அக்டோபர் 26 : நற்செய்தி வாசகம்

நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்கும் நீங்கள், இக்காலத்தை ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி?

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 54-59

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கிக் கூறியது: “மேற்கிலிருந்து மேகம் எழும்புவதை நீங்கள் பார்த்ததும் மழை வரும் என்கிறீர்கள்; அது அப்படியே நடக்கிறது. தெற்கிலிருந்து காற்று அடிக்கும்பொழுது மிகுந்த வெப்பம் உண்டாகும் என்கிறீர்கள்; அதுவும் நடக்கிறது.

வெளிவேடக்காரரே, நிலத்தின் தோற்றத்தையும் வானின் தோற்றத்தையும் ஆய்ந்து பார்க்க அறிந்திருக்கும்போது, இக்காலத்தை நீங்கள் ஆய்ந்து பாராமல் இருப்பது எப்படி? நேர்மையானது எதுவென நீங்கள் தீர்மானிக்காமல் இருப்பதேன்?

நீங்கள் உங்கள் எதிரியோடு ஆட்சியாளரிடம் போகும்போது, வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இல்லையேல் அவர் உங்களை நடுவரிடம் இழுத்துக்கொண்டு போக, நடுவர் உங்களை நீதிமன்ற அலுவலரிடம் ஒப்புவிப்பார்; நீதிமன்ற அலுவலர் உங்களைச் சிறையிலடைப்பார். கடைசிக் காசு வரை நீங்கள் திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

மறையுரைச் சிந்தனை :

நல்லுறவோடு வாழ்வோம் :

அந்நகரில் வியாபாரி ஒருவர் இருந்தார். அவர் என்ன வியாபாரம் தொடங்கினாலும் அதில் தோல்விக்கு மேல் தோல்விகள் ஏற்பட்டன. இதனால் அவர் தற்கொலை செய்துகொண்டு தன்னுடைய உயிரையே மாயத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தார்.

இந்தவேளையில் அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் அவரின் இந்நிலையைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம், “நீ நம்மூரில் இருக்கும் அந்த துறவியைப் பார்த்துவிட்டு வா, நிச்சயம் உன்னுடைய வாழ்வில் ஒளிபிறக்கும் என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார். நண்பரின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் அந்த துறவியைப் போய் பார்த்தார்.

துறவியைச் சந்தித்த அந்த வியாபாரி தன்னுடைய வாழ்வில் நடந்த எல்லாவற்றையும் அவரிடம் கொட்டித் தீர்த்தார். பொறுமையாக அமர்ந்து எல்லாவற்றையும் கேட்ட துறவி அவரிடத்தில், “நீ காலத்திற்கு ஏற்ப, இடத்திற்கு ஏற்ப உன்னுடைய தொழிலை மாற்றியிருக்க வேண்டும். ஆனால் நீ அப்படிச் செய்யவில்லை. இனிமேலாவது மக்களுக்கு எல்லா நாளும் பயன்படுகின்ற, அந்த நாளில் வாங்கிவை அந்த நாளிலே தீர்ந்துபோகிற மாதிரியான பொருளை வாங்கி விற்பனை செய். நான் நெடும்பயணம் சென்றுவிட்டு, ஒருவருட காலம் கழித்து இங்கு திரும்பி வருவேன். அப்போது நான் உன்னைச் சந்திக்கிறேன்” என்று சொல்லிவிட்டு சென்றார்.

அந்த நாளில் வாங்கிவை அந்த நாளிலே தீர்ந்துபோகிற மாதிரியான பொருள் என்ன என்று வியாபாரி ஒருநிமிடம் யோசித்துப் பார்த்தார். பின்னர் அறிவொளி பெற்றவராய் காய்கறிதான் அந்த நாளில் வாங்கி, அந்த நாளிலே தீர்ந்து போகக்கூடியவை என முடிவுக்கு வந்து காய்கறி வியாபாரம் செய்யத் தொடங்கினார்.

அவர் காய்கறி வியாபாரம் செய்யத் துவங்கிய ஒரே வாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உணர்ந்தார். ஆம், காய்கறி வியாபாரம் அவருக்கு நல்ல பலனைத் தந்து. ஒரு வருடத்தில் அவர் இழந்த பணத்தை எல்லாம் திரும்பப் பெற்றார். இப்போது அவர் தன்னுடைய குடும்பத்தோடு மிகவும் சந்தோசமாக இருந்தார்.

