி அப்படித்தான் இறைவன் தனக்கு நிச்சயம் சுகம் தருவார் என்ற தளரா நம்பிக்கையுடன் இருந்தார், அதனால் குணம் பெற்றார். நாமும் இறைவனிடம் அத்தகைய நம்பிக்கையோடு வாழ்கின்றபோது, இறைவனிடமிருந்து ஆசிரைப் பெறுவது உறுதி.

நற்செய்தி வாசகம் இந்த பெண்மணியைக் குறித்து இன்னொரு செய்தியையும் பதிவு செய்கின்றது. அது என்னவென்றால், குணப்பெற்ற அவர், அப்படியே இருந்துவிடாமல் ஆண்டவரைப் போற்றிப் புகழ்கின்றார். நாம் இறைவனிடமிருந்து நன்மைகளை பெற்றோம் என்றால் (ஏராளமாகப் பெற்றிருப்போம்) அதற்கு நன்றியுள்ளவர்களாகவும் இறைவனைப் போற்றக்கூடியவர்களாகவும் இருக்கவேண்டும். அதுதான் நல்ல மனிதருக்கு அடையாளம். இறைவனிடமிருந்து ஏராளமான நன்மைகளைப் பெற்றும், அதனை மறந்து வாழ்வது எந்தவிதத்திலும் ஏற்றதாக இராது.

ஆகவே, நாம் நற்செய்தியில் வரும் அந்தப் பெண்மணியைப் போன்று இறைவனிடம் தளரா நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.