மறையுரைச் சிந்தனை (அக்டோபர் 25)
மண்ணுலகில் தீமூட்டவே வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்துகொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்!
அன்னை தெரசா ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பேர்ன் நகருக்குச் சென்றிருந்த நேரம், பெரியவர் ஒருவர் அவரை வந்து சந்தித்தார். அவர் அன்னை தெரசாவிடம், “தாயே! அருள்கூர்ந்து நீங்கள் என்னுடைய வீட்டிற்கு வந்து போகவேண்டும்” என்றார். அன்னையும் அதற்கு எந்தவொரு மறுப்பும் சொல்லாமல் அவருடைய வீட்டிற்கு கிளம்பிப் போனார்.
அந்த பெரியவருடைய வீடோ மெல்பேர்ன் நகருக்கு சற்று வெளியே இருந்தது. வீடு பெரிய வீடாக இருந்தாலும், அது சுத்தம் செய்யபபடாமலும் ஆங்காங்கே நூலாம்படை தொங்கிக்கொண்டும் விளக்கு ஏற்றப்படாமலும் பார்ப்பதே மிகவும் அவலட்சணமாக இருந்தது. இதையெல்லாம் பார்த்துவிட்டு அன்னை அந்த பெரியவரிடம், “இந்த வீட்டில் உங்களைத் தவிர வேறு யாருமே இல்லையா? ஏன் இந்த வீட்டில் ஒரு விளக்குகூட ஏற்றாமல் வைத்திருக்கிறீர்கள்” என்று கேட்டார். அதற்கு அந்தப் பெரியவர் “என்னுடைய மனைவி இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. என்னுடைய பிள்ளைகளும் இப்போது என்னோடு இல்லை. நான் மட்டும் தனியாக இருக்கும் இந்த வீட்டில் விளக்கு ஏற்றினால் என்ன? ஏற்றாவிட்டால் என்ன? என்று மிகவும் வருத்தத்தோடு கேட்டார்.
சிறிது நேரம் யோசித்துப் பார்த்த அன்னை, பெரியவரிடம், “ஒருவேளை நான் என்னுடைய சபை அருட்சகோதரிகளை உங்களுடைய வீட்டிற்கு தினந்தோறும் அனுப்பி வைத்து, அவர்களை உங்களோடு நேரத்தை செலவழிக்கச் செய்தால், நீங்கள் உங்களுடைய வீட்டில் விளக்கேற்றி வைப்பீர்களா?” என்று கேட்டார். “கட்டாயம் செய்வேன்” என்று வாக்குறுதி அளித்தார் அந்தப் பெரியவர். பின்பு அன்னை அந்தப் பெரியவரோடு சிறிதுநேரம் பேசிவிட்டு, அவரிடமிருந்து விடைபெறும்போது அவரை ஆசிர்வதித்துவிட்டுப் போனார்.
அன்னை அந்தப் பெரியவரிடமிருந்து விடைபெற்றுச் சென்ற மறுநாளிலிருந்து, தான் சொன்னதுபோன்றே தன் சபை அருட்சகோதரிகளை அவருடைய வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இதனால் அந்தப் பெரியவர் தன்னுடைய வீட்டைச் சுத்தம் செய்து, விளக்கேற்றி வைக்கத் தொடங்கினார். அது மட்டுமல்லாமல், தன்னோடு பேசுவதற்கும் நேரம் செலவழிப்பதற்கும் மனிதர்கள் இருக்கிறார்கள், தான் தனியாள் இல்லை என்பதை உணர்ந்தவராய் புதிய மனிதராய் வாழத் தொடங்கினார்.
இதற்குப் பின்பு சில மாதங்கள் கழித்து, பெரியவர் அன்னை தெரசாவிற்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் அவர், “அன்னையே! உங்களுடைய தயவால் என்னுடைய வீட்டில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்கு. அணையாமல் எரிந்துகொண்டிருக்கின்றது. என் வாழ்நாள் எல்லாம் நீங்கள் செய்த இந்த உதவியை மறக்கவே மாட்டேன்” என்று எழுதினார்.
ஆம், அன்னை தெரசா தனிமைச் சிறையில் வாடிய அந்தப் பெரியவரின் உள்ளத்தில், இல்லத்தில் விளக்கை/ தீயை ஏற்றிவைத்தார். அது அந்த மனிதர் சாகின்ற வரைக்கும் அணையாமல் எரிந்துகொண்டிருந்தது. தீ சாதாரணமானது கிடையாது. அது வாழ்வின் அடையாளம், ஆற்றலின் ஊற்று. அறியாமை என்னும் இருளை அகற்றும் அகல்விளக்கு,.
இத்தகைய சிந்தனையோடு இந்த நற்செய்தியில் ஆண்டவர் இயேசு சொல்கின்ற வார்த்தைகளை சிந்தித்துப் பார்த்தால் மிகத் தெளிவாக விளங்கும். நற்செய்தியில் இயேசு, “மண்ணுலகில் தீமூட்டவே வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்” என்கின்றார். இயேசுவின் இவ்வார்த்தைகளைப் புரிந்துகொள்வதற்கு சற்றுக் கடினமாக இருந்தாலும், இயேசு சொல்கின்ற ‘தீயை’ இறைவனோடு, அதுவும் தூய ஆவியோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இன்னும் தெளிவாக விளங்கும். பழைய ஏற்பாட்டிலும் சரி, புதிய ஏற்பாட்டிலும் சரி, நெருப்பு அல்லது தீ இறைவனோடு ஒப்பிட்டுப் பேசப்படுகின்றது. பெந்தகோஸ்தே நாளில் தூய ஆவியார் சீடர்கள்மீது நெருப்பு வடிவில் இறங்கிவந்ததும் அதுவரைக்கும் கோழைகளாக இருந்த சீடர்கள் துணிச்சலோடு ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை மக்களுக்கு எடுத்துரப்பதைக் குறித்து விவிலியத்தில் வாசிக்கின்றோம். இங்கே தீயானது ஆற்றலின் ஊற்றாகவும் வாழ்வின் அடையாளமாகவும் இருக்கின்றது.
இயேசு கிறிஸ்து இப்படிப்பட்ட தீயைதான் மண்ணுலகில் மூட்டுவதாகச் சொல்கின்றார். ஆகவே, ஆண்டவர் இயேசு மூட்டிய இந்தத் தீயை நாமும் உள்வாங்கிக் கொண்டு, அதற்கேற்ப் வாழ்ந்தோம் என்றால், நாமும் சீடர்களைப் போன்று, ஆண்டவரின் கையில் வல்லமையுள்ள கருவியாகச் செயல்பட முடியும்.
எனவே, இயேசு மூட்டிய தீயாகிய தூய ஆவியைப் பெற்றவர்களாய், வல்லமையோடு ஆண்டவருக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Comments are closed.