அக்டோபர் 25 : நற்செய்தி வாசகம்

அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 49-53

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “மண்ணுலகில் தீமூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆயினும் நான் பெறவேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறேன்.

மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர் கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்.

இதுமுதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர். தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மறையுரைச் சிந்தனை :

இயேசு பெற்ற இரண்டாம் திருமுழுக்கு

சில ஆண்டுகளுக்கு முன்பாக மும்பையில் நடைபெற்ற நிகழ்வு.

டேவிட் என்ற மாணவன் கல்லூரி செல்வதற்காக தன்னுடைய இருசக்கர வாகனத்தில் போய்க்கொண்டிருந்தான். அவனுடைய பயணத்தின் இடையே ஒரு இரயில்வே கிராசிங் வந்தது. அவன் அந்த இரயில்வே கிராசிங்கை நெருங்கும் தருணத்தில் சற்று தொலைவில் இரயில் வந்ததால், அவன் தன்னுடைய வண்டியை நிறுத்திவிட்டு சுற்றும் முற்றும் வேடிக்கை பார்க்கத் தொடங்கினான்.

அந்நேரத்தில் ஒரு வயதான, பார்வையற்ற பெண்மணி இரயில் அருகாமல் வருவதுகூடத் தெரியாமல் சாலையை கடந்துகொண்டிருந்தாள். பக்கத்திலிருந்தவர்கள் இரயில் மிகவும் அருகே வந்துவிட்டது என்று எவ்வளவோ கத்தியும் அவள் காதில் விழவில்லை. ஏனென்றால் அவள் ஒரு காதுகேளாத பெண்மணியும் கூட. அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்று சுற்றும் முற்றும் இருந்தவர்கள் மிகவும் மிரட்சியோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அப்போது அந்த இரயில்வே கிராசிங் அருகே செருப்புத் தைத்துக்கொண்டிருந்த மனிதர் ஒருவர், தன்னுடைய உயிரைப் பற்றிக்கூட கவலைகொள்ளாமல், ஓடிவந்து அந்த பெண்மணியைக் காப்பாற்றினார். அவர் அப்பெண்மணியை காப்பாற்றுவதற்கும், இரயில் வருவதற்கும் ஒரு நொடி இடைவேளைதான் இருந்தது. கொஞ்சம் தாமதித்திருந்தாலும் அந்தப் பெண்ணின் நிலை அவ்வளவுதான். நிகழ்ந்தவற்றைக் கண்டு எல்லாரும் அதிர்ச்சி மேலிட நின்றார்கள். பின்னர் எல்லாரும் தங்களுடைய வண்டியைக் கிளப்பிக்கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றார்கள்.

டேவிட் என்ற அந்த கல்லூரி மாணவன் மட்டும் அனைவரும் போனபிறகு வயதான பெண்மணியின் உயிரைக் காப்பாற்றிய அந்த செருப்பு தைக்கும் தொழிலாளியைப் பார்த்து, “உங்களால் மட்டும் எப்படி இந்த செயலைச் செய்ய முடிந்தது. எல்லாரும் அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது நீங்கள் மட்டும் உங்கள் உயிரைப் பணயம் வைத்து அந்தப் பெண்மணியைக் காப்பாற்றினீர்களே, அது எப்படி? என்று கேட்டான். அதற்கு அவர், “நான் இப்படி உயிரை பணயம் வைத்து அடுத்தவர்களுடைய உயிரைக் காப்பாற்றுவது இது முதல்முறையல்ல, எத்தனையோ மனிதர்களை எத்தனையோ முறை காப்பாற்றியிருக்கிறேன். எல்லாவற்றையும் ஒரு சேவையாகச் செய்கிறேன்” என்றார்.

அம்மனிதரிடம் வார்த்தைகளைக் கேட்டு டேவிட் ஒரு நிமிடம் வியப்பு மேலிட நின்றான். பின்னர் அவருக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்த டேவிட் தன்னுடைய பையிலிருந்த ஐந்தாயிரம் ரூபாயைக் அவருக்கு கொடுத்துவிட்டு, தன்னுடைய் பயணத்தைத் தொடர்ந்தான். எல்லாரும் வேடிக்கை பார்க்கும் மனிதர்களாகவே இருக்கும்போது தன்னுடைய உயிரையும் பணயம் வைத்து இன்னொரு உயிரைக் காப்பாற்றிய அந்த செருப்பு தைக்கும் தொழிலாளியின் செயல் உண்மையிலே பாராட்டுக்குரியது.

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, “நான் பெறவேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மனநெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறேன்” என்கிறார். இயேசு பெற நினைத்த அந்த இரண்டாம் திருமுழுக்கு என்ன?. அது வேறொன்றுமில்லை அவருடைய சிலுவைச்சாவே. இயேசுவின் முதலாவது திருமுழுக்கு யோர்தான் ஆற்றங்கரையில் தண்ணீரால் நிகழ்ந்தது. அவருடைய இரண்டாவது திருமுழுக்கு இரத்ததினால் நிகழக்கூடியது. இது கல்வாரி மலையில் சிலுவையில் நிகழ்ந்தது.

இயேசு தான் பெற இருந்த இரண்டாவது திருமுழுக்கை – சிலுவைச் சாவை – நினைத்து மிகுந்த மனநெருக்கடிக்கு உள்ளானார். அதனால்தான் அவர், “உமக்கு விருப்பமானால் தந்தையே, இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்” என்கிறார் (லூக் 22: 42). ஆகையால் இயேசு தான் பெற இருந்த இரண்டாம் திருமுழுக்கைக் குறித்து மன நெருக்கடிக்கு உள்ளானாலும், அவர் அதை தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற ஏற்றுக்கொண்டார் என்று நாம் புரிந்துகொள்ளலாம்.

இயேசுவின் இத்தகைய ஒரு தியாகச் செயல் அவர் நம்மீது எவ்வளவு அளவு கடந்த அன்புகொண்டிருக்கிறார் என்பதை நமக்குக் காட்டுகிறது. தூய பவுல் குறிப்பிடுவது போல “நேர்மையாளருக்காக ஒருவர தம் உயிரைக் கொடுத்தலே அரிது. ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். ஆனால் நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக்காட்டியுள்ளார்”.

ஆகவே நாம் இயேசுவின் இத்தகைய தியாக செயலை நாம் உணர்ந்துகொண்டு, நாமும் பிறருக்காக, பிறருடைய வாழ்வு நலம் பெற தம்மையே கையளிக்க முன் வருவோம். தற்கையளிப்பு செய்வோம். அதன் வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.