இயேசுவை அடித்தளமாகக் கொண்டிருப்பது துணிகரமானச் செயல்

நாம் பாவிகள் என்று ஏற்றுக்கொள்வதே, இயேசு கிறிஸ்துவின் அன்பை புரிந்துகொள்வதற்கு முதல் படியாக அமைகிறது என்றும், இதைத் தொடர்ந்து நாம் ‘வேறும் வார்த்தையளவில் கிறிஸ்தவர்களாக’ இருக்க முடியாது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் வழங்கிய மறையுரையில் கூறினார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை, “கிறிஸ்து உங்கள் உள்ளங்களில் குடிகொள்வாராக! அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக!” என்று திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்தில் (எபே. 3:14-21) கூறிய சொற்களை தன் மறையுரையின் மையமாக்கி, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

கிறிஸ்துவும், அவரது அன்பும் நம் வாழ்வின் அடித்தளமாக மாற, நம் விசுவாச அறிக்கைகள் உதவியாக இருக்கும் என்றாலும், நாம் பாவிகள் என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம், இந்த அடித்தளத்தை இன்னும் உறுதியாக்கும் என்று திருத்தந்தை தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

இயேசுவை நம் வாழ்வின் அடித்தளமாகக் கொண்டிருப்பது ஒரு துணிகரமானச் செயல் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இது, சிறுபிள்ளைத்தனமான துணிச்சல் அல்ல, மாறாக, வாழ்வு முழுவதும் தொடரும் ஒரு சவால் என்று எடுத்துரைத்தார்.

“ஆண்டவரே, இயேசுவே உம்மை நான் அனுபவத்தில் உணர வரம் தாரும், இதனால் நான் உம்மைப் பற்றி பேசும்போது, கிளிப்பிள்ளை போல வார்த்தைகளை சொல்லிக்கொண்டிராமல், உள்ளத்திலிருந்து பேசும் வரம் தாரும்” என்று செபிக்கும்படி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையின் இறுதியில் ஒரு செபத்தை இணைத்தார்.

Comments are closed.