நாட்கள் சென்றன. ஒருநாள் இவர் வியாபாரம் செய்துவந்த கடைக்கு எதிரில் புதிய ஆள் ஒருவர் பிரமாண்டமாக ஒரு மளிகைக் கடையை கட்டத் தொடங்கினார். இச்செய்தி அவருடைய உள்ளத்தில் இடியாய் இறங்கியது. எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது என்ற சந்தோசத்தில் இருந்த வியாபாரி இச்செய்தியைக் கேட்டதும் செய்வதறியாமல் திகைத்து நின்றார். ஒருவேளை அந்த புதிய ஆள் பிரமாண்டமாக கடையைக் கட்டி, வியாபாரம் செய்யத் தொடங்கினால், நம்முடைய கடைக்கு யாரும் வரமாட்டார்களே என்று பயந்து நடுங்கினான்.

அப்போது அவருக்கு, தன்னுடைய வாழ்வில் ஒளியேற்றி வைத்த அந்த துறவியின் ஞாபம் வரவே அவரிடத்தில் சென்று, என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்டார். அதற்கு அந்த துறவி, “இதைப் பற்றி நீ ஒன்றும் கவலைப்படாதே, நீ செய்யவேண்டியதெல்லாம் உன்னுடைய வியாபாரம் இருக்கவேண்டும் என்று ஜெபிக்கிறாயே, அதுபோன்று அந்த மனிதருடைய வியாபாரமும் நன்றாக இருக்கவேண்டும் என்று ஜெபி. அதோடு மட்டுமல்லாமல், எப்போதெல்லாம் நீ அவரைச் சந்திக்கிறாயோ அப்போதெல்லாம் அவரைப் பார்த்து புன்னகை செய். அதுபோதும் என்றார்.

அந்த புதிய ஆளுக்காக – தனக்கு போட்டியாக வந்தவருக்காக – ஜெபிப்பதா? என்று தொடக்கத்தில் யோசித்த அந்த காய்கறி வியாபாரி பின்னர் தன்னுடைய மனதை மாற்றிக்கொண்டு அவருக்காக ஜெபித்தார். அவரை எப்போதெல்லாம் சந்தித்தாரோ அப்போதெல்லாம் அவரைப் பார்த்து புன்சிரிப்பு செய்தார். இப்படி பல நாட்கள் நடந்தன.

ஒருநாள் அந்த புதிய மனிதர் காய்கறி வியாபாரியின் கடைக்குச் சென்று, “நீ என்னுடைய மளிகைக் கடைக்கு காய்கறிகளைக் கொள்முதல் (வாங்கித் தருவாயா?) செய்வாயா?” என்று கேட்டார். இதனைச் சற்றும் எதிர்பாராத அந்த காய்கறி வியாபாரி அவர் சொன்னதற்கு சரி என்று ஒத்துக்கொண்டார். அதன்பின்னர் இரண்டு கடைகாரர்களும் நல்ல நண்பர்களாய் இருந்தார்கள். காய்கறி வியாபாரியின் வியாபாரமோ இன்னும் அமோகமாக விளங்கியது. அந்த நகரிலே அவருடைய காய்கறிக் கடைதான் பெரிய கடையாக விளங்கியது.

அடுத்தவரைப் எதிரியாகப் பார்க்காமல், நல்லுறவோடு இருக்கும்போது எப்படி காய்கறி வியாபாரியின் வாணிபம் சிறப்பாக மாறியதோ அதுபோன்று நம்முடைய வாழ்வும் சிறக்கும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகிறது.

நற்செய்தியில் இயேசு, “நீங்கள் உங்கள் எதிரியோடு ஆட்சியாளரிடம் போகும்போது, வழியிலே உங்கள் வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சி எடுங்கள். இல்லையென்றால் அவர்கள் உங்களை நடுவரிடம் இழுத்துக்கொண்டுப்போவார்….” என்கிறார். இங்கே இயேசு சொல்லும் செய்தி நாம் நல்லுறவோடு இருக்கவேண்டும் என்பதுதான்.

ஆகயால் நம்மிடம் இருக்கும் பகைமையை, பிரிவினையை வேரறுத்து, நல்லுறவோடு வாழ்வோம். அதன்வழியாக இறையருள் பெறுவோம்.

“உறவோடு வாழும் உள்ளங்கள் நடுவில் தெய்வம் தரிசனம்

Comments are closed.